எதிரிலிசோழன் பல்லவராயனால் எழுப்பிய கவறை நாயக தேவர் கோவில்

திருவீழிமிழலைக் கோயில் மகாமண்டபத்தில் பக்கவாட்டில் உள்ள மண்டபம் கி.பி.11-ஆம் நூற்றாண்டளவில் உக்கல் கிழான் எதிரிலிசோழன் என்கிற பல்லவராயனால் கட்டப்பட்டுள்ளது.

திருவீழிமிழலைக் கோயிலில. கவறைநாயக தேவர், அவர்தம் பிராட்டியார் ஆகிய இறையுருவங்களுக்கு நெய்யமுது, தயிரமுது, அடைக்காயமுது படைக்க வேண்டியும், திருப்பரிச்சட்டத்துக்கும், திருவிளக்கெண்ணைக்கும், திருவிழா எழுந்தருளும் திருநாளுக்கும் என முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நகரத்தார் அனைவரும் சேர்ந்து நிவந்தம் அளித்துள்ளனர். முதலாம் குலோத் துங்க சோழன் காலத்தில் திருவீழிமிழலை உடையார் கோயிலில் சித்திரைத் திருவிழாவும் மற்றுமொரு திருவிழாவும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. இத்திருவிழாக்களின் போது நாள் ஒன்றினுக்கு முப்பது கலம் நெல் செலவிடப்பட்டிருக்கிறது. விருதராஜ பயங்கர வள நாட்டு மேற்கால் நாட்டு விளந்தையூருடை யான் சிற்றம்பலமுடையான் செய்யபொற்பாதம் என்பவர் வழங்கிய இருநூற்று இரு கழஞ்சரையே இரண்டு மஞ்சாடி நாலுமாப்பொன்னோடு. குலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர் நாட்டுச் சென்னி மங்கலமுடையான் தில்லை நாயகனான வாணாதிராயன் என்பவர் வழங்கிய நூற்று நாற்கழஞ்சே காலே இரண்டு மஞ்சாடி நாலுமாப் பொன்னையும் சேர்த்து, முந்நூற்று முக்கழஞ்சரைப் பொன்னால் திருவீழிமிழலை உடையாருக்குச் சாத்துவதற்காகத் திருக்கொள்கை ஒன்று கி.பி. 1074 அளவில் செய்யப்பட்டுள்ளது.

விஷ்ணுபுரம், பிற்காலச் சோழப் பெருவேந்தர் காலத்தில் இவ்வூருக்கு விஷ்ணுவர்த்தனபுரம் என்ற பெயரும், இவ்வூரிலுள்ள சிவாலயத் திற்கு நாகீசுவரமுடைய மகாதேவர் கோயில் என்ற பெயரும் வழங்கி வந்திருக்கின்றன. விஷ்ணுபுரத்து நகரத்தார் விக்கிரம சோழனின் ஆறாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1124) அந்நகரத்தி லுள்ள நிலங்களுக்கு முன்னர் கிராமக்காரியம் பேசினபடி கோயிலுக்குச் செலுத்த வேண்டிய இறையைச் செலுத்த இயலாத நிலையில், திருவீழிமிழலையுடையார் கோயில் தேவகன்மிகளையும், மாகேசுவரக் கண்காணிகளையும் அழைத்துத் திருவீழிமிழலை உடையார்க்கு அந்நிலங்களை விற்று இறையிலி செய்திருக்கி றார்கள். இதனைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமைதோறும், திருவீழிமிழலை உடையாருக்கும் ஆட்கொண்ட நாயகர்க்கும், கூத்தாடு மிழலை விடங்க தேவர்க்கும், சூரிய தேவருக்கும்- திருவமுதுக்கும், சூரிய தேவர் எழுந்தருளும் போது சாத்தியருள செங்கழுநீர்ப் பள்ளித் தாமத்துக்கும் சேவிக்க வரும் அடியாருக்குச் சட்டிச்சோறு வழங்கிடவும் வழிவகை செய்திருக்கிறார்கள்.

திருவீழிமிழலை, திருவீழிநாதர் கோயில் உண்ணாழி மேற்கு அதிட்டானத்தில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் 21-வது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் திருவீழிமிழலையில் உள்ள கவறை நாயக தேவருக்கும், அவர் நம்பிராட்டியாருக்கும் நகரத்தார் நிவந்தம் அளித்த செய்தி காணப்படுகிறது, சற்று சிதைந்த இக்கல்வெட்டில் “திரிபுவந சுந்தரந் விஷ்ணுவத்த நகர மாந’ என்ற தொடருள்ளதால், இக்கொடை விஷ்ணுவ(ர்)த்த நகரத்தாரால் வழங்கப்பட்டதெனக் கொள்ளவுமிடமுள்ளது. இதில் விஷ்ணுவத்த நகரம், “திரிபுவந சுந்தரந் விஷ்ணு வத்த நகரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாறு 124