வணிகத்தில் சோழியன் காசு எனும் கவறை சோழிகள்

உலோக நாணயங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே, அன்றைய வணிகத்தில் Cowry கௌரி எனப்படும் சோழிகள் (Cypraea moneta) நாணயமாகப் பயன்படுத்தப்பட்டன. இதற்கு சோழியன்காசு என்றும் பெயர்.

அதனை உமரிக்காசு என்றனர். உமரி என்றால் நத்தை என்பது பொருள். கௌரி எனப்படும் சோழியக்காசு என்பது இயற்கையில் கிடைக்கும் கடற் நத்தையின் ஓடு ஆகும்.

பணத்தைக் குறிக்கும் சீன எழுத்து, 貝 சோழியின் பிளந்திருக்கும் பக்கத்திலிருந்த வடிவத்திலிருந்து பெறப்பட்டது என்பர். பண்டைக் காலம் முதலே சோழியானது வணிகம் மற்றும் வளமையோடு தொடர்புடையது. மேலும் சமூக உயர் நிலை, மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

சமுத்திர மந்தன் எனும் பாற்கடல் கடையும் நிகழ்வில், திருமகளோடு கவறு சோழி, (கெளரி – Cowrie) என அழைக்கப்படும் சொழியானது தோன்றியதாகக் கருதப்படுகிறது. எனவே, செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டுள்ளது.

கவறை சோழியன் வடிவமானது, வெளிப்புற, உள்ளபுற அமைப்பிலும் பெண்ணின் பிறப்பு உறுப்பின் வடிவிலும் இருப்பதால், பண்டையக் காலம் முதலே உலகம் முழுவதும் பிள்ளைப்பேறு, குழந்தைப் பிறப்பு, எனும் வளமைச் சின்னமாக சோழிகள் இருந்துள்ளன. ஜப்பான் பகுதியில் குழந்தை பிறப்பின்போது சோழிகளைப் பிடித்து கொள்வார்களாம்.

பின்பு வணிகத்திற்கு உள்ளும் நுழைந்துள்ளது. கவறை சோழிகள் வணிக மாற்றாகக் கருதப்பட்டதன் முக்கியமானக் காரணம், அது சடங்கு மற்றும் சமூகத்தில் உயர்ந்த மதிப்புடைய பொருளாக இருந்ததாகும்.

கிழக்கிந்திய கம்பெனி இந்த சோழிய நாணயத்தின் பயன்பாட்டை 1805 ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்தது.

3000 சோழிகள் 5 கிராம் தங்கத்துக்கு ஈடாக இருந்துள்ளது. இன்றைய மதிப்புக்கு ஒரு சோழியின் மதிப்பு தோராயமாக 10 ரூபாய் வரும். 13ஆம்‌
நூற்றாண்டில்‌ ஒரு பணத்தின்‌
நூற்றிலொரு பகுதியாக இதன் மதிப்பு இருந்தது.

சங்கறுத்து வளையல் வணிகம் செய்தும், சோழிய நாணயத்தை வணிகத்தில் பயன்படுத்திய பண்டைய வணிகரை “சங்கறு கவறை சோழியர்” எனக் குறிப்பிடுகின்றனர். சோழியைக் குறிக்கும் கவறு என்பதே கவறை என்றானது. கவறைகள் தங்களை கௌரி செட்டி என்றும் அழைத்துக்கொண்டனர்.

இவர்களே பிற்காலத்தில் கவரா என்றும் தெலுங்கு பகுதியில் அழைக்கப்படுகின்றனர். தஞ்சை மற்றும் பிற தமிழக நாயக்க வம்சத்தை தோற்றுவித்ததும், வட தமிழகமான நெடுங்குன்றம், காஞ்சிபுரம், கடலூர் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த பண்டைய தமிழக வளஞ்சியர் வணிகர் மரபைச் சேர்ந்தவர்கள்தாம். சங்கறுக்கும் வணிகர்கள் வடபகுதியில் சங்கிகா என அழைக்கப்படுகின்றனர். இவர்களும் நகரத்தார்களைப் போன்றே நாகர் மரபை உடையவர்கள்.

சங்கறு கவறை வளஞ்சியருக்கு, பசும்பையும்‌, சக்கரக்‌ கோலும்‌, அதித்தாரும்‌ வணிக அடையாளமாக முடையவர்கள்‌.

இதில் பசும்பை என்பது வணிகரின் பணம் முதலானவை வைத்திருக்கும் பை. இதனைப் பற்றி பசும்பையெழுபது பாடல் சிறப்பித்துக் கூறுகிறது. கவறைகளையும் தலைமையாகக் கொண்ட ஐந்நூற்றுவ வீரவளஞ்சியர் குழுவில் பசும்பைக்காரன் என்றே ஒருவர் இருந்துள்ளார். இவரின் பணி வணிகரின் பையை பாதுகாப்பது சுமப்பது ஆகும்.

