நாயக்கர் காலத்தில் திருக்குறள்- நாயக்கர் கால இலக்கியங்கள்

குமரகுருபரர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியபோது மதுரை மீனாட்சியே, சிறுபிள்ளை வடிவில் வந்து மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து அதனை கேட்டதாகவும், பின்பு நாயக்கரின் கழுத்தில் இருந்த மாலையினைக் கழற்றி, குமரகுபரருக்கு இட்டதாகவும் சமயப் பெரியோரால் கூறப்படுகிறது.

அதன் பின்பு திருமலை நாயக்கரின் கோரிக்கையை ஏற்ற குமரகுருபரர் அவரின் அரண்மனையில் வந்து தங்கினார்.

ஓரிரு நாட்கள் விருந்து தடபுடலாக நடந்தது. மன்னர் அருகிலேயே இருந்து குமரகுருவரை கவனித்துக் கொண்டார். அக்காலக் கட்டத்தில் மதுரை சூழ்ந்து பல போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. அதனால், அலுவல் காரணமாக அவர் உணவு அருந்த வரும் நேரம் தவறியது. அவருக்காக குமரகுருபரரும் காத்திருந்தார் போல.

காலை உணவை தவிர மாலை உணவு இரவு உணவு என எல்லா நேரமும் மன்னர் அவர்கள் காலம் தாழ்த்தியே உண்ண நேர்ந்தது. இதன் காரணமாக குமரகுருபரனும் வெகு நேரம் காத்திருந்து “மன்னர் வரட்டும் பிறகு சாப்பிடுகிறேன்” என கூறியுள்ளார்.

உணவானது வெகு நேரம் சாப்பிடுவதற்கு மேஜையின் மீது இருந்து. மன்னரும் ஒரு வழியாக உணவு அருந்த வந்தார். குமரகுருபரரும் தனக்காக உணவு அருந்தாமல் அவருக்காக காத்திருந்தது அறிந்து மிகவும் மனம் வருந்தினார்.

குமரகுருபரரும் மன்னரைப் பார்த்து,

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” (குறள் 377) என்ற ஒரு வாசகத்தை அவரிடம் கூறினார்.

திருமலை மன்னர் அவருக்கோ தமிழ் போல இருக்கும் அதனை முதலில் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

இதனை அறிந்த குமரகுருபரர், உலகலாம் ஆள்வதற்கு தேவையான செல்வத்தை நீ பெற்றிருந்தாலும் இறைவனின் அருள் படியன்றி நம் விருப்பப்படி அதனை அனுபவிக்க முடியாது என்ற குறளுக்கு நீங்கள் உதாரணமாக இருக்கின்றீர் என்றார்

இதனை அறிந்த திருமலை நாயக்கர் மேலும் இதனைப் பற்றி கூறுங்கள் என கேட்டு பல திருக்குறள் அவரிடமிருந்து அறிந்து கொண்டார்.

பின்னர் மன்னர் திருக்குறள் சொல்வளம் மிக்கது, ஆனால் மிகவும் பழமையான சொற்களைக் கொண்டிருந்ததனால் அதனை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. என்னை போல மற்றவருக்கும் அறிந்து கொள்ள திருக்குறளை எளிமைப்படுத்தி எங்களுக்கு கூற முடியுமா என குமரகுருபரிடம் கேட்டார்.

“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங் குறட்பாக்களையும் நோக்கியுணர்வதற்கு எளியேற்குக் காலங்கிடையாது” என்றார், குமரகுருபரர்

“ஆதலால் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுருக்கமாகத் தொகுத்துச் சிறு நூலாக இயற்றித் தந்தருளவேண்டும்” என்று, அடிகளாரை வேண்டிக்கொண்டார் திருமலை நாயக்கர்.

திருமலை நாயக்கரின் கோரிக்கையை ஏற்ற குமரகுருபரர் அதனை எளிய முறையில் அன்றைய வழக்குக்கு மொழிபெயர்த்து “நீதிநெறி விளக்கம்” என்ற நூலாக உருவாக்கி கொடுத்தார்.

குமர குருபரர் இயற்றிய நீதிநெறி விளக்கம் மனிதனுக்குத் தேவையான அறநெறிகளைத் தெரிவிக்கிறது. கல்வியின் பயனையும், செல்வத்தின் சிறப்பையும், முயற்சியின் பெருமையையும், செயல் ஆற்றும் திறத்தையும், சான்றோர் புகழையும் தெரிவிக்கிறது. மேலும் துறவியர் பின்பற்ற வேண்டியவற்றையும், பின்பற்றக் கூடாதவற்றையும் விளக்கிக் கூறுகிறது.

இதனால் மகிழ்ந்த மன்னர் திருமலை நாயக்கர் இருபதினாயிரம் பொன் வருவாயை உடைய அரியநாயகிபுரம் என்ற ஊரை அவருக்கு அளித்தார்.

அச்செல்வமே இன்று காசிமாநகரில் குமார சாமி மடமாகவும் திருப்பனந்தாள் ஆதீனமாகவும் திகழ்ந்து அறப்பணிகளுக்குச் சிறப்பாக உதவி வருகிறது.

திருக்குறளானது நாயக்க மன்னர் காலத்திலேயே எளிமைப்படுத்தப்பட்ட ஒரு நடையில் எழுதப்பட்டது என்பதற்கு மேற்கண்ட செய்தி ஒரு முக்கிய சான்றாக அமைகின்றது.

நாயக்கர்கள் காலத்தில் வில்லிபாரதத்தை வில்லிபுத்தூர் ஆழ்வாரும், திருப்புகழை அருணகிரி நாதரும், திருவிளையாடற் புராணத்தைப் பரஞ்சோதி முனிவரும், ஹரிச்சந்திர புராணத்தை வீர கவிராயரும், பிரபுலிங்க லீலையைச் சிவப்பிரகாச சுவாமிகளும், தாயுமானவர் பாடல்ளைத் தாயுமான சுவாமிகளும் இயற்றினர்.

உமறுப்புலவர் கம்பராமாயணத்திற்கு இணையாகக் கூறப்படும் சீறாப்புராணத்தை எழுதினார். படிக்காசுபுலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு போன்ற பல முஸ்லிம் புலவர்களும் தமிழ் இலக்கியத்திற்கு அணிசேர்த்தனர். வீரமாமுனிவர் தேம்பாவணியையும், இலக்கண நூல்கள் சிலவற்றையும் எழுதி உள்ளார். கிருத்துவர்கள் தமிழுக்கு ஆற்றி உள்ள பணி குறிப்பிடத்தக்கது.

தமிழ்‌ இலக்கிய வரலாறு பதினேழாம்‌ நூற்றாண்டு பாகம்‌ – 1

TVA_BOK_0013049_தமிழ்_இலக்கிய_வரலாறு.pdf (tamildigitallibrary.in)