சோழ நாட்டின் பழைய தலைநகரான உறையூரைச் சுற்றியுள்ள பிரதேசம் முன்னாளிலே கவிர நாடு (வட கவிர நாடு, தென் கவிர நாடு. திருச்சி, ஆலங்குடி) திருநெடுங்குலம் என்று பெயர் பெற்றிருந்தது. அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளிலிருந்து இது தெரிகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு அந்த நாளிலே திருத்தவத்துறை என்று பெயர். அங்கே உள்ள சப்தரீஷீச்வரர், கோயிலில் பல்லவ அரசனான நிருபதுங்க வர்மனுடைய ஆட்சியின் இருபத்து மூன்றாம் ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலே திருத்தவத்துறை மஹாதேவர்க்கு ஒரு நந்தா விளக்கு எரிக்கக் “கவிரபொற்கட்டி” ஊர் உடையான் பூதிகண்டன் என்பான் முப்பது கழஞ்ச பொன் கொடுத்தான் என்பதும் அப்பொன்னோடு வேறு கொஞ்சம் பொன்னையும் சேர்த்து நிலம் வாங்கி இறையிலியாகக் கோயிலுக்கு விடப்பட்டதென்பதும் தெரிய வருகின்றன. அக்கல்வெட்டையொட்டிக் காணப்படும் வேறு ரண்டு கல்வெட்டுகளு கவிரபொற்கட்டிக் குடிப் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சோழ மன்னனான ராஜகேசரிவர்மனுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டு கொண்டது. கவிரபொற்கட்டிக் குடியைச் சேர்ந்த கண்டன் என்பான் சோழம் பரிசை மார்வரங் கண்டனைச் சார்த்தி ஒரு விளக்கு எரிக்கத் தொண்ணூறு ஆடு அளித்த செய்தியைத் தெரிவிக்கிறது.
மற்றொரு கல்வெட்டு மதிரைக்கொண்ட கோப்பரகேசரிவர்மனாகிய முதற் பராந்தக சோழனுடைய ஆட்சியின் இருபத்திரண்டாம் ஆண்டு கொண்டது. இடையாற்று நாட்டுக் கவிர பொற்கட்டிக் குடியைச் சேர்ந்த “ஈழசான்றான்” தேவன் கலிமறி என்பான் ஒரு விளக்கு எரிப்பதற்காகத் தொண்ணூறு ஆடு அளித்த செய்தியைத் தெரிவிக்கிறது.
இவற்றைக் கவனித்தால் கவிர பொற்கட்டியூர், கவிர பொற்கட்டிக் குடி என்ற இரண்டு பெயர்களும் ஒரே ஊரைக் குறிப்பனவாகக் கொள்ளலாம். அந்த ஊர் இடையாற்று நாட்டில், அதாவது லால்குடிக்குப் பக்கத்தில் இருத்தல் வேண்டும் என்பதும் தெரியவரும். கவிர பொற்கட்டி என்ற அப்பெயர் கவிர, பொற்கட்டி என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து அமைந்தது. பொற்கட்டி என்பது ஒருவன் பெயராகவோ, அல்லது ஒரு குலத்தின் பெயராகவோ இருத்தல் வேண்டும். அதேபோல ‘கவிர’ என்ற சொல் அவன் வசித்து வந்த பிரதேசத்தின் பெயரையோ அல்லது அவன் பிறந்த இனத்தையோ உணர்த்துவதாகும். எனவே, கவிர பொற்கட்டி என்ற பெயர் கவிர நாட்டையோ அல்லது கவிர இனத்தையோ சேர்ந்த பொற்கட்டி என்பானைக் குறிப்பதாகும்.
வேறு இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளைக் கொண்டு கவிர என்ற சொல் ஒரு பிரதேசத்தைக் குறிப்பதாகக் கொள்வதைவிட ஓர் இனத்தையோ அல்லது குலத்தையோ குறிப்பதாகவே கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. சேலம் மாவட்டத்தின் தலைநகரான சேலத்தில் சுகவனேச்வரர் கோயிலில் காணும் சோழ அரசனான பரகேசுவரிவர்மனுடைய ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு கொண்ட ஒரு கல்வெட்டிலிருந்து அது விளங்குகிறது. வீரசோழ மிலாடுடையானாயின நாட்டான் சித்த வடவன்தேவி மலையமாபெருந்தேவியாரான கவிரன்ஆதி சங்கரி என்பாள் கிளிவண்ணக்கோயில் பெருமானடிகளுக்கு ஒரு நந்தா விளக்கு எரிக்கச் சேலமான இராஜாச்ரய சதுர்வேதி மங்கலத்துச் சபையார் வசம் ஐங்கழைஞ்சு பொன் கொடுத்த செய்தியை அறிவிக்கிறது. அதைக் கவனித்தால் சோழன், பாண்டியன், பல்லவன் என்ற பெயர்களைப் போலவே கவிரன் என்பதும் அமையும் என்பது விளங்கும்.