ஏன் கௌரி சோழி நாணயமாக பயன்பட்டன?

சோழிகள் சிறியதாகவும், எடுத்துச் செல்லக்கூடியதாகவும், நீடித்த ஆயுள் உடையாகவும், எளிதில் உடையாமல் உறுதியதாகவும இருந்ததால் அவை சிறந்த நாணயமாக செயல்பட்டன, மேலும் சோழிகளை நாணயங்கள் போல அச்சடித்து கள்ளப்பணம் தயாரிக்க முடியாது. அவ்வாறு தயாரிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றவை. மேலும் நிலையான எடையில் இருந்தன. எளிதில் கிடக்காது உற்பத்தி செய்ய இயலாது.

பணமதிப்பிற்காக மட்டுமின்றி சோழிகளானது அதிகாரத்தின் அடையாளமாகவும் அன்று பார்க்கப்பட்டன. கௌரி சோழியை வைத்து நிலம் வாங்குவது முதல், அதிகாரிகளுக்கு பரிசளித்ததுடன், வேலைக்கு கூலியாக அளிக்கப்பட்டன.

சோழியை வைத்து சூதாடியதால் சூதாட்டத்திற்கும் கவறு என்று அதற்கு பெயர்.

காதலொடு ஆடார் கவறு. – பழமொழி நானூறு 356

பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144

கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – நற்றிணை 243

தனம் வணிகர், பொன்வணிகர் என்பது போல பண்டைய சோழியக்காசுகளை கவறு (கௌரி) களை வைத்து வணிகம் செய்த வணிகர்கள் கவறை வணிகர் கவரை வளஞ்சியர் என்றானது.

உலோக நாணயங்கள் தோன்றுவதற்கு முன்பு, கவறை சோழிகள் வணிகத்தில் பயன்பட்டன.

பண்டைய இந்திய வணிகர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கவறை சோழிகளைக் கொடுத்து வணிகத்தை விளையாட்டின் மூலம் அவர்களை கற்க வைத்தனர்.

தங்கம் வெள்ளி நாணயம் வந்தபிறகு, பண்டைய வணிகத்தின் அடையாளமாக இருந்த சோழிகள் மதிப்பிழந்திருக்கலாம். தங்கள் முன்னோர்களின் வணிக நாணயமாக சோழிகள் அடிப்படையாக இருந்தன. அதனை நினைவுக் கூற சோழிகளை குழந்தைகளுக்கு வணிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதனை, டச்சு கிழக்கிந்திய கம்பெனியினைச் சேர்ந்த மூத்த இயக்குனர் Hendrik Adriaan 1687 பின்வருமாறு கூறுகிறார்.

“இந்திய வணிகர்கள் விரைவான மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள், பெற்றோரின் மடியில் நடக்க முடியாதவர்களாகவும் இருக்கும்போதே, அவர்கள் வணிகர்களாகப் பயிற்சி பெறத் தொடங்குகிறார்கள். வணிக நடவடிக்கைகளின் போது சிறுவர்கள் எப்போதும் தந்தையுடன் காணப்படுகின்றனர். விளையாடிக் கொண்டே வியாபாரத்தில் ஈடுபடுவது போல் நடிக்க வைக்கப்படுகின்றனர். முதலில் கவறை எனும் சோழிகள் கொண்டு பொருட்களை வாங்குவது, அதைத் தொடர்ந்து வெள்ளி மற்றும் தங்கம் கொண்டு பொருட்களை வாங்க முயல்வது போன்றே பயிற்சி மேற்கொண்டனர். இந்தப் பயிற்சியில் பணம் மாற்றுபவர்களாக, பெரிய அளவிலான வர்த்தகத்தில் ஈடுபடும் திறனைப் பெறுகின்றனர்.

அவர்கள் எப்போதும் நிதானமாகவும், அடக்கமாகவும், சிக்கனமாகவும், தந்திரமாகவும், தங்களின் லாபத்தின் மூலத்தைக் கண்டறிவதில் தந்திரமாகவும் இருப்பார்கள், அதை அவர்கள் அதிகப்படுத்த எப்போதும் முயல்கின்றனர். இழப்பு ஏற்பட்டால், அவர்கள் தங்களை எளிதாக ஆறுதல்படுத்தி, தங்கள் துயரத்தை அற்புதமாக மறைக்க முடியும். பொதுவாக, அவர்கள் தங்களைச் சேர்ந்தவர்களை ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் தன்மையுடன் நன்றாகப் பழகக்கூடிய மக்கள்.”

படம் 1: சோழி நாணயப் பையுடன் வணிகர்

படம் 2: மூவாயிரம் ஆண்டுகள் பழமையான் சீன கௌரி நாணயம்.

படம் 3,4,5: இன்றும், பப்பூவா நியூகினி நாட்டில் அவர்கள் நாட்டு துணை நாணயமாக கௌரி சோழியே பயனபடுத்தப்படுகிறது.

 

Leave a Reply