தமிழில் சங்கு அறுத்து வளையல் செய்த வணிகரை, சங்கறுபாணி என்றனர். சங்கறு வாணியன் என்பதன் திரிபே சங்கறுபாணி ஆகும். சங்குக்குத் தமிழ் பெயர் வளை என்பது. சங்கறு வணிகரான கவறைகளுக்கு வளையக்காரர் என்ற பெயர் உண்டு. அதன் நேரடி வடமொழிச் சொல் சங்கிகா ஆகும்.
தென்னக சங்கறுபாணிகள் கவறைகள் எனப்பட்டனர். இவர்கள் சங்கறு கவறை சோழியர் என்றும் அழைக்கப்பட்டனர். பிற்காலத்தில் வளையக்காரச் செட்டி என்றும் அழைக்கப்பட்டனர். வட இந்தியப் பகுதியில் சங்கு அறுத்து வளையல் செய்தோர் சங்கிகா எனப்பட்டனர். கண்ணாடி வளையல்கள் தோன்றியவுடன் பெருமளவு கண்ணாடிக்கு மாறிவிட்டனர்.
சங்கறு தொழில் இன்னும் சில இனக்குழுக்களும் ஈடுபட்டன. சிந்துசமவெளியில் சங்கு வளையல்கள் செய்ய பயன்பட்டது கடல் நத்தைகளின் ஓடு ஆகும். அதன் அறிவியல் பெயர் Turbinella pyrum என்பதாகும். தென்னிந்தியா முதல் கட்ச் வளைகுடா வரையிருந்த மணல் பரப்பு அதிமுள்ள கடற்கரைப் பகுதிகளில் இருந்தே அதிகளவு சங்கு அறுவடை செய்யப்பட்டது. தென்னிந்தியாவின் கடற்கரையோரங்களில் இருந்து Chicoreus Ramosus வகை கடல் நத்தையின் சங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
சிந்துமவெளி முத்திரைகள் அல்லது பண்டைய சிற்பம் போன்ற பிற வகைப் பொருட்களுடன் ஒப்பிடும்போது சங்கு மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்கள் தொல்லியலில் ஒப்பீட்டளவில் முக்கியமற்றதாகத் தோன்றினாலும், சங்கு மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் அதன் வேலைப்பாடுகள் பற்றிய விரிவான ஆய்வு சிந்து நாகரிகத்தின் வர்த்தகம் மற்றும் கைவினை நிபுணத்துவத்தின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. சங்கு பொருட்களில் வேலைப்பாடு செய்வது முதன்முதலில் சிந்து பகுதியில் கிமு 7000 ஆணடிலிருந்தே, புதிய கற்காலத்தில் உருவானது. புதிய கற்கால மற்றும் அதனைத் தொடர்ந்த காலங்களில், சங்குவேலை செய்வது உற்பத்தி நுட்பங்கள் மற்றும் குறிப்பிட்ட சங்கு இனங்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறியது.
கிமு 3000 ஆம் ஆண்டுகளில் நடுப்பகுதியில், சிந்து நாகரிகத்தின் நகர்ப்புற மையங்களின் எழுச்சியுடன், முக்கியமான கடலோர மற்றும் உள்நாட்டில் சங்கறு பட்டறைகளுக்கான சான்றுகள் உள்ளன. இந்த பட்டறைகள் பல்வேறு வகையான அலங்கார மற்றும் பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்தன மற்றும் பல வகையான கடல் ஓடுகளை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தின. சிந்து நாகரிகம் முழுவதும் பரவலாகப் பிரிக்கப்பட்ட தளங்களில் சில உற்பத்தி நுட்பங்கள் மற்றும் சங்கறு தொழில்துறையில் புதியவடிமைப்பு அம்சங்களின் தரப்படுத்தல், சங்கறு தொழிலாளர்களின் வர்த்தகம் மற்றும் அவர்கள் சிக்கலான சமூக இனக்குழு உறவு முறைகளில் வலைப்பின்னல் இணைக்கப்பட்டதாகக் கூறுகிறது. தொலைதூர கடலோர பகுதிகளில் சங்கறு தொழிலுக்கான மூலப்பொருட்களை வழங்கவும், உள்நாட்டு நகரங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு செய்து முடிக்கப்பட்ட கலைப்பொருட்களை விநியோகிக்கவும் இந்த வணிக-சமூக இனக்குழுக்களுககு இடையேயான தொடர்புகள் அவசியமாக இருந்தன.
