தனிக்கப்பல் வாங்கி வணிகம் செய்த தென்னக தமிழ் வணிகர்கள் – வளஞ்சியர் வணிக ஆய்வுகள்

மணிமேகலை காப்பியத்தில் தனிக் கப்பல் வாங்கி வணிகம் செய்த வணிகர் பற்றி குறிப்பு வருகிறது.

“புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும்
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து” (ம.மே)

அதாவது சோழனுக்கும், இலங்கைத் தீவின் ஒரு பகுதியாக நாக நாட்டின் இளவரசி பீலிவளை என்ற நாகக் கன்னிக்கும் மகன் பிறக்கின்றான். அவனே தொண்டைமான் இளந்திரையன். அப்போது அந்த நாட்டுக்கு வரும் கப்பலில் வந்து வணிகம் செய்த கம்பளச் செட்டி எனும் வணிகரிடம் தான் பெற்ற மகளை கொடுத்து அனுப்புகிறாள் பீலிவளை. அந்த வணிகனும் குழந்தையை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு, தனிக் கப்பல் ஏறி பூம்புகார் வருகின்றான். ஆனால், கப்பல் புயலில் சிக்குண்டு அழிகிறது. குழந்தையும் தனது கப்பல் மாலுமிகள் அனைவரயும் கடலில் பறிகொடுத்துவிட்டு, சோழனிடம் வந்து அழுகிறான் வணிகன். பின்பு அக்குழந்தை மீண்டும் ஆதொண்டை கொடிகள் சுற்றப்பட்டு உயிரோடு கிடைக்கின்றது. ஆதொண்டை கொடிகளோடு கிடைக்கபெற்றதால் தொண்டைமான் எனப்பட்டான் என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேற்கண்ட காட்சி மூலம், வணிகர்கள் தங்களுக்கென்று சொந்த கப்பல் வாங்கி வணிகம் செய்தனர். மன்னர்களுடன் நெருங்கிய உறவில் இருந்தனர். கப்பல் மூலம் கடலோடி வணிகம் செய்தல் அன்று, முந்நீர் வழக்கம் எனப்பட்டது. கரிகால் சோழனின் முன்னோர்கள் முந்நீர் வழக்கம் கொண்டவர்கள் என்று இலக்கியங்கள் கூறுகின்றது. வெளிநாட்டு குறிப்புகளும், சோழநாட்டின் உள்நாட்டை ஆண்டது ஒரு மரபு என்றும், கடற்கரை துறைமுகப்பட்டினங்களை ஆண்டது மற்றொரு சோழ மரபு என்றும் கூறுகின்றன.

மேலும், சோழனுக்கும் பீலிவளைக்கும் பிறந்த மகனே தொண்டைமான் இளந்திரையன் என அறிஞர்கள் கூறுகின்றனர். இவன், சோழர், பல்லவ, கடல் சார் நாக மரபில் தோன்றி கடல் வணிகம் செய்து விளங்கினான் என்றும், இவன் ராஜ்ஜியம் ஏறுவதில் வணிகர்களின் பங்கு மகத்தானது என்றும் கூறப்படுகிறது. பல்லவர்களும் கடல் வணிகர்களும் இணைந்து பல்லவர்களின் ஏற்றுமதி பொருளாதரத்தை வளர்த்தனர், இதனாலே, பல்லவர் காசுகளில் கப்பல் இடம்பெறுகிறது. பாணர் தங்கள் கல்வெட்டில் பல்லவர்களை “திரிசமுத்திராதிபதி” எனக் குறிப்பிடுகின்றனர். திரையன் என்ற பெயரும் கடலோடு ஒற்றுப்போகிறது.

அரசனாகக் தகுதியான சொந்த மகனை நம்பி எவ்வாறு கம்பளச் செட்டியிடம் கொடுக்கப்பட்டது, என்பதற்கு விடை பிற்கால சோழ வரலாற்றில் ஐநூற்றுவ வளஞ்சியர் வணிகர் குழு சோழ அரசின் பிரதிநியாத, தூதராக (Ambassador) பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வந்துள்ளன. எனவே பண்டையக் காலம் தொட்டே வணிகர்கள், சோழர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்துள்ளனர்.

கம்பளச் செட்டி என்ன வணிகம் செய்திருப்பார். ஏன் கம்பளச் செட்டி என அறியப்படுகிறார்? இலங்கையைச் சேர்ந்த கம்பளை என்ற இடத்தில இருந்து செயல்பட்டிருக்கலாம், அல்லது தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியான கம்பளை என்ற பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். 

Leave a Reply