கவிரர் என்பது கவேரர் என்ற பெயர் கொண்ட ஒரு சாராரைப் பற்றி வேறு சில சாசனங்களிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. வாதாபிச் சாளுக்கிய அரசனான விநாயதித்தனுடைய வெற்றிகளைப் பற்றிக் கூறுமிடத்தில் அவனுக்குப் பின்னால் வந்த அவ்வமிசத்து மன்னர்களின் செப்பேட்டுச் சாசனங்களில் பின்வருமாறு காணப்படுகிறது.
“தந்தையின் ஆணையினால் இளம் பிறையைத் தலையில் தரித்த சிவபெருமானுடைய கட்டளையை ஏற்றுத் தாரகாராதியான கார்த்திகேயன் அசுரர்களுடைய பலத்தை ஒடுக்கியது போல, மூன்று ராஜ்யங்களையுடைய காஞ்சிபுரத்து அரசனுடைய மிகவும் அதிகமான பலத்தைத் தடுத்து ஒடுக்கியவனும்; கவேர, பாரசீக, ஸிம்ஹௗம் முதலிய தீவாந்தரத்து மன்னர்களிடம் திறைகொண்டவனும்; உத்தரா பதம் முழுவதுக்கும் நாதனாக இருந்தவனை நசுக்கி வெற்றி கொண்டு பரமேச்வரன் (அதாவது அரசர் எல்லார்க்கும் தலைவன்) என்ற பதத்துக்கு உரிய பாலித்வஜம் முதலிய எல்லாச் சின்னங்களையும் கைப்பற்றி அடைந்தவனும்; ஸத்யாசிரயன் (உண்மைக்குப் புகலிடம்), ஸ்ரீ பிருதிவிவல்லபன், மஹாராஜாதிராஜன், பரமேச்வரன், பட்டாரகன் (முதலிய விருதுகளையுடையவனுமான) விநயாதித்தியன்.”
இதன்படி விநயாதித்தியன் பல்லவர்களை வெற்றி கொண்டதோடு கவேரம், பாரசீகம், சிங்களம் முதலிய தீவாந்தரத்து மன்னர்களிடமிருந்து திறை வசூல் செய்தான் என்பதும் தெரிய வருகிறது. சிங்களம் ஒரு தீவாகும். அதேபோலப் பாரசீகத்திற்கும் நம் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாகப் போவதுதான் சுலபமான வழி. அவ்விதமே சுவேரம் என்ற நாடும் கடல் கடந்து அடைய வேண்டிய ஒரு பிரதேசமாகவே இருத்தல் வேண்டும் என்பது தெளிவு. சாளுக்கிய சாசனங்கள் பலவற்றில் கவேரம் என்பதற்கு பதிலாகக் கமேரம் என்ற பாடமும் காணப்படுகிறது அந்நாளில் வகரத்துக்கு மகரம் போலியாக வழங்கியிருக்கிறது (செம்மானம்-செவ்வானம்). அதனை நாம் அறிவோம். எனவே, கவேரம், கமேரம் ஆகிய இரண்டும் ஒரே இடத்தின் பெயர் என்பதும் அது தீவாந்தரப் பிரதேசத்திலுள்ளது என்பதும் தெரியலாம்.
அத்தகைய பிரதேசம் ஒன்று தீவாந்தரத்திலும் இருந்திருக்கிறது. இந்தோ-சீனாவில் இப்போது கம்போடியா என வழங்கப் பெறும் காம்போஜ தேசமே அது ஆகும். இந்தோ- சீனாவில் வாழும் மக்கள் கமேர் எனப்படுவர்.
மேற்கண்ட கட்டுரை தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் என்ற நூலில் இருந்து..
========
இக்கட்டுரையில் பொற்கட்டி என்பது தங்கக் கட்டிகளைக் குறிக்கிறது. “திரைத்துகிலுஞ் சொக்க பொற்கட்டி யாற்கட்டு மேற்கட்டியும்”, என செந்தமிழ் வள்ளல் சீதக்காதி பற்றிய பாடல் ஒன்றில், கடற் கிளிஞ்சலும், “சொக்க பொற்கட்டி” – சொக்கத் தங்கம்” யும் வளமையின் அடையாளமாக கூறப்படுகிறது.
