பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் காவிதி வணிகர்

பண்டைய இலக்கியங்களில் வணிகரைக் குறிக்க காவிதி என்ற சொல் வரும். சங்ககாலத்தில் செயல்பட்ட நிகமம் என்ற வணிக்ககுழுவின் தலைவராக குறிப்பிடப்படும். இது கிருஹபதி என்ற சொல்லோடு தொடர்புடையது. தலைவரை அல்லது பெரும்பாலும் வணிகத்தை தலைவரைக் குறிக்கும். நிகமம் என்ற வணிகக்குழுவின் இடைக்கால தொடர்ச்சியே ஐந்நூற்றுவ வளஞ்சியர் என்பர்.

கிருஹபதி எனும் சொல் இலங்கையில் தமிழ் வணிகர்கள் குறித்த சொல்லாக இருந்துள்ளது. கிருஹபதி கரிகபதி கரிகபாடி என்பன பிற்கால வணிகர் குடி வழிவந்த நாயக்க அரசு தலைவரை குறித்துள்ளது.

காவிதி என்ற சொல் பற்றி கீற்று இணையத்தில் வெளிவந்துள்ள கட்டுரையைக் காண்போம்.

தமிழ் மொழி சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியத்தில் புலவர் பெயராகவும் கல்வெட்டுகளில் வணிக மற்றும் அரசியல்நிலையிலும் குறிக்கப்படும் காவிதி என்ற சொல்லானது பண்டைய தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் இடம் பெற்ற வரலாற்றை ஆராய்வதும், இக்காவிதி அரசு மற்றும் வணிக உருவாக்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக சமூக பொருளியல் மாற்றத்தில் காவிதியின் பங்களிப்பு மற்றும் அதன் வரலாற்று தொடர்ச்சி ஆகியவற்றை ஆராய்வதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

காவிதியும் பொருள்விளக்கமும்

காவிதியின் சொற் பிறப்பை ஆராயும் போது இதற்கு தமிழ் வேர்ச் சொல்லில்லை என்பது விளங்கும். வேர்ச் சொல்லில்லை எனில் அது கடன்பெற்ற அல்லது திரிபுச் சொல்லாகத்தான் இருக்கமுடியும் என ஊகிக்கலாம். இச்சொல்லானது பிராகிருதத்தில் வழங்கும் ‘கஹபதி-கபதி’ என்பதன் தமிழ் வடிவம் என ஐ.மகாதேவன்(2020:112) குறிப்பிடுவார். இலக்கியங்களும் நிகண்டுகளும் காவிதி என்பதற்கு வேளாளர்க்குப் பாண்டியர் கொடுத்து வந்த பட்டம்(தொல்.அகத்.30), வைசிய மாந்தர் பெறும் பட்டவகை (எட்டி, காவிதிப்பட்டந் தாங்கிய மயிலியின் மாதர்-பெருங்.2,3,144), மந்திரி (திவாகரம்), கணக்கர் சாதி (சூடாமணி), வரிதண்டு அரசாங்க தலைவர் எனப்பொருள் தருவதாகப் பேரகராதி (ப.903) குறிப்பிடுகிறது. மேற்கண்ட பொருள் விளக்கங்கள் வேறுபட்ட வரலாற்றுச் சூழலைக் குறிக்கின்றன. தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையில் (அகத்.30) குறிக்கப்பெறும் வேளாளார்க்குப் பாண்டியர் கொடுத்து வந்த பட்டம், வழங்கி வந்த காலமும் நோக்கமும் இன்னவென அறிவதர்க்கு சான்றில்லை. வரிதண்டு அரசாங்கத் தலைவர் என்பது இவ்வுரையைப் பின்பற்றியே பொருள்கொண்டுள்ளது. இத்தலைவர் முறையானது சுங்கமும் அதனை ஒழுங்குபடுத்தும் நிர்வாக முறையையும் குறிக்க வந்ததாக இருக்கலாம். எனினும் இக்காவிதியானது வேளாளார்க்கும் வணிகர்க்கும் வழங்கும் பட்டமாக கூறப்படுகிறது. இதற்கு எவ்வித அகச்சான்று மற்றும் புறச்சான்று குறிப்புகள் ஏதுமில்லை.

பிராகிருத்ததில் கஹபதி என்பதற்கு ‘இல்லத்தலைவன்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. இக்கஹபதியை பற்றி கா.இந்திரபாலா கூறுகையில், “ஆந்திராவில் அமராவதி போன்ற இடங்களிலும் அப்பால் வடக்குப் பிரதேசங்களிலும் கஹபதி என்பது சொற் பிரயோகம் சில முக்கியமான சமூக-பொருளியல்சார் மாற்றங்களும் விவசாய முயற்சிகளும் நடைபெற்ற ஊர்களிலே நிலச்சொத்தும் செல்வமும் பெற்றோராய் எழுச்சிபெற்ற ஊர்த்தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டமாகக் காணப்படுகிறது. வட இந்தியாவில் புதிதாக நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டபோது கஹபதிகள் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவோராகவும் அவர்கள் உற்பத்தியை நகரங்களுக்கு வணிகர்களுக்குக் கொடுப்போராகவும் ஒரு முக்கிய தொழிலைப் புரிந்தனர் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கிடைக்கும் கல்வெட்டுக்களும் இத்தகைய ஒரு முக்கிய பங்கினைக் கஹபதிகள் விவசாயத்துறையில் ஏற்றிருந்தனர் என்று கொள்ள இடமளிக்கின்றன. இலங்கையிலேதான் எண்ணிக்கையில் மிகக் கூடுதலான குகைக் கல்வெட்டுகளில் கஹபதிகள் பௌத்த சங்கத்தாருக்கு தானம் வழங்குவோராக உள்ளனர்”(2020:112).