தமிழகத்தின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்த படியால் வளை அதிகமாகக் கிடைத்தது. சங்குகளில் இடம்புரிச் சங்கு என்றும் வலம்புரிச் சங்கு என்றும் இருவகையுண்டு, வலம்புரிச் சங்கு கிடைப்பது அருமை. ஆகையால் வலம்புரிச் சங்குக்கு விலையதிகம். சங்குகளை வளைகளாக அறுத்து வளை யல் செய்தார்கள். அக்காலத்துத் தமிழ் மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்தார்கள். கண்ணாடி வளையல் அணிவது அக்காலத்து வழக்கம் அல்ல. சங்குவளை யணிவது மங்கலமாகக் கருதப்பட்டது. அரண்மனையில் வாழ்ந்த அரசகுமாரிகள் முதல் குடில்களில் வாழ்ந்த ஏழை மகள் வரையில் எல்லோரும் அக்காலத்தில் சங்கு வளைகளை அணிந்தார்கள் . ஆகவே வளைகளை (சங்குகளை) வளையல்களாக அறுத்து வளையல் உண்டாக்கும் தொழில் அக்காலத்தில் சிறப்பாக நடந்தது. கடல்களிலிருந்து சங்குகள் எடுக்கப்பட்டன.
கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்குகளும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுகிச் சங்குகளை எடுத்தபோது, சங்கு முழங்கி அவருக்குத் தெரிவித்தார்கள்.
‘இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை’
(அகம், 350; 11-13)
(வலம்புரி-வலம்புரிச் சங்கு ; பரதவர் – கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள் ; கடலில் கப்பல் ஓட்டுவதும் முத்து சங்குகளைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில் ; பணிலம் ஆர்ப்ப-சங்கு முழுங்க)
கொற்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங்களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை (வலம்புரிச் சங்குகள் , இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால் அறுத்து அரத்தினால் அராவி அழகான வளையல்களைச் செய்தார்கள்.
‘வல்லோன்
வாளரம் பொருத கோணேர் எல்வளை’
(நற்றிணை, 77: 8-9)
வளையல்களில் கொடிகள் பூக்கள் வரிக் கோடுகள் முதலியவை அமைத்து அழகாகச் செய்யப்பட்டன. வளையல் அறுக்கும் தொழில் ஆங்காங்கே நடந்தது. சங்கச் செய்யுள்களில் , இத்தொழில் கூறப்படுகின்றது. ‘அரம்போழ் அவ்வள’ (ஐங்குறு நூறு, நெய்தல் 106) ‘கடற்கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை’ (ஐங்குறு, வளைபத்து 48) ‘கோடீர் எல் வளை’ (ஐங்குறு, வளைப்பத்து) ‘கோடீர் இலக்குவளை’ (குறும், 31: 5) (கோடு -சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத் தொழில் செய்தவர்களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர்.
‘வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்து
வளைகளைத் தொழிந்த கொழுந்து’
(அகம், 24: 1-2)
வேளாப்பார்ப்பான் என்பதன் பொருள் வேள்வி செய்யாத பார்ப்பான் என்பது. அதாவது விகவப் பிராமணர். சங்குகளை வளையாக அறுக்கும் தொழிலும் சங்கு வளைகளை விற்கும் தொழிலும் அக்காலத்தில் சிறப்பாக நடந்தன. முக்கியமான நகரங்களில் சங்கறுக்கும் தொழில் நடந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்குகளை வளையல்களாக அறுக்கும். தொழில் நடந்தது. ‘அணிவளை போழுநர் அகன்பெரு வதியும்’ (சிலம்பு, 5-47) சோழ நாட்டு வஞ்சிமா நகரத்தில்,
‘இலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்தரோடு
இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்’
(மணிமே, 28: 44-45)
இருந்தன.
சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாகரிகமாகக் கருதினார்கள். அன்றியும், அது மங்கலமாகவும் கருதப்பட்டது. கைம் பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்தார்கள் – ‘ அணிவளை முன்கை ஆயிழை மடந்தை ‘ (அகம், 361:4) ‘சின்னிரை வால்வளைக் குறுமகள்’ (குறும், 189:6) ‘வளைக் கை விறலி’ (புறம், 135:4,) ‘வல்லோன் வாளரம் பொருத கோணேர் எல்வளை அசன்தொடி செறித்த முன்கை’ (நற், 77: 8-10) என்றெல்லாம் சங்க நூல்களில் அக்காலத்து மகளிர் வளையணிந்திருந்தது கூறப்படுகின்றன. சொக்கப் பெருமான் வளையல் விற்றதாகத் திருவிளையாடற் புராணத்தில் (வளையல் விற்ற படலம்) கூறப்படுகின்றது. இடம்புரிச் சங்கினால் செய்த வளையல்களைச் சாதாரண நிலையில் உள்ள பெண்கள் அணிந்தார்கள், வலம்புரிச் சங்குகள் விலையதிக மானபடியால் செல்வச் மொட்டிகளும் இராணிகளும் அணிந்தார்கள். செல்வ மகளிர் போற்றோடு (பொன் வளையல்) அணிந்து அதனுடன் வலம்புரிச் சங்கு வளையலையும் அணிந் தார்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமாதேவி கை களில் தங்க வளைகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்கு வளையையும் அணிந்திருந்தார்.
பொலந்தொடி தின்ற மர்வார் முன்பாக
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து’
(நெடுநெல்வாடை, 141-142)
என்று நெடுநெல்வாடை கூறுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலே பேர்போன செல்வச் சீமானாக இருந்த மாநாய்கான் மகளான கண்ணகியும் வலம்புரிச் சங்கு அணிந்திருந்தாள். மதுரையில் கோவலனை இழந்து கைம் பெண் ஆனபோது கண்ணகி தன் கைகளில் அணிந்திருந்த சங்கு வளையைக் கொற்றவைக் கோயிலின் முன்பு தகர்த்து உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘கொற்றவை வாயிலில் பொற்றொடி தகர்த்து’ (கட்டுரைக் காதை, 181) (பொற்றொடி-பொலிவினையுடைய சங்கவளை. அரும்பத உரை).
மணமகன், தான் மணக்க இருக்கும் மணமகளுக்குச் சங்குவளை கொடுப்பது அக்காலத்து வழக்கம். சங்குவளை அணியும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பாரத நாடு முழுவதிலும் அக்காலத்தில் இருந்தது. இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னே சிந்து வெளியில் இருந்த ஹரப்பா நகரத்துத் திராவிட நாகரிக மகளிரும் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்பது அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுடன் சங்கு வளைகளும் இருந்ததனால் அறிகிறோம்.[1] கொற்கை காவிரிப்பூம்பட்டினம் உறையூர் முதலான ஊர்களில் நிலத்தை அகழ்ந்தெடுத்தபோது அங்கிருந்து கிடைத்த பழம் பொருள்களுடன் உடைந்து போன சங்கு வளையல் துண்டுகளும் கிடைத்தன. இதல், சங்க செய்யுட்களில் கூறப்படுகிற அக்காலத்து மகளிர் சங்குவளைகளை அணிந்திருந்தனர் என்னும் செய்தி வலியுறுகின்றது.
சங்கு முழங்குவது மங்கலமாகக் கருதப்பட்டது. கோயில்களிலும் அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளிலே காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசரைத் துயிலெழுப்பினார்கள், அரண்மனைகளில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை,
‘தூக்கணங் குரீஇத் தூங்கு கூடேய்ப்ப
ஒருசிறைக் கொஇய திரிவாய் வலம்புரி’
ஞாலங் காவலர் கடைத் தலைக்
காலைத்தோன்றினும்’
(புறம், 225: 11-14)
என்றும்,
‘மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால் வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்ப’
(சிலம்பு , 14: 12-14)
என்றும் கூறுவதனால் அறிகின்றோம். (கோயில் அரண்மனை.)
பற்பல நூற்றாண்டுகளாக மகளிர் சங்கு வளைகளை அணித்து வந்த வழக்கம் சமீபகாலம் வரையில் இருந்தது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல், முஸ்லீம் தொடர்பு ஏற்பட்ட பிறகு கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆகவே பழைய சங்கு வளை அணியும் வழக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்திலே கடலினடியிலிருந்து சங்கு எடுக்கும் தொழிலும் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழிலும் வளையல் விற்கும் வாணிகமும் மகளிர் வளையல் அணிந்த வழக்கமும் இருந்தன. காதுகளில் சங்குக் குழையணிவதும் விரல்களில் சங்கு மோதிரம் அணிவதும் கூட அக்காலத்து வழக்கமாக இருந்தது.