தமிழ் நாட்டு வாணிகர்

தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பிரயாணஞ் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள். நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள்: ஆகையால் கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது. கடலில் நெடுந்தூரம் கப்பலில் போகவும் வரவும் பழங்காலத்திலேயே பழகினார்கள். கரிகால் சோழனுடைய முன்னோனான ஒரு சோழன் கடற்காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான்.

‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!’

என்று புறநானூற்றுச் செய்யுள் (66) கூறுகிறது. பழய காலத்துப் பாண்டியன் ஒருவன் தன் அடி, அலம்பக் கடலில் நின்றான் என்றும், கடலில் தன் வேலை எறிந்து அதை அடக்கினான் என்றும் கூறப்படுகிறான். இதன் கருத்து என்னவென்றால், அவன் கடலை அடக்கிக் கடலில் நாவாய் செலுத்திக் கடற்பிரயாண்த்தை எளிதாக்கினான் என்பது. இவற்றிலிருந்து கடலில் பிரயாணம் செய்வதைத் தமிழர் ஆதி காலத்திலிருந்து நடத்த்தினார்கள் என்பது தெரிகின்றது. கடலில் கப்பலோட்டுவது அக்காலத் தமிழருக்குக் கைவந்த செயலாயிற்று. அவர்கள் கடல் கடந்து போய் வாணிகம் செய்தார்கள். கடலில் சென்று வாணிகஞ் செய்தது போலவே தரை வழியாகவும் பல நாடுகளுக்குப் போய் வாணிகம் செய் தார்கள். தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் தரை வழியாக வட இந்திய நகரங்களுக்கும் போய் வாணிகஞ் செய்தார்கள். பெரிய வாணிகம் செய்தவர்களுக்குப் பெருங்குடி வாணிகர் என்பது பெயர். அயல் நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் சென்றவர் ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். வணிகக் கூட்டத்துக்கு வணிகச்சாத்து என்பது பெயர்.

தரை வாணிகம்

அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகஞ் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள், வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் சென்றார்கள். அவர்கள் போகிற வழிகளில், மனித வாசம் இல்லாத பாலை நிலங்களில் வழிபறிக் கொளைக்காரர் வந்து கொள்ளையடித்தார்கள். அவர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தர் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். தமிழ் நாட்டில் மட்டும் அன்று; இந்தியா தேசம் முழுவதுமே அக்காலத்தில் வழிப்பறிக் கொள்ளை செய்த வேடர்கள் இருந்தார்கள். ஆகையினாலே வாணிகச் சாத்தர் அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யப் போகும்போது கூட்டமாகச் சேர்ந்து போனதுமல்லாமல் தங்களோடு படை வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். வாணிகச் சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன, மருதன் இளநாகனார், பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைக் கூறுகிறார்,

‘மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில்
செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையர்.’

(அகம், 245; 5-7)
கடியலூர் உருத்திரங் கண்ணனாரும், வழிப்பறிக் கொள்ளயிட்ட வில் வேடரைக் கூறுகிறார்.
‘சாத்தெறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்.’

(அகம், 167: 7-9)
பலாப்பழம் அளவாகக் கட்டின மிரியல் (மிளகு) பாட்டைகளைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்தர் தங்களுடைய வில் வீரர்களோடு சென்றனர். ஆங்காங்கே வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடமிருந்து சுங்கம் வாங்கினார்கள். இதைக் கடியலூர் உருத்திரக்கண்ணனார் கூறுகிறார்.

‘சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணகன் எறுழ்த்தோள்
கடம்பமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவு நிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப் பொறைதாங்கிய வடுவாழ் நோன் புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு’

(பெரும்பாண், 73-82)
வாணிகச்சாத்துடன் பாலை நிலத்து மறவர் செய்த போரை மாங்குடி மருதனார் கூறுகிறார்.

‘களரி பரந்த கல்நெடு மருங்கில்
விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்
மைபடு திண்டோள் மலிர ஆட்டிப்
பொறைமலி கழுதை நெடு நிரை தழீஇய
திருத்துவான் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பு’

(அகம், 89; 9-14)
வேறு நாடுகளுடன் வாணிகம் செய்த வாணிகச் சாத்துக்கு அக்காலத்தில் அப்படிப்பட்ட துன்பங்கள் இருந்தன. அவர்களுடைய பொருளுக்கும் உயிருக்கும் ஆபத்து இருந்தது. அந்த ஆபத்துக்களையும் கருதாமல் அவர்கள் வாணிகம் செய்தார்கள். சாத்துக்களின் தலைவனான வாணிகனுக்கு மாசாத்துவான் என்று பெயர் வழங்கிற்று. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாசாத்துவர்களில் ஒருவன் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவானும் ஒருவன். அவன் சோழ அரசனுக்கு அடுத்த நிலையில் பெருங்குடி மக்களில் முதல் குடிமகனாக இருந்தான், அவனைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.

‘பெரு நிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வரு நிதி பிறர்க் காற்றும் மாசாத்துவா னென்பான்
இரு நிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்.’