பண்டைத் தமிழகத்தைச் சுற்றி வடபுலத்திலும் இலங்கையிலும் காணப்படும் கஹபதி பிராகிருத சொல்லாகவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்திற்கு வரும்போது மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதனை தொல்காப்பிய எச்சவியலில்,

வடச்சொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (402).

இச்சூத்திரத்தில் வடச்சொற்களை தமிழ் சொற்களாக உருமாற்றுவது பற்றி கூறுகின்றது. இத்தனிச் சிறப்பான திரிச்சொல்லாக்கம் காவிதியையும் அதன் சமூக இருப்பையும் புரிந்து கொள்வதில் சிக்கலுக்குரிய இடமாக மாறியது என்றும் கூறலாம். இம்மொழிபெயர்ப்பு தமிழில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தின என்று திட்டமாகத் தெரியவில்லை. கஹபதி முறையை அப்படியே இங்கு பொருத்திப் பார்ப்பது தமிழ்நிலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்து கொள்வதில் தவறும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் காவிதி அதன் தமிழாக்கமாக இருக்கும்போது அந்த குடும்பத்தலைவர் முறை ஏற்படுத்திய தாக்கம், சொல் அளவிலானதா அல்லது இங்கே நிலவிய சமூக உறவுகளுக்குள் உள்ளிழுக்கப்பட்டு தமிழகத்தின் தன்மைக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பது இன்னும் விளங்கப் படாமலே உள்ளது. இந்நிலையில் நாம் சங்க இலக்கியத் தரவுகளை நோக்கவேண்டியுள்ளது.

சங்க இலக்கியச் சான்றுகள்:

சங்க இலக்கியத்தில் காவிதி பற்றிய குறிப்புகள் பாடல்களிலும் அடிக்குறிப்புகளிலும் இடம் பெறுகின்றன. மதுரைக்காஞ்சியிலும் நற்றிணை பாடல் அடிக்குறிப்புகளில் புலவர் பெயராகவும் காவிதி குறிக்கப்படுகிறது.

மதுரைக்காஞ்சியில்,

சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்

நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து

ஆவுதி மண்ணி, அவிர் துகில் முடித்து

மா விசும்பு வழங்கும் பெரியோர் போல

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி

பழி ஒரீஇ உயர்ந்து, பாய் புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களும் (492-499).

இவ்வரிகளில் கொள்கையால் அறம் கூறும் அவையத்தில் யாகத்தால், வான்னுயர் பெரியோர் (அந்தணர்) நிலைக்கு வைத்துப் பாடப்படுகிறார். நன்மை தீமை கண்டு ஆராய்ந்து, அன்பும் அறனும் ஒழியாது காத்த செம்மை சான்ற இக்காவிதி மாக்கள் வேள்வி செய்யும் அந்தணரோடு ஒப்பிட்டுக்காட்ட வேண்டிய ஒரு சமூகத்தேவை உருவாகியுள்ளது. இச்சூழலைப்புரிந்து கொள்ள டி.டி.கோசாம்பியின் கீழ்கண்ட கருத்து நோக்கத்தக்கது. கங்கைச் சமவெளியில் உருவாகிய புதிய வர்க்கங்கள், சுதந்திரமாக வளர்ந்து கொண்டிருக்கும்போது அதில் ஒன்றாக கஹபதி என்ற குடும்பத்தலைவர் முறை உருவாகியிருந்தது பற்றி கூறுகையில்,

“கஹபதி (சமஸ்கிருதத்தில் கிருஹபதி) என்ற சொல்லின் பொருள் ‘வீட்டு யசமானன்’ இனி அச்சொல் ரோமானிய வழக்குப்படி ஒரு குடும்பத்தலைவருக்கு (Pater Families) நிகராயிற்று. ஆரம்பத்தில் அச்சொல் வேதம்-பிரமணங்களில் குறிப்பிட்டுள்ள ராஜிய யாகங்களைத் தவிர வேறு சாதாரண யாகங்களைச் செய்வோரையும் விருந்தளிப்போரையும் குறித்து வழங்கலாயிற்று. இப்போது அச்சொல் முதன் முறையாக எல்லா சாதிகளுக்கும் பொதுவான தந்தைவழி மரபு போற்றும் ஒரு பெரிய குடும்பத் தலைவனைக் குறிக்க ஆரம்பித்தது. முக்கியமாக, செல்வத்தை முன்னிட்டு அக்குடும்பத் தலைவர் சமூக மதிப்பைப் பெற்றார். அச்செல்வம் வாணிபம், தொழில் அல்லது விவசாயம் ஆகியவற்றின் மூலம் திரட்டப் பட்டிருக்கலாம்” (2019-178,179).

