வெங்கனூர் சமுத்திரத்து அம்மன் கோவிலில் கவரை நாயக்கர் சமூகத்தினர் வழிபாடு

கவரா, கவரை வளஞ்சியர், கவறை, கவரைச் செட்டி, கவரை நாயக்கர் என்றும் வரலாற்றில் கல்வெட்டுகளில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவ வளஞ்சியர் பண்டைய தென்னக வீரவணிக மரபினருள் ஒரு பிரிவினர். இவர்களின் குலத் தொழிலாக வணிகமும், உப தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இருந்துள்ளது.

தென்னகம் மற்றும் தமிழகம் முழுவதிலும் பரந்துப்பட்டு வாழும் கவரை நாயக்கர் சமூகத்தினரில், இக்குலத்தெய்வக் கோயிலைச் சேர்ந்த பெருமளவில் ஒன்று கூடி ஒவ்வொறு வருடமும் ஆடி மாதம் முதல் நாளன்று இவ்விழாவில் கலந்துகொள்வர்.

பெரம்பலூர் மாவட்டம் வெங்கணூரில் இவ்வாண்டும் கவரை நாயக்கர் சமூகத்தினர் சமுத்திரத்து தாய் அம்மன் மற்றும் ஏழு கன்னிமார் கோயிலில் ஆடித் திருவிழா குல தெய்வ வழிபாடு செய்தனர். கவரை சமூகத்தினரின் 13 பிரிவினைச் சேர்ந்தவர்கள் தங்கள் குலத் தெய்வமான சமுத்திரத்து தாய் அம்மன் கோவிலில் இவ்வாண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆடித் திங்கள் முதல் ஞாயிறன்று இணைந்து சிறப்பாக வழிபாடு செய்தனர்.

13 வகையறாக்கள்

அல்லித்துறையார்
வீரப்ப நாயக்கர்
திருமலை நாயக்கர்
மணிய நாயக்கர்
பொம்மாச்சி நாயக்கர்
ஊட்டத்தூரார்
கழுதூரார்
வங்காடு கொண்டப்ப நாயக்கர்
பேட்டையார்
மதியாண்டார்
தொட்டியத்தார்
செங்குளத்தார்
மங்களப்பட்டியார்

அக்கோவிலில் அருள்பாலிக்கும் சமுதிரத்து அம்மன், ஏழு கன்னிமார், பாப்பாத்தி அம்மன் ஆகிய தெய்வங்களை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கலந்து கொண்டு வழிபட்டனர். வெள்ளத்தின் போது நீரில் வந்த தெய்வமாக சமுத்திரத்து அம்மன் என கருதப்படுகிறது.

வழிபாடு முடிந்ததும் அனைத்துப் பக்கதர்களுக்கு பிரசாதமும், சுவையான சைவ மற்றும் கறி விருந்து அளிக்கப்பட்டது.

Location: https://goo.gl/maps/4BunqdbEqbHUjPJD8

வெங்கனூர் ஸ்ரீ சமுத்திரத்து அம்மன் கோவில் (சமுத்ர கன்னி அம்மன்)

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் இயற்கை எழிலில் அமைந்துள்ள சமுத்திரத்து (சமுத்ர கன்னி) அம்மன் கோவிலில், சப்த கன்னியர் திருவுருவக் கற்கள், பாப்பாத்தி அம்மன் திரு உருவங்கள், மதுரை வீரன் உருவங்கள் உள்ளன. சமுத்திர அம்மன் என்பது நீரில் வந்த தெய்வம் என்பது இதனை வழிபடும் மக்களின் கருத்தாக உள்ளது.  இதனை கடல் தெய்வம் என்றும், கடலின் மூலம் செல்வம் பெறுவதால் இதனை இலட்சுமி (கடலோன் என்ற வருணனின் மகள்) எனவும் கூறுகின்றனர். இக்கோவிலில் வழிபடும் மக்களின் முன்னோர்கள் தமிழக வணிகத்திலும், கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். எனவே, வணிகக் குழுவோடு தொடர்புடைய இக்கோவிலில் அமைந்துள்ள, இந்த சமுத்திர கன்னி அம்மனின் தொன்மம், சங்க இலக்கியம் கூறும் கடல் தெய்வம் சிலப்பதிகார கால  மணிமேகலையோடு தொடர்புடையதாக இருக்கலாம். இந்தத் தெய்வம் ‘சமுத்திர மணிமேகலை’ என்றும் கூறப்படும்.