(சிலம்பு, மங்கல வாழ்த்து)
கடல் வாணிகம்

கடல் வாணிகத்தையும் அக்காலத் தமிழர் வளர்த்தார்கள். மரக்கலங்களாகிய நாவாய்களில் உள் நாட்டுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு போய் அயல் நாடுகளில் விற்று, அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்தார்கள், தங்கள் நாவாய்களை அவர்கள் கடலில் கரையோரமாகச் செலுத்திக் கொண்டுபோய் கரையோரமாக இருந்த ஊர்களில் தங்கிப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்தார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்குக் கிழக்கே வெகு தூரத்தில், ஆயிரம் மைலுக்கப்பால் இருந்த சாவகம் (கிழக் கிந்தியத் தீவுகள்) காழகம் (பர்மா) கடாரம் முதலான கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றபோது நடுக்கடலில் நாவாய் ஓடடிச் சென்றார்கள். தொல்காப்பியர் காலத்துக்கு கி.மு. 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழர் கடல்வாணிகம் செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத்துத் தமிழர் , கடலில் பிரயாணஞ் செய்யும்போது தங்களுடன் மகளிரை அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்கள். தொல்காப்பியர் தம்முடைய இலக்கணத்திலும் அவ்வழக்கத்தைக் கூறியுள்ளார்.

‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை.’

என்று அவர் பொருளதிகாரம், அகத்திணை இயலில் கூறியுள்ளார். (முந்நீர்-கடல்; வழக்கம் வழங்குவது, போவது: மகடூ-மகளிர் ) மகளிர் கடலில் பிரயாணம் செய்யக் கூடாது என்னும் கொள்கை நெடுங்காலமாகத் தமிழரிடத்தில் இருந்தது. அண்மைக் காலம்வரையில் இருந்த அந்த வழக்கம் சமீப காலத்தில்தான் மாறிப் போயிற்று. ஆகவே ‘சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் மகளிர் கடலில் கப்பற்பிரயாணம் செய்யவில்லை.

பழங்காலத் தமிழர் வருணன் என்னும் கடல் தெய் வத்தை வழிபட்டார்கள். இதையும் தொல்காப்பியரே கூறுகிறார்.

‘வருணன் மேய பெருமணல் உலகம்’

நெய்தல் நிலம் எனச் சொல்லப்படும் என்று அவர் கூறியுள்ளார். (பொருளாதிகாரம் அகத்தினையில்). பழங் காலத்து பாண்டியன் ஒருவன் முந்நீர்த் திருவிழாவைக் கடல் தெய்வத்துக்குச் செய்தான். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியனுக்கு முன்பு இருந்த அந்தப் பாண்டியன் நெடியோன் என்று கூறப்படுகிறான், முது குடுமிப் பெருவழுதியை வாழ்த்திய நெட்டிமையார் அவனை இவ்வாறு வாழ்த்துகிறார்.

‘எங்கோ வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.’

(புறம், 9; 8-11)
பழமையாக நடந்து வந்த வருண வழிபாடு கி.மு. முதல் நூற்முண்டிலேயே மறைந்துவிட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பௌத்த மதம் தமிழகத்துக்கு வந்தது. அந்த மதம் கி.மு. இரண் டாம், முதலாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பரவி செல்வாக்குப் பெற்றது. அப்போது அம்மதத்தின் சிறு தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் வருணனுக்குப் பதிலாக வணங்கப்பட்டது. கடல் தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் கடலில் பிரயாணம் செய்கிற நல்லவருக்குக் கடலில் துன்பம் நேரிட்டால் அது அவர்களுக்கு உதவிசெய்து காப்பாற்றுகிறது என்னும் நம்பிக்கை பௌத்த மதத்தில் இருந்தது. பௌத்தம் தமிழகத்தில் பரவியபோது, தமிழ்நாட்டு வணிகர் மணிமேகலா தெய்வத்தையும் கடல் தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபட்டார்கள். இதைச் சிலப்பதிகாரம் மணிமேகலை என்னுங் காவியங்களிலிருந்து அறிகிறோம். நாவாயில் கடல் வாணிகம் செய்தவர் நாவிகர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் என்று பெயர் பெற்றனர். மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. (நாவாய் – மரக்கலம்.) நாவாய்களில் வாணிகம் செய்தவன் நாவிகன். நாவிகள் என்பது நாய்கன் என்று மருவிற்று. சிலப்பதிகாரக் காவியத் தலைவியாகிய கண்ணகி காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஒரு மாநாய்கனுடைய மகள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த அந்த மாநாய்கனையும் அவள் மகளான கண்ணகியையும் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.

‘நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
போக நீள் புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்.

(சிலம்பு, மங்கல வாழ்த்து )
கரையோர வாணிகம்

கொற்கை, தொண்டி, பூம்புகார் , சோபட்டினம் முதலான தமிழ் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப் பட்டினம், தம்ரலிப்தி (வங்காள தேசத் துறைமுகப் பட்டி னம்) முதலான பட்டினங்களுக்குச் சென்றனர். பிறகு கங்கை யாறு கடலில் – கலக்கிற புகர் முகத்தின் ஊடே கங்கை யாற்றில் நுழைந்து கங்கைக் கரையில் இருந்த பாடலிபுரம், காசி (வாரணாசி) முதலான ஊர்களில் வாணிகஞ் செய்து திரும்பினார்கள். ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ , என்று நற்றினை (189:5) கூறுகிறது. கங்கைக் கரையில் பாடலிபுரத்தில் தமிழர் வாணிகஞ் செய்த போது, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டையரசாண்ட நந்த அரசர், தங்களுடைய தலைநகரமான பாடலிபுரத்தில் கங்கை யாற்றின் கீழே பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந் ததைப் பற்றி அறிந்தனர். தமிழக வாணிகரின் மூலமாக நந்த அரசரின் செல்வப் புதையலைத் தமிழ் நாட்டவர் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள், மாமூலனார் என்னும் சங்கப் புலவர் தம்முடைய செய்யுளில் நந்தருடைய நிதியைக் கூறுகிறார்.

‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ ‘

(அகம், 265: 4-6)
நந்த அரசரின் செல்வப் புதையலைப் பற்றிய இந்தச் செய்தியை இந்தச் செய்யுளில் இருந்து அறிகிறோம். வடநாட்டுப் பழைய நூல்களில் இந்தச் செய்தி கூறப்படவில்லை.

தமிழ் வாணிகர் கலிங்க நாட்டிலே போய் வாணிகஞ் செய்தார்கள். அந்த வாணிகச் சாத்து கி.மு. மூன்ரும் நூற்றாண்டிலிருந்து கி.மு. 150 வரையில் நூற்றைம்பது ஆண்டுகள் அங்குத் தங்கி வாணிகம் செய்தது. அவர்களுடைய வாணிகம் நாளுக்கு நான் பெருகிச் செல்வாக்கும் பலமும் அடைந்தது. அக்காலத்தில் கலிங்க தேசத்தை யரசாண்ட காரவேலன் என்னும் அரசன் தமிழ வாணிகரால் தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும் என்று அஞ்சி அந்த வாணிகச் சாத்தை அழித்து விட்டான். அந்தச் செய்தியை அவ்வரசன் எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக் கல்வெட்டெழுத்துச் சாசனத்திலிருந்து அறிகிறோம். கலிங்க தேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் பொருள்களைக் கலிங்க நாட்டுக்கும் கொண்டு போய் விற்றார்கள். கலிங்க நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருள்: பருத்தித் துணி, பெருவாரியாகக் கலிங்கத் துணி தமிழ் நாட்டில் இறக்குமதியாயிற்று. கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத் துணி என்று சிறப்பாகப் பெயர் பெற்றது. பிறகு காலப்போக்கில் கலிங்கம் என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப் பெயராக வழங்கப் பட்டது. சங்க நூல்களில் துணிக்குப் பெயராகக் கலிங்கம் என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கலிங்க நாட்டிலிருந்து அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் சந்தனக் கல், ‘வடவர் தந்த வான் கேழ் வட்டம்.’

ஆந்திர நாட்டிலே பேர் போன அமராவதி நகரத்திலே (தான்ய கடகம்) சங்க காலத்திலே தமிழ் வாணிகர் சென்று வாணிகஞ் செய்தனர். அங்கிருந்த அமராவதி பௌத்தக் தூபி கி.மு. 200 இல் தொடங்கி கி.பி. 200 வரையில் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பலர் பல வகையில் உதவி செய்தார்கள். அப்போது அங்கு வாணிகஞ் செய்து கொண்டிருந்த தமிழ் வாணிகரும் அக் கட்டிடம் கட்டுவதற்கு உதவி செய்தனர். தமிள (தமிழ்) கண்ணன் என்னும் வாணிகனும் அவனுடைய தம்பியாகிய இளங்கண்ணனும் அவர்களுடைய தங்கையாகிய நாகையும் அமராவதி தூபி கட்டுவதற்குக் கைங்கரியம் செய்துள்ளனர். இந்தச் செய்தி அங்கிருந்து கிடைத்த ஒரு கல் சாசனத்தினால் தெரிகிறது. 3 அடி உயரமும் 2 அடி 8 அங்குல அகலமும் உள்ள ஒரு கல்லில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட ஒரு சாசனம் இதைக் கூறுகிறது. இப்போது இந்தக் கல் இங்கிலாந்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டு அங்கு இலண்டன் மாநகரத்துக் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனாலும் கலிங்க நாட்டில் தமிழர் வாணிகஞ் செய்த செய்தி அறியப்படுகிறது.[1] தமிழ வாணிகச் சாத்து (வாணிகக் குழு) கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அக்காலத்துத் தலை நகரமாக இருந்த அநுராதபுரத்தில் வாணிகஞ் செய்ததை அங்குள்ள ஒரு பிராமி எழுத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. வாணிகச் சாத்தினுடைய மாளிகை இற்றைக்கு 22,00 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்தது. பிற்காலத்தில் மறைந்து போன அந்த மாளிகை பல நூற்றாண்டுகளாக மண் மூடி மறைந்து கிடந்தது. அண்மைக் காலத்தில், மழை நீரினால் அந்த மண்மேடு கரைந்து அங்குக் கல்லில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் வெளிப்பட்டன. கற்பாறையோடு சார்ந்திருந்த அந்த மாளிகையில் அக்காலத்தில் தமிழ நாவாய்த் தலைவன் அமர்ந்திருந்த இடத்திலும் மற்ற வாணிகத் தலைவர்கள் அமர்ந்திருந்த இடங்களிலும், அவர்களுடைய பெயர்கள் கல்லில் பொறிக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே தமிழ வாணிகர் அநுராதபுரத்தில் பெரிய வாணிக நிலையம் அமைத்திருந்தது தெரிகிறது.[2]

கி.மு. இரண்டு, ஒன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் வேறு சில தமிழ வாணிகர் இருந்ததை அக்காலத்துப் பிராமிய எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன.[3]