சங்கப் பாடல்களில் அந்தண வேள்வியிலிருந்து வேறுபட்டதாக களவேள்வி குறிப்பிடப்படுகிறது. இக்களவேள்வியானது பத்து பாடல்களிலும் பதிற்றுபத்து பதிகத்தில் இரண்டு இடங்களிலும் குறிக்கப்படுகிறது (பா.தொ.1981;179). பாண்டியக்குடிமரபில் வேள்வி செய்ததைப் பெருமைக்குரிய பட்டமாக சூட்டிய அதே நாட்டில்தான் வேளாளர்க்கு காவிதிப்பட்டம் வழங்கிய செய்தியும் இடம் பெறுகிறது. இக்காவிதி மாக்கள் என்பது ஒர் குழுமரபா அல்லது குழுத்தலைவனைக் குறிக்கும் உயர்நிலையா எனத் தெளிவாகப் பொருள் கொள்ளமுடியவில்லை. ஆனாலும் இக்காவிதி மாக்கள் வணிகரைக் குறிக்கவில்லை என்பது தெளிவு. மதுரைக்காஞ்சியில் வணிகர்களை குறிக்கும் ‘தேஎத்து பண்ணிய பகர்நரும்’(506) , ‘நாற்பெருங் குழுவும்’(510) ஆகிய வரிகள் இடம்பெறுகின்றன. எனினும் காவிதி அவையோடும் அரசரோடும் நெருங்கிய உறவுடையதாக காட்டப்படுகிறது.

நற்றிணை பாடலின் அடிக்குறிப்புகளில் மட்டுமே வரும் புலவர் பெயர்களில் காவிதியானது இடம் பெறுகிறது.

ஆவூர் காவிதிகள் சாதேவனார் * – நற்றி;264

இளம் புல்லூர்க் காவிதி – நற்றி;89

கிடங்கில் காவிதிக் கீரங் கண்ணனார் – நற்றி;218

கிடங்கில் காவிதிக் கொற்றங்கொற்றனார் – நற்றி;364

இப்புலவர்கள் பெயர்களில், ஊர்ப்பெயர், சிறப்புப்பெயர் மற்றும் இயற்பெயரோடு அமைவது என்பது ஒர் முறையியலை வெளிப்படுத்துகின்றன. சங்கப்பாடல் அடிக்குறிப்புகள் இம்முறைமையில் அமைவது பழந்தமிழ் மரபாக பின்பற்றப் பட்டுள்ளது. இரண்டு காவிதிப் புலவர்களின் ஊரான கிடங்கில் சங்கப்பாடல்களில் உயர்வாகப் பாடப்பட்டுள்ளது. சிறுபாணற்றுப்படையில்,

பழம்படு தேறல் பரதவர் மருப்பக்

கிளைமலர் படப்பைக் கிடங்கிற் கோமான் (159-160).

இதில் பரதவர் கள்ளுண்ணும் போது கிடங்கிற் ‘கோ’மான் நல்லியக்கோடனை பாடுவாயாக எனப்பாடப்படுகிறது. நற்றிணையில்,

கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் (65)

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்த்த கிடங்கிலின் இனிமைக்கு உவமையாக பாடப்படுகிறது.

இக்கிடங்கிலானது கொங்கப் பெருவழி எனப்படும் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் மூன்று பெருவழிகளில், மூன்றாவது பெருவழியில் அமைந்த ஊராகும்.

ஆவூரானது ஆ+ஊர் என ஆநிரையால் வந்த பெறாக இருந்திருக்கலாம். சங்க இலக்கியத்தில் பல ஆவூர்கள் குறிக்கப்படுகின்றன. சோழ நாட்டில் தென்கரையில் அமைந்த ஊராகவும் கொள்ளப்படுகிறது (உ.வே.சா;2014). ஆவூரானது கிழார் பெயர் கொண்ட புலவர் மரபினருக்கு உரிய ஊராகவும் இருக்கிறது. கிழார்-காவிதி இருவருக்கும் உரியதாக ஆவூரானது குறிக்கப்படுவது கவனிக்கதக்கது. இளம்புல்லூரானது, இடைக்காலத்தில் மிழிலைக் கூற்றத்து நடுவிற்கூறான இளம்புல்லூர்க்குடி என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறது (ஔ.து.பிள்ளை;2010). தமிழக ஆந்திர எல்லையில் வாணியம்பாடி அருகே பாலாற்றங்கரையில் புல்லூர் என்ற ஊரானது இன்றும் வழங்கிவருகிறது.

கிடங்கில் காவிதி கீரங் கண்ணனார் மற்றும் ஆவூர் காவிதிகள் சாதேவனார் பாடிய பாடலில் கோவலர் பற்றி ஒரே சூழலில் அமையும் குறிப்புகள் காணப்படுகிறது நற்றிணையில்,

வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த

ஆபூண் தென் மணி இயம்பும்

ஈகாண் தோன்றும் எம் சிறு நல்ஊரே (264)

இவ்வரி உடன்போக்கின் போது கோவலரைக் காட்டி எம்மூர் தோன்றுவதாக எனக்குறிக்கிறது.

ஈர் மணி இன் குரல் ஊர் நனி இயம்ப

பல் ஆதந்த கல்லாக் கோவலர் (நற்றி;364)

இப்பாடடில்களில் வரும் ‘கல்லாக்கோவலர்’ என்பது ஆநிரை மேய்ச்சலை தவிர வேறுத்தொழில் அறியா பண்பை காட்டுவதாக உள்ளது. காவிதிப்புலவர் பாடல்களிள் நான்கிலும் கற்பு வாழ்க்கைக்கு பொருள் தேடிச் செல்லும் பிரிவை உணர்த்திப் பாடுகின்றன.

