தமிழக நாயக்க மன்னர்களும், வளஞ்சியரும் – தமிழக நாயக்க மன்னர்களின் பூர்வீகத் தொழில் என்ன?

தமிழக நாயக்க மன்னர்களின் பூர்வீகத் தொழில் வணிகம் ஆகும்.

செஞ்சி நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள் தாங்கள் பயன்படுத்தும் நாயக்கர், நாயக்கடு, நாயுடு என்று பட்டம் ஏற்பதற்கு முன்பு வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்த வளஞ்சிய செட்டியார் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்று பலருக்கு தெரியாது. இவர்களில் அண்ணன் அரசு பணியில் இருந்தால் நாயக்கர் என்று பட்டம் இருக்கும், தம்பி வணிகம் செய்தால் செட்டியார் என்ற பட்டம் ஏற்று இருப்பார். வளஞ்சியர்கள் என்போர், விவசாயத்தையும், வணிகத்தையும் ஏற்று நடத்தும் குழுவாக இருந்துள்ளது. 

மதுரை நாயக்கர், காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டு இடைக்கால வணிகக் குழுவான ஐநூற்றுவ வளஞ்சியரின் தலைமையிடமான ஐம்பொழில் நகரத்து தலைவன் என்று போற்றப்படுகிறார்.

தஞ்சை நாயக்கர்கள், பழைய வட ஆற்காடு நெடுங்குன்றத்தை பிறப்பிடமாகக் கொண்ட கவரை வளஞ்சியர் என்றும்,

செஞ்சி நாயக்கர்கள், காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வணிகப்புற (வணிக நகரம்) தலைவனான வளஞ்சிய செட்டி (பலிஜா செட்டி, செட்டி பலிஜா) என்றும் கடலூரில் இருந்த, கப்பல் வணிக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் போற்றப்படுகின்றனர்.

மூவருமே, வட தமிழக வளஞ்சிய வணிகக் குடியின் பின்புலம் உடையவர்கள். தமிழ் தெலுங்கு, கன்னடம் என்ற பல் மொழி பேசும் வணிகர்கள். செட்டி என்பது தமிழில் வணிகத்தில் சிறந்து விளங்கியவருக்கு வழங்கப்பட்ட எட்டி, (சிலர் பிராகிருத சிரேஷ்டி) என்ற பட்டதில் இருந்து தோன்றிய பெயர் என்பர். இடைக்காலத்தில் சாளுக்கியர் முதல், பாண்டியர் சோழர் வரை பல அரசுகளுடன் ஆதரவு பெற்று பல நூற்றாண்டுகள் வணிகம் செய்தனர் இக்குழுவினர். பல அரசுகளுக்கு பண உதவி, சோழர் உட்பட பல அரசுகளுக்கு படையுதவி அளித்து நன் மதிப்பை பெற்றனர். சிலர் இவர்களை அரச குடிகளின் இருந்து கிளைத்தவர்கள் என்கின்றனர். இருப்பினும் மேலும் ஆய்வுகள் தேவை.

தொல்காப்பியம் காலம் தொட்டே பாதுகாப்பு படைவைத்து வணிகம் செய்யும் முறையைத் தொடர்ந்து, இடைக்காலத்தில் இவர்களும் வணிகத்தோடு படையும் நடத்தியதால், சோழர் ஆட்சியில் பல இடங்களில் அரசுக்கு பதிலாக வணிக வரி வசூல் செய்தனர். தொல்காப்பியம் குறிப்பிடும் வணிகர் போலவே இவர்களும் பாதுகாப்பிற்காக எப்போதும் இடுப்பில் குறுவாள் வைத்திருப்பர். (படத்தில் தஞ்சை நாயக்கரும் இடுப்பில் குறுவாளும்) மேலும் இடுப்பில் குருவாளோடு, கையில் கொலை வாள் ஏந்தும் ஆயுத தாரியான இவர்கள், எறிவீர பட்டணங்களில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி அநியாய வரிவசூல் செய்யக்கூடாது என்ற வீரவணிக (வீர வளஞ்சிய) தர்மத்தை பின்பற்றுபவர்கள் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

அதையே விஜயநகர காலத்திலும் நாயக்கத்தனம் பெற்று அமர நாயக்கர்களாக விஜயநகர பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆண்டனர்.

இவர்களுக்கு முன்பே, விஜயநகரத்தார், தமிழகத்தைக் கைப்பற்றினாலும் தொடர்ந்து குழப்பநிலை உருவானது. இவர்கள் பொறுப்பேற்ற பிறகே, நிர்வாகத்தை மேம்படுத்தி, அமைதியை நிலைநாட்டியதால், தென்னகத்தில் விஜயநகர ஆட்சி நிலைப்பெற்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதன் முக்கிய காரணம் இவர்கள் தமிழகத்தை நன்கு அறிந்த குழுவினராக இருந்ததால் என்பதே பலரின் வாதம்.

Leave a Reply