தமிழ் நாட்டு வாணிகர் இலங்கைக்குச் சென்று வாணி கஞ் செய்ததைச் சங்க இலக்கியங்கள் கூறவில்லை. தமிழ வாணிகர் இருவர் இலங்கையைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அரசாண்டதை இலங்கை நூல்கள் கூறுகின்றன. சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழ வணிகர் அக்காலத்தில் இலங்கையை அரசாண்ட சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்று புத்த சகாப்தம் 306 முதல் 328வரையில் (கி.மு. 177 முதல் 155 வரையில்) இருபத்திரண்டு ஆண்டு நீதியாக அரசாண்டார்கள் என்று மகாவம்சமும் (XXI:10-11) தீபவம்சமும் (XVIII:47f ) கூறுகின்றன. இவ்விருவரும் அஸ்ஸநாவிகர் , (அஸ்ஸம் – அஸ்வம் = குதிரை ) குதிரை வாணிகர் என்று கூறப்பட்டுள்ளனர்.

நடுக்கடல் வாணிகம்

தமிழகத்துக்குக் கிழக்கே வெரு தூரத்தில் வங்காளக் குடாக் கடலுக்கு அப்பால் பசிபிக் மகா சமுத்திரத்தில் பெருந்திவுகளின் கூட்டம் இருக்கிறது. அந்தத் தீவுகளுக்கு இக்காலத்தில் கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் இந்தோனேஷியத் தீவுகள் என்றும் பெயர். சங்க காலத்திலே இந்தத் தீவுகளைத் தமிழர், சாவகம் என்றும் சாவக நாடு என்றும் கூறினார்கள். சாவக நாட்டோடு அக்காலத் தமிழர் கடல் வழியாக வாணிகஞ் செய்தனர். தமிழ் நாட்டிலிருந்து ஆயிரம் மைலுக்கப்பால் உள்ள சாவகத் தீவுகளுக்கு வங்காளக் குடாக் கடலைக் கடந்து நடுக்கடலிலே கப்பலோட்டிச் சென்ரர்கள்,

சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) என்பது பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான தீவுகளின் கூட்டமாகும். இத்தீவுகளில் முக்கியமானது சாவா தீவு (ஜாவா). இதை வட நாட்டார் யுவதீயம் என்று கூறினார்கள். சீன நாட்டார் இதை யெ தீயவோ (Ye Tiao) என்று பெயர் கூறினார்கள். இது செழிப்பும் நிலவளமும் நீர்வளமும் உள்ளது. சாவா தீவுக்கு அடுத்துசுமாத்ரா, கலிமந்தன் (போர்னியோ), ஸுலவெலி (செலிபீஸ், மின்டனாயோ, ஹல்மஹீரா முதலான தீவுகளும் கணக்கற்ற சிறு சிறு தீவுகளும் சேர்ந்ததே தமிழர் கூறிய சாவக நாடு. சாவக நாட்டுக்கு அப்பால் வடக்கே சீன தேசம் இருந்தது. சீன தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடை நடுவிலே கடலில் இருந்த சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) அக்காலத்தில் உலகப் புகழ் பெற்ற வாணிக மத்திய இடமாக இருந்தது. அக்காலத்தில் உலகத்திலே வேறு எங்கும் கிடைக்காத, வாசனைச் சரக்குகள் அங்கே தான் கிடைத்தன. ஆகவே சாவகத்தின் வாசனைப் பொருள்களை வாங்குவதற்குச் சீனர் தங்கள் தேசத்துப் பொருள்கள் எடுத்துக் கொண்டு கப்பல்களில் அங்கே வந்தார்கள். அக் காலத்தில் சீன தேசத்தின் முக்கியமான பொருள் பட்டு. பட்டுத்துணி அக்காலத்தில் சீன நாட்டில் மட்டும் உண்டாயிற்று. சீனர் பட்டுத்துணிகளையும் பீங்கான் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு சாவகத்துக்கு வந்தார்கள்.

தமிழ் நாட்டிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் வாணிகர் கப்பல்களில் சாவகம் சென்றார்கள். சாவக நாட்டில், சாவா தீவின் மேற்குப் பகுதியான சுந்தா தீவிலும் அதற்கு அடுத்த சுமாத்ரா தீவிலும் மிளகு உற்பத்தியாயிற்று. ஆனால் இந்த மிளகு, தமிழகத்துச் சேர நாட்டில் உண்டான மிளகு போன்று அவ்வளவு சிறந்ததல்ல. ஆனாலும் சாவகத்து மிளகு தமிழகத்தின் கிழக்குக் கரை நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டது. ஏனென்றால், பேர் போன சேர நாட்டு மிளகை, யவனர் கப்பலில் ஏற்றிக் கொண்டுபோய் உரோமபுரி முதலான மேல் நாடுகளில் விற்றர்கள். ஆகவே சேர நாட்டு மிளகு போதுமான அளவு தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை. பற்றாக்குறையை ஈடு செய்யச் சாவக நாட்டு மிளகு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