இதனை பற்றி தமிழ் இணைய கல்வி கழத்தில் உள்ள கட்டுரை பின்வருமாறு.

கடற்காவல் தெய்வம் மணிமேகலை.

சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப்பற்றித் ‘தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

இந்த மணிமேகலையைக் கதைத்தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச்சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் ‘மணிமேகலை’ என்பது பெயர். இந்த நூலினைப்பற்றித் ‘தமிழ்ப்பௌத்த நூல்கள்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். *

இங்கு ‘மணிமேகலை’ என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் ‘சமுத்திர மணிமேகலை’ என்றும் கூறப்படும். ‘முது மணிமேகலை’ என்றும் கூறுவர். இது பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு :

பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வலோகங்களுள் ‘மகாராஜிக லோகம்’ என்பது ஒன்று. இந்த உலகத்தின் குணதிசையைத் ‘திருதராட்டிரர்’ என்பவரும், குடதிசையை ‘விரூபாக்ஷர்’ என்பவரும், தென்றிசையை ‘விரூளாக்ஷர்’ என்பவரும், வடதிசையை ‘வைசிரணர்’ என்பவரும் ஆட்சி செய்துவருகின்றார்கள். இவர்களுக்குச் ‘சாதுர்மகாராஜிகர்’ என்பது பெயர். துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்வர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் நிர்வாணம் அடைகின்ற வரையில், அவருக்கு யாதொரு இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அன்றியும், பௌத்த தர்மத்தைப் பின்பற்றியொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின், அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்கே சிறுதெய்வங்களை இருக்கச்செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத் தீர்க்கும்படி அச்சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து உதவி செய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும்.

இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் தருவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப்பற்றிய வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம் :

சங்கஜாதகம் : ‘மோலினி’ என்னும் பெயருடைய காசிமாநகரத்தில், சங்கன் என்னும் அந்தணன் செல்வத்திற் சிறந்தவன். இவன் காசி நகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும், நகரத்தின் நடுவிலும், தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து, நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள், இவன், ‘குன்றத்தனை செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள் முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்’ என்று சிந்தித்துத் தேர்ந்து, மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து, ‘யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச் செவ்வனே நடத்திக் கொண்டிரு’ என்று கட்டளையிட்டு, ‘சொர்ணபூமி’ என்னும் பர்மா தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில் செருப்பணிந்து, குடைப்பிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது கந்தமானத மலையில் வீற்றிருந்த பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச் சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து, ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல் வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்திவருவதைக் கண்ட சங்கன், அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒருமரநிழலில் அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத் துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமன்றி, தன் குடையினையும் கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.

பிறகு சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல் யாத்திரை புறப்பட்டான். கப்பல் கடலில் ஏழு நாட்கள் சென்றன. ஏழு நாட்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல் பாறைமேல் மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவனது வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக்கொண்டிருந்தனர். ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது கடற்றெய்வமாகிய மணிமேகலை அங்கு வந்து சங்கன் கண்களுக்குமட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து, ‘இன்று உபவாச நாள், ஆகையால் இன்று நான் உணவு உட்கொள்ளேன்’ என்றான். சங்கன் தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக்கொண்டிருந்த வேலையாள் கருதி, ‘ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?’ என்றான். சங்கன், ‘நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்’ என்றான். ஏவலாளன், ‘அங்ஙனமாயின், அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோக தெய்வமா என்பதைக் கேளும். அன்றியும், இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்யமுடியுமா என்றும் கேளும்’ என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், ‘நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்றவேண்டுவது எனது கடமையாதலால், நான் இவ்விடம் வந்தேன். நீ இப்போது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?’ என்று கேட்க, அவன், ‘எனது காசிமாநகரம் செல்லவேண்டும்’ என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றனைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக் காசிமாநகரம் கொண்டுபோய்விட்டது.

சீயாம் தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி. பி. 1783 முதல் 1806 வரையில் அரசாண்ட சீயாம் தேசத்து அரசன், ‘முதலாவது ராமன்’ என்பவன் காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு மாறுபாடு என்னவென்றால், ‘வர்ஜூன்’ என்னும் தேவன் பெயர் ‘அர்ஜூனன்’ என்று காணப்படுவதுதான். மேற்படி கம்போடியா, சீயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும், அது கடல் தெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.

Leave a Reply