சங்க காலத்திற்கு இணையாக தமிழகத்தின் வடபுலத்தில் ஆந்திர மற்றும் கர்நாடக பகுதிகளை உட்படுத்திய வட்டாரங்களில் கஹபதி என்ற குடும்ப முறை செழிப்புற்றிருந்தது. இப்பகுதியானது சாதவாகன மற்றும் மௌரிய அரசுகளுக்கு உட்பட்ட பகுதிகளாகும். சாதவாகனத்திற்கும் தமிழகத்திற்க்கும் இடையிலான வணிக உறவை உணர்த்தும் வகையில் பொ.ஆ.மு.2 முதல் பொ.ஆ.பி.1 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாதவாகன காசுகள் கிடைக்கின்றன. இக்காசுகள் கரூர்,காஞ்சி மற்றும் கடலூர் போன்ற இடங்களில் கிடைக்கின்றன (tamilvu). பண்டைய சாதவாகன ஊரான பருகச்சத்திலிருந்தும் பைத்தான் என்ற தலைநகரிலிருந்தும் காஞ்சிபுரத்திற்கு தெற்கு நோக்கி பெருவழிகள் சென்றுள்ளன. “பருகச்சத்திலிருந்து நாசிக், பைதான், மாஸ்கி, பிரம்மகிரி, சந்திரவல்லி, சித்தல்துர்க்கம்,ஸ்ரீபர்வதம் (திருப்பதி) வழியாகக் காஞ்சிபுரம் வரை அந்தப் பெருவழி சென்றிருக்கிறது. அவ்வூர்களில் சிலவற்றில் உரோமானியக் காசுகள், உரோமானியப் பொருட்கள் முதலியன கிடைத்துள்ளன. அவற்றின் மூலம் யவன வணிகர்கள் அப்பெரு வழிகளில் பயணம் செய்தனர் என அறிய முடிகின்றது” (ர.பூங்குன்றன்;2016-109).

அக்காசில் ஒருபக்கம் தமிழும் மறுபக்கம் பிராகிருதமும் பொறிக்கப்பட்டுள்ளது. வணிக பரிமாற்றங்களோடு மொழி பரிமாற்றமும் நடந்துள்ளதை இதுகாட்டுகிறது. இம்மொழிப் பரிவர்த்தனையில் கஹபதி காவிதியாக மாறியிக்க வேண்டும். இக்காசுகள் குறிப்பிடும் காலகட்டத்திலேயே தமிழகத்தில் காவிதி கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன என்பது மேலும் கவனிக்கதக்கது

வடபுலத்திலிருந்து வணிகப் பரிமாற்ற உறவுகளின் மூலம் கஹபதி என்ற சொல்லானது காவிதி என்று தமிழாக்கம் பெற்று வழங்கியுள்ளது என்பதை இதன்மூலம் அறிலாம். காவிதி பழந்தமிழகத்தின் சமூக உறவுகளில் ஏற்படுத்திய மாற்றங்களைக் கல்வெட்டுக்கள் உணர்த்துவதாக உள்ளன.

காவிதியும் நிகமும்:

தமிழகத்திலுள்ள இரண்டு தமிழ்-பிராமி(தமிழி) கல்வெட்டுகள் காவிதி என்று குறிப்பிடுகின்றன. ஒன்று மதுரைக்கு அருகிலுள்ள மாங்குளத்திலும் மற்றொன்று சிவங்கங்கையிலுள்ள திருமலை என்ற இடத்திலும் அமைந்துள்ளது. மாங்குளம் கல்வெட்டில் (பொ.ஆ.மு.2) ‘வெள்ளறை நிகமது காவிதிஇய்’(ஸ்ரீதர்.தி.ஸ்ரீ;2006-க.1.4)என்று குறிக்கபெறுகிறது. இக்கல்வெட்டானது மதுரை தேசிய நெடுஞ்சாலை -38ற்கு அருகேயும் வைகைக்கரையை ஒட்டிச்செல்லும் வணிகப்பெருவழியில் அமைந்துள்ளது. இவ்வெள்ளறை என்ற ஊரானது இன்றைய வெள்ளெரிப்பட்டியாக இருக்கலாம் என்று தொல்லியலாளர் கூறுகின்றனர். இவ்வூரும் தேசிய நெடுஞ்சாலை -38யில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளறை என்பதை ‘வேள்அறை’ என ர.பூங்குன்றன்(2016) பொருள்கொள்வார்.

மாங்குளத்தில் ‘வெள்ளறை நிகமது’ (ஸ்ரீதர்.தி.ஸ்ரீ; 2006-க; 1-.4,6) என்று இரண்டு கல்வெட்டுகள் குறிக்கின்றன. இதில் நிகம என்ற சொல்லானது பாறைக் கல்வெட்டுகளில் மூன்று இடங்களில் குறிப்பிடுகிறது (சுப்பராயலு.எ:2020-183). இந்நிகம என்பது பிராகிருத மொழிக்குரிய சொல்லாகும். இதன் தமிழாக்கமாக நியம (நற்றி;45,அகம்;83) என்று சங்கப்பாடல்கள் குறிக்கின்றன. இந்நிகமம் முழுத்தமிழாக்கமாக அமையாமல் பிராகிருதிலிருந்து ‘க’ரமானது ‘ய’கர எழுத்துக்குறியாக மாற்றப்பட்டு, தமிழ் பிராகிருதக்கூட்டு சொல்லாக வழங்கப்பட்டுள்ளது. நிகம என்பது வணிகக்குழு என்று பொருள் கொள்வர். அக்சான்றில் நியம என்பது வர்த்தக மையம்(கடைத்தெரு) என்று குறிப்பிடுகிறது. சங்கப்பாடல் அடிக்குறிப்புகளில் புலவர் பெயராக ‘நொச்சி நியமக் கிழார்’ (நற்றி-17,208,209; அகம்-52;புறம்-293) என்று குறிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. அந்நியமம்,

நெடுங் கொடி நுடங்கு நியம மூதூர் (நற்றி;45-4,அகம்;83-7).