சுமாத்ரா, ஜாவா தீவுகளிலும், தைமர் (Timor) தீவிலும் சந்தன மரங்கள் விளைந்தன. அந்தச் சந்தனக் கட்டைகள் வெண்ணிறமாகவும், மணமுள்ளவையாகவும் இருந்தன. தமிழ்நாட்டிலே பொதிகை மலை, சைய மலை (மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சந்தன மரம் விளைந்தது. ஆனால் இந்தச் சந்தன மரத்தைவிட, சாவக நாட்டுச் சந்தன மரக்கட்டைகள் மணத்திலும் தரத்திலும் உயர்ந்தவை. அந்தச் சந்தனமரம் மருத்துவத்துக்குப் பயன்பட்டபடியால் சீனர் அதை வாங்கிக் கொண்டு போனார்கள். இலவங்கம் (கிராம்பு) ஒருவகை பரத்தின் பூ. இது, ஒஹல்மஹீரா தீவுக்கு மேற்கே கடலில் உள்ள ஐந்து சிறிய தீவுகளில் விளைந்தது. பாண்ட கடலில் ஸெராங் தீவுக்குத் தெற்கேயுள்ள ஆறு சிறு தீவுகளிலே சாதிக்காய் விளைந்தது. கமாத்ரா தீவில் கற்பூர வகைகள் உண்டாயின. கற்பூரம் என்பது ஒரு வகையான மரத்தின் பிசின். கற்பூரத்தில் ஒரு வகை பளிதம் என்பது. பளிதத்தை அக்காலத்துத் தமிழர் வெற்றிலையோடு சேர்த்து அருந்தினார்கள். வெற்றிலையோடு அருத்திய கற்பூரம் பச்சைக் கற்பூரம் என்று பெயர் கூறப்பட்டது. அதற்குப் பளிதம் என்றும் பெயர் உண்டு. பௌத்த பிக்குகளும் மற்றவர்களும் உணவு உண்ட பிறகு தாம்பூலத்துடன் பளிதம் சேர்த்து அருந்தினார்கள் என்பதை மணிமேகலை நூலினால் அறிகிருேம்.

‘போனகம் எய்திப் பொழுதினிற் கொண்டபின்
பாசிலைத் தினரயலும் பளிதமும் படைத்து’

(மணி, 28: 242-243)
பளிதத்தில் (கற்பூரத்தில்) பலவகையுண்டு. “பல பளிதம்” என்று 10 ஆம் பரிபாடல் (அடி. 82 ) கூறுகிறது. ஒரு வகைப் பளிதத்தைச் சந்தனத்துடன் வந்து உடம்பில் பூசினார்கள். கடல்களும் தீவுகளும் கலந்த சாவக நாட்டிலே பவழம் (துகிர்) உண்டாயிற்று. பவழம் (பவளம் – துகிர்) என்பது பவழப் பூச்சிகளால் கடலில் உண்டாகும் பவழப் புற்று. கடலில் பவழப் பூச்சியால் உண்டாகும் பவழம் அக்காலத்தில் சாவக நாட்டிலிருந்து கிடைத்தது (மத்தியத் தரைக் கடலில் உண்டான பவழத்தை யவனர் கொண்டுவந்து விற்றனர்),

தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து போய் அங்கு உண்டான வாசப் பொருள்களையும் பவழத்தையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத்துகிலையும் கொண்டு வந்து பழந் தமிழ் நாட்டில் விற்றார்கள்.

அக்காலத்தில் சீனர் தமிழ் நாட்டுக்கு வரவில்லை. அவர்கள் சாவகத்தோடு நின்று விட்டார்கள். அவர்கள் சாவகத்துக்குக் கொண்டுவந்த பட்டுக்கள், அங்குச் சென்ற தமிழக வாணிகர் வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்றார்கள். தமிழர் பட்டுத் துணியை ‘ நூலாக்கலிங்கம்’ என்று கூறியதைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

சாவக நாட்டிலிருந்து கிடைத்த வாசப் பொருள்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாசப் பொருள்களை விற்றவர் வாசவர் என்று பெயர் கூறப்பட்டனர். வாசப் பொருள்கள் ஐந்து என்றும் அவை பஞ்ச வாசம் என்றும் கூறப்பட்டன. பஞ்ச வாசம்,

‘ தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்
கற்பூரம் சாதியோ டைந்து.’

என இவை.

தமிழ் நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற கப்பல்கள் முதலில் இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த (இப்போதைய யாழ்ப்பாணம்) மணிபல்லவம் என்னும் சம்புகொல பட்டினத்துக்குச் சென்று தங்கின. இது கப்பல்கள் தங்குவதற்கு நல்ல துறைமுகமாக இருந்தது. ஆனால், இங்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெறவில்லை. மணிபல்லவம் (சம்புகொல பட்டினம்) அக்காலத்தில் மனிதர் வாழாத இடமாக இருந்தது; அங்குச் சென்று தங்கின கப்பல்கள் அங்கிருந்து கடற்பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே நெடுந்தூரத்திலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளான சாவக நாட்டுக்குச் சென்றன. இடைவழியில் நாகர்மலைத் தீவுகள் இருந்தன. நாகர்மலைத் தீவுகள் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில்) மாநக்கவரம் என்று பெயர் பெற்றிருந்தன. இக்காலத்தில் இத்தீவுகள் நக்கவாரி (நிக்கோபர்) தீவுகள் என்று கூறப்படுகின்றன. அக்காலத்தில் அத்தீவுகளில் நாகர் இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வசித்திருந்தார்கள், அவர்கள் ஆடையில்லாமல் மிருகங்களைப் போல வாழ்ந்தபடியால் நக்கசாரணர் என்று கூறப்பட்டனர். நாகர்மலைத் தீவுகளில் கப்பற் பிரயாணிகள் சென்றால், அவர்களை நக்கசாரணர் கொன்று விடுவர். அவர்கள் மனிதரைக் கொன்று தின்றதாகவும் கூறப்படுகின்றனர். ஆகையால் அந்தப் பக்கமாகச் செல்லுகிற கப்பல்கள் அத்தீவுக்குப் போவதில்லை.