கவிரர் கன்னடத்தில் கவேரர் என குறிப்பிடப்படுகிறது என்கிறார் ஆசிரியர். கவரைகள் கன்னடப்பகுதியில் கவரே என்றும், கவரேஸ்வரர் எனும் சிவனை வழிபடும் ஐநூற்றுவ வணிக வளஞ்சியர் என்றும் கல்வெட்டுகள் உள்ளன. மேலும், 10 நூற்றாண்டு கன்னட நடுகல் கல்வெட்டு (The Chivali inscription), கல்குனி என்ற ஊரில் கொள்ளையிட வந்த வேட்டுவரை வென்று பெண்களை மீட்டுள்ள “கவரே பொன் ஆசாரி” பற்றி குறிப்பிடுகிறது. ஹளபேடு கல்வெட்டு பொற்கொல்லரை, அக்கசாலிகா எனக் குறிபிடுகிறது. வணிகம் காரணமாக இவர்கள் பொன்னை ஆளும் வணிகர்களாக மாறியிருக்கலாம். சங்கறுத்து வளையல் செய்து தரும் சங்கருப்பாணி (சங்கறு வாணியன்) எனும் கவரைகள் பிற்காலங்களில் பொன் அணிகள் செய்யும் மக்களாக மாற்றமடைந்திருக்கலாம். ஏனெனில் கவரைகள் பின்னாளில் வைரச் செட்டி என அறியப்படுகின்றனர். மேலும் நாகப்பட்டினம் புத்த விஹாரா எழுத்துப் பொறிப்பு சாசனங்களில் இருந்து நாகப்பட்டினம் வணிகக் குழுக்களைச் சேர்ந்த வணிகர்களே (வளஞ்சிய பதினெண் விஷயத்தார்) அரசுக்கு காசு அடித்து தரும் அக்கசாலை அதிகாரிகளாக விளங்கினர். அதே போல வளஞ்சிய குழுவினர் நிரவியோம் என்று அழைக்கப்பட்டனர். இதன் பொருள் மதிப்பீட்டாளர் என்பதாகும்.
கவரைகளின் பூர்வமாகக் கூறப்படுவது. சோழநாடே. வளஞ்சிய பிரிவில் இருந்த கவறைகள் வணிகராகவும், வணிக வீராகவும். அவர்களின் பூர்வீக தளம் சோழ நாட்டில் திருச்சிப் பகுதி. வளஞ்சிய குழுவை எதிர்த்த எதிரிகளை வென்ற வலங்கை உய்யக்கொண்டான் எனப் பட்டம் கொண்ட கவரை வளஞ்சிய வீரருக்கு உதிரப்பட்டியாக திருச்சியை சேர்ந்த ஒரு பகுதி நிலம் அளிக்கபடுகிறது. அதனை வளஞ்சியரை தங்கள் முன்னோர் (தலைவன்) எனக் கூறும் வேளக்கார படையினர் உழுது தந்துள்ளனர்.
வணிகத்திற்கு சோழிகள் ஆதி காலத்தில் பயன்படுத்தியது போல, பொற்கட்டிகளும் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் ரிக்வேத காலத்திலேயே (சுமார் கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம். அது இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவர். சாத்து வணிகத்திற்கும், ஏற்றுமதி வணிகமான வளஞ்சியதிற்கும் பொன்னே பயன்படுத்தப்பட்டது. சங்க இலக்கியமும், மிளகுக்கு இணையாக யாவனரிடம் பொன்னே பெறப்பட்டதை கூறுகிறது..
கவரை, கவரேக்கள், கவராக்கள் இன்றும் மதுரை பகுதியில் பொன் ஆசாரியாக உள்ளனர். மதுரை மீனாக்ஷி அம்மனுக்கு தாலி செய்து கொடுக்கும் மரபினராக உள்ளனர். சோழ நாட்டு திருச்சிக்கு அருகில் உள்ள திருநெடுங்குலம் கவிர பொற்கட்டிக் குடியைச் சேர்ந்தவர்கள், “ஈழசான்றான்” என பட்டம் கொண்டு அழைக்கபட்டுள்ளதை கவனிக்க வேண்டும். ஈழத்தைச் சேர்ந்த கவரை வளஞ்சியர் தங்களை தென்னிலங்கை வளஞ்சியர் என்கின்றனர்.