இவ்வரி இரண்டு பாடல்களில் ஒரு எழுத்துக்கூட பிறழாமல் அப்படியே பாடப்பட்டுள்ளது. நற்றிணையில்,

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு

மீன் எறி பரதவர் மகளே நீயே

நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே

நிணச் சுற அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ

புலவு நாறுதும்; செல நின்றீமோ!

பெரு நீர் விளையுள் எம் சிறு யல் வாழ்க்கை

நும்மொடு புரைவதோ அன்றே

எம்மனோரில் செம்மலும் உடைத்தே! (45)

இப்பாடலின் வழி இரண்டு விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. ஒன்று மருதத்திணையில் அரிவனர் (நற்றி;400), கைவினை மாக்கள் (குறுந்;309), தண்பனைக்கிழவன் (புறம்;342), என்று வேலைப்பிரிவினையும் வர்க்கப்பாகுபாடும் ஏற்பட்டது போலவே, நெய்தல் நிலத்தில். மீன் பிடித்து அதைக் காய வைத்து பாதுகாக்கும் வர்க்கமும் உழைப்பிலிருந்து விடுபட்ட செல்வம் உடைய செம்மல்களும் ஒரே குடியில் உருவாகியிருந்தனர். மற்றொன்று மூதூராகிய குடிநிலையிலிருந்த பழமையான ஊரானது வணிக உறவின் காரணமாக கொடிகள் பறக்கும் வர்த்தக மையமாக மாறியது. அவ்ஊர் செல்வந்தனின் மகன் பரதவர் குடியின் செல்வந்தரொடு வணிகத்தால் ஏற்படுத்தி கொண்ட புதியச் செல்வந்த உறவும் உருவாகி வளர்ந்துள்ளது என அறியலாம். காவிதி மாக்களின் மீது சந்தன மணம் வீசும் தூய்மை குறிப்பும் மீன் நாற்றம் எடுக்கும் தூய்மையற்றவர் குறிப்பும் அவர்கள் தோற்றம் பற்றிய சிந்தனை உருவாகிருந்தது தெளிவாகிறது.

நெல்உபரி உற்பத்தி மற்றும் வாணிப உறவின் காரணமாக ஒரு புதிய செல்வந்தர் வர்க்கம் உருவாகியிருந்தது. அவை மருதத்தில், பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ (நற்றி;60-2), நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் (அகம்;356-13), நெல்விளை கழனி அம்பர் கிழவோன் (புறம்;385) என்று கூறப்படுவதன் மூலம் நெல்உபரிக்கு உரிமையுடைய கிழான் உருவாகிறான். நெய்தலில் உமணரும் பண்டமாற்று வாணிகம் செய்த நிகமத்தூர் தலைவர்களும் (நொச்சி நியமக் கிழார்) உருவாகியிருந்தனர். சான்றாக, அகநானூற்றில் 80 வது பாடலில் யானையை கள்ளுக்காக விற்க நியமத்தில் உள்ள ஒரு இல்லத்தில் கட்டி வைத்தனர்.வெள்ளறையும் ஒரு வாணிக மையமாகவும் காவிதி அதன் தலைவராகவும் இருந்திருக்க வேண்டும். சான்றாக, கொடுமணலின் பானைப்பொறிப்புகளில் நிகம (KDL-12) எனக் குறிக்கப்படுகிறது. இது ஒரு வணிக மையமாகவும் தொழிற்கூடமாகவும் அறியப்படுகிறது (ராஜன்.கா; 2018-322).

நிகம காவிதி வேறொரு சமூக அரசியல் மாற்றத்திற்கு உட்பட்ட நிலையில் திருமலைக் கல்வெட்டில் (பொ.ஆ.பி.1) காணப்படுகிறது. இது தேசிய நெடுஞ்சாலை -36 என்ற வணிகப்பெருவழியில் அமைந்த ஊராகும். இக்கல்வெட்டில் ‘எருகாட்டு ஊரு காவிதி கோன்’ (க.15.2) என வெட்டப்பட்டுள்ளது. எருக்காட்டூருக்குரிய காவிதி கோன் என்பதில் ‘கோன்’ ஆனது பாறைக்கல்வெட்டுகளில் 52 இடங்களிலும் ‘கோ’ என்று 61 கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன (சுப்பராயலு.எ;2020-182). மேலும் கொடுமணலின் பானைப்பொறிப்புக்களில் கோன் (KDL-94), கோவே (KDL-96) என்று குறிக்கப்பெறுகிறது (ராஜன்.கா;2018-328). பண்டைக்காலத்தில் கோன்,கோ என்பது பெருவழக்காக பயன்படுத்தபட்டுள்ளது. இக்கோன் பற்றி கா.சிவதம்பி புறநானூறு 156;13-21 வது பாடலை சுட்டிக்காட்டி “தலைவர் அல்லது உயர்நிலைக்குறிக்கும் இறை என்பதிலிருந்து கோ என்ற சொல் உருவாகி இருக்க வேண்டும்” (2017-65). இத்தலைவர் நிலை அடுத்தெழுந்த அரசியல் தலைவர்களையும் குறிக்க வந்துள்ளது. பெரும்பாலும் சேரரையும்(புகளூர் கல்வெட்டு), ஒரு முறை சோழனையும்(கிள்ளி) குறிக்கவந்ததுள்ளது. கோன் தொடக்கத்தில் மலைக்காடுகளை ஒட்டிய முல்லைநில ஊர்களுக்கு தலைவனாக இருந்து அவை வணிக வழியாக மாறிய போது அந்த ஊர்தலைவர்கள் காவிதி கோன் என்று வழங்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாகும். பின்னர் இது பேரரசுருவாக்க கட்டத்தை அடையும் போது அவர்களை குறிக்கவும் வழங்கிருக்கலாம்.