சாதுவன் என்னும் வாணிகன் நாகர் மலைத் தீவில் சென்று உயிரிழக்காமல் திரும்பி வந்ததை மணிமேகலை காவியம் கூறு கிறது. சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத் திலிருந்து சாவக நாட்டுக்குப் போய் வாணிகஞ் செய்வ தற்காகக் கப்பலில் புறப்பட்டுச் சென்றான். கப்பல் நாகர் மலைத் தீவுக்கருகில் சென்றபோது புயற் காற்றடித்துக் கடலில் மூழ்கிவிட்டது. மாலுமிகள் கடலில் முழுகிப் போனார்கள், சாதுவன் மரக்கட்டையொன்றைப் பற்றிக்கொண்டு அருகிலிருந்த நாகர்மலைத் தீவுக்கு நீந்தி நல்லகாலமாகக் கரையை யடைந்தான். ஆனால், இளைப்புங் களைப்பும் அடைந்து சோர்த்திருந்த அவன் கடற்கரை மணலிலேயே உறங்கி விட்டான். அயலான் ஒருவன் உறங்குவதைக் கண்ட நக்க சாரணர் சிலர் வந்து அவனைக் கொல்லத் தொடங்கினார்கள். விழித்துக் கொண்ட சாதுவன், அவர்களுடைய மொழியை அறிந்தவனாகையால், தன்னைக் கொல்ல வேண்டாமென்றும் கப்பல் முழுகிப் போனதனால்தான் அவ்விடம் வந்ததாகவும் கூறினான். தங்களுடைய மொழியில் பேசினாடியால் அவர்கள் அவனைக் கொல்லாமல் தங்களுடைய தலைவனிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். சாதுவன் சில காலம் நக்கசாரணரோடு தங்கியிருந்தான். பிறகு சந்திரத்தன் என்னும் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகன், சாவக நாட்டுக்குப்போய் வாணிகஞ்செய்துவிட்டுத் தன்னுடைய கப்பலில் திரும்பி வருகிறவன் நாகர் மலைத் தீவின் பக்கமாக வந்தபோது, நக்கசாரணர் அவனுடைய கப்பலைத் தங்கள் தீவுக்கு அழைத்து அவனுடைய கப்பலில் சாதுவனை ஏற்றிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அனுப்பினார்கள். இந்தச் செய்தியை மணிமேகலை காவியம் (ஆதிரை பிச்சையிட்ட காதை) கூறுகிறது.

பாண்டிய நாட்டு வாணிகரும் சாவகத் தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வாணிகஞ் செய்தனர். பாண்டி நாட்டிலிருத்த தமிழர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்து திரும்பியதையும் மணிமேகலை காவியம் கூறுகிறது.

‘மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின்
ஊனுயிர் மடிந்தது உரவோய் என்றலும்
…………………………
அங்கந் தாட்டுப் பகுவதென் கருத்தென
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலினத பணியல்லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள்.’

(பாத்திர மர கூறிய கதை 76,72)
தமிழகத்திலிருந்து சாவக நாடு நெடுந்தூரத்திலிருந்தும் தமிழ வாணிகர் அந்தாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர், காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாவக நாட்டில்தான் கிடைத்தன.

கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள்.

‘முரசு கடிப்படைய அருத்துறை போகிப்
பெருங்கடல் நீந்திய பரம்வலி யுறுக்கும்
பண்ணிய வினைவர் போல’

(பதிற்று, 8ஆம் பத்து 6)
கடலில் செல்லும் கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு சமயத்தில் நீரில் முழுகுவதும் உண்டு. கடலில் முழுகும் கப்பல், இருள் சூழும்போது மலை மறைவதுபோலக் காணப் பட்டது என்று புலவர் கொல்லன் அழிசி கூறுகிருர் (குறுந், 240:5-7).

கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறுகளையும் அறுந்துப் மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் போதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயை மாங்குடி மருதனார் கூறுகிறார்.

‘பன்மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
விலங்கு பிணி நோன் கயிறு அறீஇதை புடையூக்
கூம்பு முதல் முருங்க எற்றிச் சாய்ந்துடன்
கடுங்காற்று எடுப்பக் கல் பொருது இரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்’

(மதுரைக் காஞ்சி 375-379)
சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சாவக நாட்டுக்குக் கப்பலில் பிரயாணஞ் செய்தபோது, அவனுடைய கப்பல் நாகர்மலைத் தீவுக்கு அருகில்காற்றினால் சாய்ந்து முழுகிப் போனதையும் அவன் ஒருமரத்தைப் பற்றிக் கொண்டு தீவில் கரையேறியதையும் மணிமேகலை கூறுகிறது.
‘நளியிரு முந்நீர் வளிகலன் வவ்வ
ஒடிமரம் பற்றி யூர்திரை யுதைப்ப
நக்கசாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்’

(மணி, 16: 13-16)
மணிபல்லவத் துறைமுகத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குக் கப்பலில் வந்து கொண்டிருந்த கம்பளச் செட்டி என்பவனுடைய மரக்கலம் இரவில் கரையையடைகிற சமயத்தில் கவிழ்ந்தது என்பதை மணிமேகலை கூறுகிறது.

