மண்டலம் ஆண்ட கவறை செட்டிகள்

தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி XIX & XXII ஆகியவற்றில் இருந்து சில கல்வெட்டுகள்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊத்தங்கரை சாலையில் உள்ள கொரட்டி கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 7 வரிக் கற்பலகைக் கல்வெட்டு.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது.

2. வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி

3. யுமாள காடு வெட்டிப்படை ஆறு[கு]ழுகூர் மேல்

4. வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ

5. [யி]ற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு

6. குதிரையும் மேலாரையும் குத்திப்பட்டான் நெ

7. த்தோர்பட்டி

ஞான்று – பொழுது; எறிந்த – அழித்த; கோயிற்றமன் – அரண்மனைப் பணியாள், சேவகன்; மேலார் – இராகுத்தான். குதிரை வீரர்.

விளக்கம்: மன்னர் வலியடக்கியார் போவூர்நாடு ஐநூறு நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த போது அவனது 7 ஆம் ஆட்சி ஆண்டில் காடுவெட்டி மன்னனின் படை ஆறுகுழுமூர் ஊர் மீது வந்து அழித்த போது வலியடக்கியாரின் அரண்மனைப் பணியாள் வாணிக வாணிளவரையன் இரண்டு குதிரையை குத்திக் கொன்று அவற்றின் இராகுத்தன்களையும் கொன்று தானும் வீரசாவடைந்தான். அதற்காக அவன் குடும்பத்தாருக்கு குருதி சிந்தி உயிர் விடுவோருக்குத் தரப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது.

வாணிக என்ற சொல் இவன் வணிகர் குடியைச் சேர்ந்தவன் என்பதை காட்டுகிறது. அதே நேரம் வாணிளவரையன் என்பது இவன் வாணர் அரசர் குலத்தை சேர்ந்தவன் என்பதையும் குறிக்கிறது. இதாவது, பண்டு ஆறலைக் கள்வர் தம் பண்டங்களையும் உடைமைகளையும் கொள்ளையிடாமல் காத்தற் பொருட்டு வணிகர் தமக்கென தனியே ஒரு பாதுகாப்புப் படையை பேணினர். அப்படை சில வேளைகளில் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க எதிரி படையோடு போரிட்டு விரட்டியதால் மன்னன் வணிகரை சிறப்பித்து “எட்டி” என்ற பட்டம் வழங்கினான். இதுவே பின்னாளில் சகர முன் மெய் பெற்று ‘செட்டி’ ஆனது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மன்னன் வணிகருக்கு தன் பெண்ணைக் கொடுப்பதும் வணிகரிடம் பெண் எடுப்பதும் நிகழ்ந்தது. அப்படியான ஒரு உறவில் தோன்றியவன் தான் இந்த வாணிக வாணிளவரையன் என்று புரிந்து கொள்ளலாம். இதாவது, வாண அரசன் வணிகனுக்கு மணம் முடித்த தன் மகள் வயிற்றுப் பேரனை தத்தெடுத்து இளவரசனாக ஆக்கி இருக்கிறான் என்பதே. மனுதர்மம் வணிகர்நெறி பொருள் விற்பது தான் என்று குறித்துள்ளது. ஆனால் இப்படி படை பேணுவதும் போரிடுவதும் சத்திரியர் நெறி என்று மனுஸ்மிருதி குறித்ததை வணிகர் செய்யலாமோ? இது விதி மீறல் அல்லவோ? இந்த மேற்கண்ட செயல் மனுதர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? ஆனால் அரசியல் மேடையிலும் எழுத்திலும் மக்களை முட்டாள் ஆக்கும் விதமாக அல்லவா பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆறு என்றால் ஓய்வு; குழுமூர் என்றால் கூடும் ஊர். இதாவது, படையினர் ஓய்விற்காக கூடும் ஊர் என்பது இதன் பொருள்.