காவிதியும் கிழாரும்:

சங்கப் பாடல்களில் மொழிப்பெயர் தேயத்தைக் குறிக்கும் பாடலான அகநானூறு 295-இல் ‘நிலம் நீர் அற்று நீள்சுனை வறப்ப’ (1) என்ற வரியில் புல்லி பகுதியில் குடிநீர் சுனையானது வற்றிப் போன நிலையில் அவ்வழியே செல்லும் உமணர் கிணறு தோண்டினர்.

கடல்நீர் உப்பின் கணம்சால் உமணர்

உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து

அகல் இடம் குழித்த அகல்வாய்க் கூவல்

ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் (அகம்:295,9-12)

உமணர் அவ்வழியே செல்லும் புதிய வழிப்போக்கர் தாகம் தீர்க்க இக்கிணற்றை வெட்டினர். நீர்த்தேவையின் காரணமாக ஒரு நிலையான கிணற்றைக் குன்றுகளுக்கிடையே அமைக்கும் நுட்பத்தை உமணர்கள் அறிந்திருக்க வேண்டும். சங்கப்பாடல்களில் அதிகம் காணப்படும் இந்த உமணரைப் போன்றே ஒரு கிழாரும் சுனை வெட்டிய செய்தி அம்மன் கோயில்பட்டி கல்வெட்டில் கூறப்படுகிறது.

பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன்

கோபன் கணத்தேவன் தொட சுனை (க.28.1)

இச்சுனையும் குடிநீர் தேவையை நிறைவு செய்ய வெட்டப்பட்டு இன்றும் வற்றாது பயன்பாட்டில் உள்ளது. இச்சுனையானது தாரமங்கல பெருவழிப்பாதையின் அருகில் அமைந்துள்ளது.

‘கரும்பனூரன் காதல் மகனே’ எனப் புறம் 381 இல் வரும் பாடல்வரியில் கரும்பனூர் கிழான் வேங்கட்டிற்கு உரிய ஊர்தலைவனாக குறிக்கப்படுகிறான். காதல் மகன் என்ற உவமை நிகம மூதூர் செல்வன் மகனை (நற்றி;45) குறிக்க வந்துள்ளதும் நோக்கத்தக்கது. புறநானூற்றில்,

நெல்விளை கழனி அம்பர் கிழவோன்

நல் அருவந்தை, வாழியர்- புல்லிய

வேங்கட விறல் வரைப் பட்ட (385).

காவிரியால் நெல்விளையும் வயல்களைக் கொண்ட அம்பர் கிழான் அருவந்தையின் புகழ் புல்லியைத் தலைவனாக கொண்ட வேங்கடத்தின் உயர்ந்த மலையில் பொழியும் மலைக்கு ஒப்பிட்டு வாழ்த்தி கல்லாடனார் பாடுகிறார். அவரே புறநானூற்றில்,

முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப்

பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற

திருந்தா மூரி பரந்து படக் கெண்டி

அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்

வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென

ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்

தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி (391)

மேடாக உயர்ந்தி குவிக்கப்பட்ட நெல்லின் பெருவளம் வாழ்த்தி அதைப் பெற்று கறியோடு கள்ளுண்போரொடு உண்டு இருந்த வேங்கடத்தின் வடப்புலம் முழுவதும் வறுமை ஏற்பட்டதால் தம் கூட்டத்தாரோடு பொறையாற்று கிழானையும் அம்பர் கிழானையும் கல்லாடனார் நாடிச்சென்று பாடுகிறார். புல்லி என்ற தலைவன் வேங்கடத்திற்க்கு உட்பட்ட ஊரின் கிழானாக இருந்திருக்க வேண்டும். களவர் கோமான் மழ புலம் வணங்கிய (அகம்;61), இளையர் கோமான் (அகம்;83), என்று புல்லி மழவர்,கோவலர்,இளையர் மற்றும் வடுகர் எனப் பலக்குடிகளை உட்படுத்திய ஒரு ஊரின் தலைவனாக விளங்குகிறான். சான்றாக, ஔவை.துரைசாமிப்பிள்ளை பதிப்பில் மேற்கண்ட பாடலில் முதுகுடி நனைந்தலை மூதூர் (9-10) என்றுள்ளது (2010;695). மற்றப் பதிப்பாசிரியர்களின் பதிப்பில் இவ்வரி இடம் பெறவில்லை. இவ்வரில் மூத்தகுடிகள் பல இருந்த மூதூருக்கு உரிய கிழானாக பொறையாற்று கிழான் குறிக்கப்படுகிறான். புல்லியின் வேங்கடம் பற்றாக்குறையாக விளங்கியதை

முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூஉட்புகை (அகம்;359) என்னும் பாடல் வரி மூலம் புல்லி, காட்டெரிப்பு வேளாண்மை முறையைப் பின்பற்றிய முல்லைப்பகுதிக்குரிய கிழான் என்று அறியலாம். இவன் நெல்லிற்காக யானையின் தந்தங்களையும் கள்ளையும் கொண்டு பண்டமாற்றாகப் பெறுகிறான். இவ்வழியே உபரிநெல்லை விற்பனை பண்டமாக கொண்டு செல்லும் வணிகவழியாக இருந்துள்ளதை இதன் மூலம் தெளிவாகிறது.