‘துறைபிறக் கொழியக்
கலங் கொண்டு பெயர்ந்த அன்றே காரிருள்
இலங்கு நீர் அடைகரை யக்கலக் கெட்டது.’

(மணி, 25: 189-191)
இவ்வாறு நடுக்கடலிலே காற்றினாலும் மழையினாலும் புயலினாலும், இடுக்கண்களும் துன்பங்களும் நேர்ந்தும் அவைகளையும் பொருட்படுத்தாமல் வாணிகர் நாவாய்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர். இயற்கையாக ஏற்படுகிற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வாணிகருக்குக் கடற் கொள்ளைக்காரராலும் துன்பங்கள் நேரிட்டன. ஆனால், கடற் கொள்ளைக்காரர் கிழக்குக் கடலில் அக்காலத்தில் இல்லை. மேற்குக் கடலிலே (அரபிக்கடல்) கப்பற் கொள்ளைக்காரர் இருந்ததை அக்காலத்தில் சேர நாட்டுத் துறைமுகத்துக்கு வந்து சென்ற யவனர் எழுதியுள்ளனர். துளு நாட்டின் ஏழில் மலைக்கு நேரே, கடலில் இருந்த ஒரு கடல் துருத்தியில் (சிறு தீவு) கடற்குறும்பர் தங்கியிருந்து வாணிகத்தின் பொருட்டு அவ்வழியாக வருகிற கப்பல்களைக் கொள்ளையடித்தனர் ‘என்றும் ஆகவே அவ்வழியாகக் கப்பல்கள் போவது ஆபத்து என்றும் பிளைனி என்னும் யவனர் எழுதியுள்ளனர். ஆனால், அக்காலத்தில் சேர நாட்டையரசாண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அந்தக் கடற் குறும்பரை வென்று அடக்கினான், கடற் குறும்பர் அழிந்த பிறகு யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து போயின.

கடல் துருத்தியில் இருந்த கடற்குறும்பர் அத்தீவில் கடம்ப மரம் ஒன்றை வளர்த்து வந்தனர். அவர்கள் அத்தீவிலிருந்து கொண்டு அவ்வழியாக வாணிகத்தின் பொருட்டு வந்த யவனக் கப்பல்களை முசிறித் துறைமுகத்துக்கு வராதபடி தடுத்தனர். ஆகவே, அவர்களை அழிக்க இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன்னுடைய மக்கள் நால்வரில் ஒருவனான சேரன் செங்குட்டுவனைக் கப்பல் படையின் தலைவனாக அமைத்து அனுப்பினான். செங்குட்டுவன் கடலில் சென்று கடற்றுருத்திக் குறும்பரை வென்று அவர்கள் வளர்த்த கடம்பு மரத்தை வெட்டி அதன் அடி. மரத்தினால் முரசு செய்தான். இவ்வாறு கடற்குறும்பர் அழிக்கப்பட்ட பிறகு யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தன. நெடுஞ்சேரலாதன் கடம்பரை அழித்த செய்தியைப் பதிற்றுப் பத்து, இரண்டாம் பத்து , ஐந்தாம் பத்துகளினால் அறிகிறோம்.

‘பவர் மொசிந்து ஒம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துரிய ஏஎய்
வென்றெறி முழங்குபனை செய்தவெல் போர்
தாரரி நறவின் ஆரமார்பின்
போரடு தானைச் சேரலாத.’

(2 ஆம் பத்து 1: 12-16)
இதில் இவன் கடம்பரை நேரில் சென்று அடக்காமல் தன் மகனை ஏவினான் என்பது கூறப்படுகிறது. ஏவப்பட்டவன் இவனுடைய மகனான செங்குட்டுவன்,

‘இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்பு முதல் தடித்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி.’

(2 ஆம் பத்து 10: 3-5)
செங்குட்டுவன் கடல் துருத்திக் குறும்பரை வென்றபடியால் அவன் ‘கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ என்று பெயர் பெற்றான். இவனைப் பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர்,

‘தானை மன்னர்
இனியா ருளரோ நின் முன்னு மில்லை.
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவரி கடவும் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி இமைப்பின் வேலிடுபு
முழங்கு திரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே’

(5 ஆம் பத்து 5: 17-22)
என்று கூறுகிறார்.
தன் தந்தையின் ஏவலின்படி செங்குட்டுவன் கடற் குறும்பரை வென்று அடக்கினான் என்பது இவற்றிலிருந்து தெரிகிறது.

குறிப்பு: கடல் தீவில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த குறும்பரும் பிற்காலத்தில் சரித்திரப் புகழ் பெற்ற வனவாசிக் கதம்பரும் ஒருவரே என்று சிலர் கருதுவர். அப்படிக் கருதுவது தவறு. கடல் தீவில் இருந்த கொள்ளைக் குறும்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும் , வன வாசிக் கடம்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும் காரணமாக இருவரும் ஒருவரே என்று கூறுவது தவறு. கடல் கொள்ளைக் காரருக்குக் கடம்பர் என்றும் பெயர் இருந்ததில்லை. வன வாசிக் கதம்பர் கடல் கொள்ளைக்காரராக இருந்ததும் இல்லை, நெடுஞ்சேரலாதனும் சேரன் செங்குட்டுவனும் வென்ற கடல் குறும்பர் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். வனவாசிக் கதம்பர் கி.பி. ஐந்தாம் நூற்முண்டில் இருந்தவர். இருவரையும் ஒன்றாகப் பிணைப்பது தவறு. சில வரலாற்று அறிஞர்கள் கூறுவது போல கடம்பர் என்று பெயர் இருந்ததில்லை. கதம்பர் என்றுதான் சாசனங்கள் கூறுகின்றன.