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX & ஆவணம் 12, 2001 பக்கம் 5.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர் முக்குளம் கிராமம் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கூரையில் இருந்த 44 வரி வணிகக் கல்வெட்டு

 

ஸ்வஸ்திஸ்ரீ ராஜேந்திர / சோழ தேவற்கியாண்டு பதி / நெட்டாவதிற் / ஸ்வஸ்திஸ்ரீ தேவதேவந் த்ரி / _ _ வாணி அமரகன்யாச்சி தந் / வந்த தந்மோத புஜ / _ _ _ / ண் நாதந் ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி / மர்த்தந ஸகல பராஸர / _ _ ரிய சாமுண்டேஸ்வரி / _ _ _ / வீரஸாஸன மஹா / புவந வீரர்க _ மஹா / வீர ஸ்ரீவி _ புத _ _ தி / ஐநூற்றுவரும் இ / வர் மக்களாந ஸ்ரீநா _ / வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை / க் கொன்ற பணிய் மக்கள் மண்டலங் / காக்கும் கண்டழியும் மண்டலங்கா / க்கும் கவறை செட்டியையும் ஐஞ் / ஞூற்றுவந் _ _ / (பின்பக்கம்) ல்கிந்ற பணிசை ம / கந் திடாவூரிருக்கும் ப்ரா / ஹ்மணந் அஞ்ஞூற்றுவாண்டா / நும் அருமொழிதேவ முநிவர் சி / ங்கமும் எதிராந சிங்கமும் சிறு / திடாவூரிருக்கும் கலியுக கண்டழி / யும் துறகலூர் எறியும் விடங்க / ச்செட்டியும் சத்துருகண்ட மாயி / லெட்டியும் பாதாளதூசியும் நாட்டுப் / பெருவாரியந் நாட்டுச்செட்டியும் / மேற்பாடி மூத்தநும் பாண்டி ஞாட்டைஞ் ஞூற்றுவாண்டாநும் வா / ளையூரைஞ் ஞூற்றுவாண்டாநு / ம் இவர்களோடும் வந்த பல்வ / கை வீரரும் ஸமையமும் இருக்க ந / ம் மகந், வீரகள் புத்திரனைக் கொற்ற / குலைப்பகையந் மாளனைக் குத்தி / க் கைதறித்து சமையத்துக் கிட / சோமையந் மகந் சாமுண்டந் பணி /கண்டு நாநாதேசிய வீர திருவடியாயிரு / ந்து இவனுக்கு வீர பட்டணஞ் செய்து / குடுத்து _ _ ணிக்கச் செட்டுங் கட்டி / _ யம்ப _ _ _

 

மக்களான – படைவீரரான; பணிசை – பணிசெய்; கண்டழி – துணை நிற்கும் படை; எறி – தங்கும் அல்லது காக்கும்; மாயிலெட்டி – எண்ணெய் வணிகன்; பெரு ஆரியன் – பெருந் தலைவன்; ஸமயம் – படையின் ஒரு பிரிவுப் பெயர்; கொற்ற – அச்சுறுத்திய; தறித்து – வெட்டி; கிட – ஆயுத சாலை; வீரபட்டணம் – வீரர் ஓய்வு கொள்ளும் மனைகள், rest house; கட்டி – அகமகிழ்ந்து; இயம்ப – சொல்ல

விளக்கம்: இந்த வணிகப் படைக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் 18 ஆம் ஆட்சி ஆண்டு 1030 இல் வெட்டப்பட்டது. 3 ஆம் வரி முதல் 14 ஆம் வரி வரை வணிகர் தம் மெய்க்கீர்த்தியே இடம் பெற்றுள்ளது. 15 ஆம் வரியில் தான் செய்தி தொடங்குகிறது. திசை ஐந்நூற்றுவரும் இவருடைய படை வீரர்களான ஸ்ரீ நா _ _ வீரமக்களும் மாப்பன் புளியுமனை கொன்ற பணிமக்களும், இம்மண்டலம் காக்கும் துணை நிற்கும் படையும் இம்மண்டலம் காக்கும் கவறை செட்டியும், ஐந்நூற்றுவன் _ _ _ நில்கின்ற பணிசெய் மகனும், திடாவூரில் வாழும் பிராமணன் ஐந்நூற்றுவாண்டானும், அருமொழித்தேவ முனிவர் சிங்கமும் எதிரான (தம்பி) சிங்கமும், சிறுத்திடாவூரில் இருக்கும் கலியுக துணை நிற்கும் படையும், துறகலூரில் இருக்கும் விடங்கச் செட்டியும், சத்துருகண்ட மாயிலெட்டியும், பாதாளத்தூசியும், நாட்டுப் படையின் பெரு ஆரியனான நாட்டுச் செட்டியும், மேல்பாடி மூத்தனும், பாண்டி நாட்டு ஐந்நூற்றுவாண்டானும், வாளையூர் ஐந்நூற்றுவாண்டானும், இவர்களோடு வந்த இவர்தம் பல்வகை வீரரும், சமைய படையும் சூழ்ந்து இருக்க, “நம் மகனையும் வீரர்கள் மகனையும் அச்சுறுத்திய குலப்பகைவன் மாளனை கத்தியால் குத்திக் கையை வெட்டிய சமைய படையின் ஆயுத கிடங்கு சோமையன் மகன் சாமுண்டனின் செயற்திறன் கண்டு சாமுண்டனை நாநாதேசிய வணிகரின் வீரத்திருவடியாய் இருக்கவும் இவனுடைய படை ஆள்கள் ஓய்வு கொள்ள தங்கில் (வீரபட்டணம்) செய்து குடுத்து வசதி செய்யவும்” மாணிக்கச்செட்டி அகமகிழ்ந்து ஆணை இட்டார். குலப் பகைவன் என குறிக்கப்படும் மாளனும் வணிகனாகவே இருக்க வேண்டும்.