அன்ன யானை வெண் கோடு கொண்டு

நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் (அகம்-61)

காவிரிக் கரையில், நிலத்தோடு நீரையும் இணைத்து உருவாக்கிய புதிய(யானர்) மருதநிலத்தினில் (ஞா.ஸ்டீபன்;2017) தோன்றிய உற்பத்தியின் விளைவாக உபரிநெல் உருவாகியது. இந்த மிகை உற்பத்தியின் விளைவாக வேலைப் பிரிவினையும் தொழிற்குடிகளும் உருவாகின. மிகை உற்பத்தியை நெற் பல் கூட்டு (அகம்;61)களில் பாதுகாதுத்தும் கட்டுபடுத்தியும் வந்த கிழானை வேலி ஆயிரம் விளைக நின் வயலே (புறம்-391) எனப்புகழப்பட்டு வந்துள்ளான். இக்கிழான் குடிநிலையிலிருந்து மருத நில உருவாக்கத்தில் எழுந்த புதிய செல்வந்த வர்க்கமாக உருமாறுகிறான். இம்மாற்றம் நிலத்தில் தனிச்சொத்துடைமையை உருவாக்கி தந்தைவழி பிறப்புரிமையை (கிழார் மகன்) அதிகாரமாக கொண்ட அமைப்பாக மாறுகிறது.

இம்மாற்றங்களைப் பற்றி கா.சிவதம்பி கூறுகையில்,

“தமிழ்நாட்டில் சமூகத் தளபிரி நிலைகளுக்கிடையே அக்காலப்பகுதியில் வர்க்க அடிப்படையிலான ஒன்றுக்கொன்று விரோதமான மோதல்கள் நிகழவில்லை. வணிக வர்க்கம் நிகம என்ற அமைப்பாகவும் நிலச்சொத்துக்களை உடையவர்கள் கிழான்களாகவும் நிறுவனமாகி இருந்தன” (2017-79).

காவிதிக்கும் கிழாருக்கும் உள்ள உறவுப்பற்றி ர.செண்பகலட்சுமி கூறுகையில்,

“கிழவன் (கிழான்) என்ற தமிழ்ச்சொல்லை க்ருஹபதி (கஹபதி) என்பதற்கு இணையான சொல்லாக கருதுவது பொருத்தமாகலாம்” (2020;215). இக்கருத்தினையே கா.இந்திரபாலா, ர.பூங்குன்றன் ஆகியோர் கொண்டுள்ளனர்.

வடப்புலத்தின் மொழி பெயர் தேய வணிக உறவால் ஏற்பட்ட கஹபதி என்ற குடும்பத்தலைவர் முறை வணிகர்களுக்கிடையே வழங்கப்பட்டு பின்னர் அது வணிக வழிகள் கொண்ட ஊர் தலைவர்களைக் குறிக்கும் பெயராக மாறியிருக்க வேண்டும். அவை வணிக மையத்தின் தலைவனாகிய நியம காவிதி நிலையிலிருந்து ஏற்பட்ட செல்வாக்கால் வணிக வழி ஊர் தலைவர்களை குறிக்கும் காவிதி கோன் அடைப்பெற்று வழங்கியிருக்க வேண்டும். இம்மாற்றங்கள் தொடர்ச்சியான வணிக ஊடாட்டத்தின் மூலமாக, இங்கு ஏற்கனவே இருந்த ஊர்தலைவர் முறையாகிய கிழானின் மாற்றீடாக காவிதி உருவாகியிருக்க வேண்டும்.

ஒழுங்கமைக்கபட்ட அரசு உருவாகியிருந்த சூழலில், வணிகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் உற்பத்தி முறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாக காவிதியும் கிழானும் புதிய செல்வந்தர் வர்க்கமாக உருவாகி இருந்தனர். அரசைத் தீர்மானிக்கும் அல்லது வழிநடத்தும் நிலச்சொத்துடைமை மற்றும் வணிகத்தை இவர்களே கட்டுப்படுத்தி நிர்வகித்து வந்தனர். அதை சமயத்தில் அரசைப் பாதுகாக்கும் அரணாகவும் வளர்ச்சி பெற்றிருந்தனர். கா.சிவதம்பி அரசுருவாக்கம் பற்றி கூறுகையில்,

“வடபுலத்தோடு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தொடர்பு அதன் காரணமாக வடபுலம், அதனுடைய அரசர்கள் மற்றும் மரபுகள் குறித்து ஏற்பட்ட அறிவு வளர்ச்சி (புறம்;31,52;பதி;68), யவனர்களோடு ஏற்பட்ட நட்பு இவையனைத்தும் அரசினுடைய துணை அமைப்புகள் உருவாவதற்குக் காரணமாக இருத்தல் வேண்டும்” (2017-79).