கடலில் நாவாயோட்டும் தொழில் செய்பவருக்கு மீகாமர் என்பது பெயர். கப்பலோட்டும் தொழில் செய்தவர் பரதர் என்றும் பரதவர் என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் துறைமுகப் பட்டினங்களில் குடியிருந்தார்கள். கப்பல்கள் துறைமுகத்தையடைந்தவுடன் கப்பல்களில் தொழில் செய்யும் மாலுமிகள் கள்ளையுண்டனர். அவர்களுக்காகத் துறைமுகங்களில் கள் விற்கப்பட்டது.


வேறுபன் னாட்டுக் கால்தர வந்த
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
களிமடைக் கள்ளின் சாடி’

(நற்றிணை 295; 5-8)
துறைமுகங்களில் விற்கப்பட்ட கள்ளைக் குடித்து மாலுமிகள் மகிழ்ச்சியாக இருந்ததை மணிமேகலை கூறுகிறது.

‘முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் துழந்தடு கள்ளின் தோப்பியுண் டயர்ந்து
பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணி’

(மணி, 7: 20-22)
நாவாய்க் கப்பல்கள் துறைமுகத்தையடைந்தபோது அதை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர் கொண்டழைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது.

‘தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வர வெதிர் கொள்வார் போல்’

(பரிபாடல் 10: 38-39)
நாவாயில் கப்பலோட்டுத் தொழில் செய்த ஓர் இளையவன் தன் புது மனைவியைப் பிரிந்து கப்பலில் தொழில் செய்யச் சென்றான். அவனுடைய மனைவி அவன் எத்தனைக் காலங்கழித்துத் திரும்பி வருவானோ என்று மனக்கவலையடைந்தாள். அப்போது அவளுடைய தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள் என்று மருதன் இளநாகனார் கூறுகிறர்.

‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான்
மாட வொள்ளெரி மருங்கறித் தொய்ய
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே யழிபடர் அகல, வருவர்’

(நீகான்-மீகாமன்)

(அகம், 255: 1-8)
எட்டிப் பட்டம்

வாணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக்காலத்துத் தமிழ் வாணிகர், வாணிகத் தொழிலை அயல் நாடுகளோடு தரை வழியாகவும் கடல் வழியாகவும் சென்று நடத்திப் பொருள் ஈட்டினார்கள். ‘திரை கடல் ஓடியம் திரவியம் தேடு’ என்பது தமிழர் வாக்கு. சேர சோழ பாண்டி யராகிய தமிழரசர் வாணிகரை ஊக்கினார்கள். வாணிகத்தில் பெருஞ் செல்வத்தை ஈட்டின சாத்துவர்களுக்கும் மாநாய்கர் (மாநாவிகர்) களுக்கும் எட்டிப் பட்டமும் எட்டிப் பூவும் அளித்துச் சிறப்புச் செய்தார்கள். எட்டிப்பூ என்பது பொன்னால் செய்யப்பட்ட தங்கப் பதக்கம் போன்ற அணி. பெரும் பொருள் ஈட்டிய வாணிகச் செல்வர்களுக்கு எட்டிப் பட்டம் அளிக்கும்போது இப்பொற் பூவையும் அரசர் அளித்தனர். எட்டிப் பட்டம் பெற்ற வாணிகரைப் பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சாயலன் என்னும் வாணிகன் எட்டிப்பட்டம் பெற்றிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘எட்டி சாயலன் இருந்தோன் தனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில்’

(அடைக்கலக் காதை, 163-164)
குறிப்பு: எட்டி சாயலன் என்போன் ஒரு வாணிகன். எட்டி — பட்டப் பெயர் என்று பழைய அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார்.

எட்டிப் பட்டம் பெற்றிருந்த ஒரு வாணிகனை மணிமேகலை காவியங் கூறுகிறது (நாலாம் காதை, வரி 58, 64.). காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த தருமதத்தன் என்னும் வாணிகன் பாண்டி நாட்டு மதுரைக்குப்போய் அங்கு வாணிகஞ் செய்து பெரும் பொருளைச் சேர்ந்தான் , பாண்டிய அரசன் அவனுக்கு எட்டிப் பட்டமும் எட்டிப் பூவும் அளித்துச் சிறப்புச் செய்தான் என்று மணிமேகலையே கூறுகிறது. தருமதத்தன்

‘வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
நீள் நிதிச் செல்வனாய் நீணில வேந்தனில்
எட்டிப் பூப் பெற்று இருமுப்பதிற் றியாண்டு
ஓட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான்.’

(மணி, 22: 111-114)
No. 80 P. 20. Notes on the Amaravati Stupa. by J. Bargess. (18/2 Archaeology Survey of South India)
Tamil House-holder’s Terrace Anuradhapura by S. Paranavatana. P. P. 13-14, Annual Bibliography of India Archaeololy. Vol. xiii. 1938. Journal of Ceylon branch of the Royal Asiatic Society Colomba Vol. xxxv 1942, P. P. 54-55. Inscriptions of Ceylon vol, I (1970) P. 7. No 94 (a).
P. 28 Nos. (19), 357 (20). P. 37. No. 430 Inscriptions of Ceylon vol. I (1970) Edited S. Paranavatana.

Leave a Reply