பாலக்காடு அட்டப்பாடி வணிகக் கல்வெட்டும் இதே போல வீரபட்டணம் செய்து கொடுத்ததை தெரிவிக்கிறது. ஐகுந்தம் வணிகக் கல்வெட்டும் இதே போல வணிகர்கள் மாபெரும் படையை பேணியதைக் குறிக்கிறது.

பார்வை நூல்: ஒன்றிய தொல்லியல் துறையால் 1926 இல் முன்பக்கம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பக்க கல்வெட்டு அண்மையில் தான் அறியப்பட்டு நாளேட்டில் வெளியானது. முழுமையாக இன்னும் எந்த நூலிலும் அச்சேறவில்லை.

ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரில் உள்ள கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 9 ரிக் கல்வெட்டு.

 

ஸ்வஸ்திஸ்ரீ திசை
யாயிரத் தைஞ்ஜ ஞா
ற்றுவ நானாதேசிய
டைக்கலம் கிழங்க
நாட்டு நித்தவிநோத
புரத்திருந்து வாழும் வெ
ள்ளாளன் வெண்டுவ்வ
ன் திருக்குறையான்
எடுப்பிச்ச மாநகரம்.

விளக்கம்: இந்த கல்வெட்டு நித்தவிநோத என்ற முதலாம் இராசராச சோழனின் பட்டப் பெயரை குறிப்பதில் இருந்து இக்கல்வெட்டு அவனது அல்லது இராசேந்திர சோழனது காலத்தது என கொள்ளலாம். கிழங்கு நாட்டில் நித்தவிநோதபுரத்தில் வாழுகின்ற அரச அதிகாரி வெள்ளாளன் வெண்டுவ குலத்தை சேர்ந்த திருக்குறையான் என்பவன் திசை ஆயிரத்து ஐநூற்று நானாதேசிக வணிகக் குழுவினருக்கு புகலிடமாக மாநகரம் ஒன்றை கட்டிவித்தான். இதே அருங்காட்சியகத்தில் முதலாம் இராசேந்திரனின் நாலாம் ஆட்சி ஆண்டு 20வரிக்கு மேல் உள்ள கல்வெட்டு ஒன்று இதே செய்தியுடன் உள்ளது.

பார்வை நூல்: கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு, புலவர் செ . இராசு, பக்கம் 48

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நத்தம் கிராமம் திருப்பழனமுடைய நாயனார் கோவில் தெற்கு சுவறில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க _ _

2. [ழ] தேவற்கு யாண்டு 30 [ஆ]வது நிகரிலி சோழமண்டலத்து

3. _ _ ட்டு தகடூர் நா[ட்டு எ]யில்னாட்டுக் கலி[ஞ்சி]றைப் பற்றுக் [கா] _

4. கெயின்கறையில் வீடுடையார் திருபழனமுடைய நாய[னா] _

5. [ர்]த் திருக்கோவலூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோ[யி]

6. ல் தேவரடியாரில் ககையாழ்வி மகள் ஆளுடையனாச்சியார்

7. _ _ _ க்குத் திருப்பள்ளியறை நாச்

8. சியாரை எழுந்தருளிவித்து இன்னாச்சியார்

9. திருவத்தசாமத்துக்கு அமுதூட்டுக் குடுத்துவிட்ட

10. குட்டையூர் திருத்தி விட்ட நிலம் நாற்

பழனம் – வயல், பொய்கை ; நாயனார் – இறைவன்;

Seshadri Sridharan