மேற்கண்ட வணிக உறவுகளின் மூலம் ஏற்பட்ட சமூகப்பொருளியல் மாற்றங்களின் விளைவாக அரசு நிர்வாகத்திற்கான துணைமை அமைப்புகளாக காவிதியும் கிழானும் வளர்ச்சி அடைந்து இருக்கவேண்டும். ஆனால் சங்கப்பாடல்களில் துணைமை அமைப்புகள் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை.

தொல்காப்பிய அகத்திணையியல் (30) நச்சினார்கினியர் உரையில், முதுகுடித் தலைவர்கள் மகட்கொடை மறுத்த நிலையிலிருந்து வேந்தருக்கு மகட்கொடை அளிக்கும் உயர்வகுப்பினரை வரிசைப்படுத்தும் நிலைக்கு மாறிய காலக்கட்டத்தை இது விளக்குகிறது. தமிழில் உபரிஉற்பத்தியில் ஏற்பட்ட நிலச்சொத்துடைமை மற்றும் வணிகம் காரணமாக புதிதாக உருவான உடைமைப் பெயர்களாக இவைத் தோன்றுகின்றன. இவ்வாறு உருவான உடைமைப் பெயர்களை விரிவாக ஆராய்ச்சி செய்யவேண்டியுள்ளது நன்னூல்(158) மயிலைநாதர் உரையிலுள்ள காவிதிப்புரவு என்பது அரசர் காவிதிக்கு கொடுத்த ஊர் எனக்குறிக்கப்படுகிறது. காவிதி வணிக மற்றும் குடியுறவு சங்கிலியிலிருந்து அறுபட்டு அரசின் நிர்வாகத்திற்கு உரிய அமைப்பில் சிறந்தவர்க்கு வழங்கும் பட்டமாக மாறியிருக்க வேண்டும். இவை காவிதி உருவாக்கத்திலிருந்து அதன் மாற்றங்களுக்கு இடையேயான வரலாற்று தொடர்ச்சியை குறித்து நிற்கிறது.

வணிக மற்றும் உபரி உற்பத்தியின் விளைவாக தோன்றிய ஒரு பெயர் சொல்லானது தொழிற்பெயராக வழங்கி தனிச்சொத்துடைக்குரிய அரசியல் பெயராக பரிணமித்த வரலாற்றை காவிதி என்று வழங்கியதை இதன் மூலம் அறியலாம். இம்மாற்றங்களைக் காலநிரல் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யும் போது காவிதியின் வரலாற்றுப் பரிணாமத்தை ஆழமாக புரிந்து கொள்ள முடியும்.

நச்சினார்க்கினியர், “ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம்” என்றுரைத்து மாராயம் என்பது என்னதென்று விளக்கினாரே யொழிய, மாராயம் என்னுஞ் சொல்லிற்குப் பொருள் கூறினா ரல்லர். அவர் ஒரு மொழி நூலதிகாரியுமல்லர்; அவர் காலத்தில் மொழியாராய்ச்சியும் இல்லை. ஆகவே, மாராயம் என்பது, மாராயனால் செய்யப்படும் சிறப்பென்றே பொருள்படுவதாகும். அச் சிறப்பு செல்வக்கொடை பட்டமளிப்பு என இரு வகைப்படும். பொதுவாக படைத் தலைவர்க்கு ஏனாதிப்பட்டமும், அமைச்சருக்குக் காவிதிப் பட்டமும், வணிகர்க்கு எட்டிப் பட்டமும் வழங்கப்பெறும்.

ஏனாதி நல்லுதடன், ஏனாதி திருக்கிள்ளி, ஏனாதி நாயனார் (சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவர்) முதலிய பல ஏனாதிப் பட்டத்தினர் பெயர்கள் இலக்கியத்திற் காணப்படுகின்றன. காவிதி என்னும் சொல்லிற்குத் திவாகரத்தில் மந்திரி யென்னும் பொருளும், சூடாமணி நிகண்டில் கணக்கர் என்னும் பொருளும் கூறப்பட்டுள. எட்டி காவிதியர்க்குக் கொடுக்கப்படும் பொற்பூ, எட்டுப்பூ, காவிதப்பூ என்றும், நாடு அல்லது ஊர் எட்டிப் புரவு காவிதிப்புரவு என்றும், முறையே பெயர் பெறும் வணிக மாதர் இவ் விரு பட்டங்களையும் பெற்றதாகக் கூறும் “எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய மயிலியன் மாதர்” என்னும் பெருங் கதைக்கூற்று எத்தகைய தென்று திட்டமாய்த் தெரியவில்லை

அடிக்குறிப்பு:

* ஆவூர் காவிதிகள் சாதேவனார்க்கு பாடவேறுபாடாக, ஆவூர் காவிதி கண்மா தேவனார் என்றும் காவிதி மாச்சாத்தனார் என்றும் ஏடுதோறும் வேறுபட்டுக் காணப்படுகிறது. மதுரைத் தமிழ்ச் சங்க ஏடும் அச்சுப் பிரதியும் ஆவூர் காவிதிகள் சாதேவனார் என்று குறிக்கின்றன(ஔ.து.பி:2010-291). ஓலையை பிரதி எடுக்கும் போது ஆமூர்க் கௌதமன் சாதேவனார் என்பதை ஆவூர் காவிதிகள் சாதேவனார் என்று படி எடுத்திருக்க வேண்டும். ஆமூர்க் கௌதமன் கௌத கோத்திரத்தை சார்ந்த ஸஹதேவன் என்ற சேர நாட்டு அந்தணர் ஆவார் (நாரா.அ.1915).

Leave a Reply