அமர நாயகமும், அமர்க்களமும்

+ஒரு ஆரவாரத்தோடு ஒரு நிகழ்வு நடந்து முடிந்துவிட்டால், அதனை அமர்க்களமாக நடந்த நிகழ்வு என்கின்றோம். “பையன் கல்யாணத்தை அமர்க்களமா அசத்திட்டான்யா” என்று கூறக்கேட்டுள்ளோம்.

அதென்ன அமர்க்களம்? அதன் பொருள் என்ன?

சமர் என்றால் சண்டை, அமர் என்றாலும் சண்டை போர் என்பதை குறிக்கும். போர்க்களம் என்பதில், ஆராவாரத்தோடு பேரிரைச்சலோடு வீரர்கள் சண்டை செய்து கொள்வார்.

அமர்க்களம் என்றால், போர்களத்தில் ஏற்படும் பேரோசை, ஆரவாரம் என்ற பொருள் உண்டு.

சமர் = போர்
சமர்க்களம் = போர்க்களம்

அமர் = படை, போர் இரண்டும் குறிக்கும்.

போர் தெய்வமான துர்கைக்கு அமரி என்று பெயர் உள்ளது. அமர்க்களம், என்பதும் போர்க்களத்தைக் குறிக்கும்.

அமர நாயகம்:

நாயக்கர் என்பது ஜாதிப் பெயரல்ல, படை முதலி என்பது என்பது போல படைத் தலைவன் என்பதைக் குறிக்கும் பட்டம் ஆகும். குப்தர் காலம் முதல் இந்தியத் துணைக்கண்டத்தில், பல நாடுகளில் இந்த நாயக்கர் பதவி உள்ளது. இது தொல்குடித் தலைமைப் பெயரில் இருந்து வந்தது என்பர்.

விஜயநகர காலத்தில் நாயக்கர் பட்டம் பெற்றவர்களே ஒரு பகுதியில் படை அமர்த்தி ஆட்சி செய்தவர்கள் ஆகும். இவர்களின் படை பலத்தை பெருக்க, காக்க தரப்படும் “நாயக்கத்தனம் அல்லது அமர நாயக்கம்” என்பதாகும்.

அமர் = படை, நாயக்கர் = தலைவர்  அமர நாயகம் => படைத்தலைவன்

நயன்கரம் எனும் இந்த நாயக்கதனம் பெற்றவர்களே, அரசருக்கு பிரதிநிதியாக (கர்த்தாக்கள்) ஒரு பகுதியை நாயக்கர் என்ற பட்டம் கொண்டு ஆண்டனர். இந்த நாயக்க தலைமைக்கு, அமர நாயக்கா (படை தலைவன்) என்று பெயர். இவர்கள் அரசர்கள் அல்ல, ஒரு குறிப்பிட்ட பகுதில் படைகளை நிறுத்தி ஆளும் படைத் தலைவர்கள். இவர்களுக்கென்று தனி சொத்துரிமை கிடையாது. படையை நிர்வகிக்கத் தரப்படும் பதிவிக்கான வரிவசூல் உரிமையே நாயக்கத்தனம் ஆகும்.

ஒழுங்காக நிர்வாகம் செய்யும் வரை அந்த உரிமை அவர்களை விட்டு செல்லாது. இதனை சொந்த சொத்தாகவும் மாற்ற இயலாது. எடுத்துக்காட்டாக அரசு அதிகாரிக்கு வாகனம், குடியிருப்பு தருவது போல. ஆனால், இந்த நாயக்கத் தனம் மரபு உரிமையானது. தந்தைக்கு பின் மகன் நாயக்கர் ஆகமுடியும்.

இப்படையில் இருந்தவர்களும், இவர்கள் மரபினரும் தங்களை நாயக்கர்கள் என்று அழைத்துக்கொண்டனர். தமிழில் நாயக்கர், தெலுங்கில் நாயக்குடு, நாயுடு என்று மருவியது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாயக்கர் என்பது படைத் தலைவரைக் குறித்தது. விஜயநகர வீழ்ச்சிக்கு பிறகு, தஞ்சை, மதுரை தனி அரசாகி நாயக்க மன்னர்கள் ஆகின்றனர்.

படுதல் என்பது போரில் இறப்பை குறிப்பது. அமர்க்களப்படுதல் என்பது போர்க்களத்தில் சிறப்பாக சண்டை செய்து மற்றவரை கொல்வதை அல்லது வீரநிலை அடைவதைக் குறிப்பதாக இருக்கலாம். வரலாற்றில், பேரெழுச்சியோடு இரு தரப்பும் சமர் செய்தவையே, அமர்க்களமானப் போர் எனக் கூறலாம்.

Leave a Reply