ஐந்நூற்றவ வளஞ்சியருக்கு நானாதேசி என்ற பெயரும் உள்ளது. இதன் பொருள் நாளுதேசி என்பதாகும். அதற்கு நான்கு திசைக்கும் சென்று வணிகம் செய்தவர் என்று கருத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இலங்கையைச் சேர்ந்த கல்வெட்டுச் சாசனம் மட்டும் “நான்கு நாட்டார்” என ஒரு தமிழ் வணிகக்குழுவினரை குறிப்பிடுகிறது.
கி.பி 9ஆம் நூற்றாண்டில் நான்கு நாட்டார் கல்வெட்டு வெண்பா வடிவில் அமைந்துள்ள இதனை ஈழத்திற் காணப்படும் மிகப்பழைய தமிழ்க்கல்வெட்டாகக் கொள்ளப்படுவதால் ஈழத்தில் இக்காலத்திற்கு முன்னர் வளர்ச்சியடைந்த இலக்கியமரபை இது குறிக்கலாமெனவும் கொள்ளலாம்.
இக்கல்வெட்டை வெளியிட்டவர்கள் வணிகக் குழுவினராகிய நான்குநாட்டார் ஆகும் இவர்கள் அநுராதபுரத்தில் சேனாவர்மன் காலத்தில்அமைத்த மாக்சோதை’ பள்ளி என்ற விகாரை பற்றி இது கூறுகின்றது. மாக்கோதை இன்றைய கேரள மாநிலத் திலுள்ள இடமாகையால் வணிகக் குழுவினர் அங்கிருந்தே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனலாம்.
நான்கு நாட்டார் என்பதன் பொருள் சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடு என நான்கு நாட்டைச் சேர்ந்த வணிகர் என்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். கன்னட சாசனம் இவர்களை நால்கு தேசி எனக் குறிப்பிடுகிறது. நான்கு நாட்டார் என்போர் சேரநாட்டிலிருந்து இலங்கைக்கு வணிகம் செய்யவந்தனர் என்று அக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.
நான்கு – நாலு நானா
நாட்டார் – தேசி
நானாதேசி என்பதன் மூலச் சொல் தமிழ்ச் சொல்லான நான்கு நாட்டார் என்பதாகும்.
இந்த “நான்கு நாட்டார்” என்போர் கன்னட நாட்டிற்கு சென்று வணிகம் செய்த ஐய்யவோளே, ஐந்நூறுவாரு, எனக் குறிப்பிடப்பட்டனர். இவர்களே பதிணென் விசயத்தார் எனும் திசை ஆயிரத்து ஐந்நூற்றவ வளஞ்சியர் எனக்குறிப்பிடப்படும், அலைகடல் பல கடந்து பல கலம் செலுத்தி வணிகம் செய்த நானாதேசியரின் முன்னோடி என இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு. சி. பத்மநாபன் குறிப்பிடுகிறார்.
ஐந்நூற்றுவரைப் பற்றி அகரம் agaram.wordpress.com இணையத்தில் வந்துள்ள தகவல்
ஐந்நூற்றுவர் வணிகக்குழு
ஐந்நூற்றுவர் என்போர் 8 – 13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே தமிழகத்தில் வணிகம் மேற்கொண்ட புகழ்பெற்ற வணிகக் குழுவினர் ஆவர். ஐந்நூற்றுவர் தெய்வமாக ஐயபொழில்புரத்து பரமேச்வரி பட்டாரகி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறாள். ஐந்நூற்றுவர் என்பார் ஐயபொழில்புரத்தைச் சேர்ந்த ஐந்து நூறு கோமான்கள் (Five Hundred Lords of Ayyavalepur) என்றும் ஐயபொழில்புரத்தைச் சேர்ந்த ஐந்து நூறு சுவாமிகள் (Five Hundred Swamis of Ayyavalepur) என்றும் கல்வெட்டுகள் வழியாக இவர்கள் அறியப்பட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த, கி.பி 10 மற்றும் கி.பி 12 நூற்றாண்டுகளுக்கிடையில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த, ஐஹோளே (Aihole) என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.
ஐந்நூற்றுவர் தங்கள் உறுப்பினர்களைப் பல்வேறு மதம் மற்றும் இனப்பிரிவுகளிலிருந்து சேர்த்தனர். ஐந்நூற்றுவர்களுக்குள்ளே தேசிகள் (உள்நாட்டு வணிகர்கள்) பரதேசிகள் (வெளிநாட்டு வணிகர்கள்) என்று பல்வேறு துணைப் பிரிவுகள் இருந்தன. இந்த வணிகக் குழுக்கள் தங்களுக்கென்று பஞ்சத வீரசாசனம் அல்லது வீரவளஞ்சிய தர்மம் என்ற வணிக தர்மத்தை கடைபிடித்தனர். அவ்வப்போது பல்வேறு நிகழ்விடங்களில் (Venues) (பெரும்பாலும் கோவில் மண்டபங்களில்) ஏற்பாடு செய்து தேவைக்கேற்ப கூட்டப்பட்ட (Convened) ஐந்நூற்றுவர் வணிகர் குழுவின் கூட்டங்களின் நடவடிக்கைகள் (Proceedings of the Meetings), மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் (Resolutions Passed), எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் (Actions Taken) போன்ற வரலாற்றுச் செய்திகளை மெய்கீர்த்தியுடன் கல்வெட்டுகளாகப் பதிவு செய்தனர்.
தங்கள் குழுவில் இடம்பெற்ற வணிக உறுப்பினர்களுக்கு ஐந்நூற்றுவர் குழுவினர், அரசியல் மற்றும் பொருளாதார அளவிலான பாதுகாப்பினை (Political and Economic Protection) அளித்தனர். வணிகப் பயணங்களின்போது, இக்குழுவில் இடம்பெற்ற ஆயுதம் தாங்கிய வணிகர் படைப் பிரிவினர் (Armed Forces Division), வணிகச் சாத்துக்களுக்கும் (வணிகப் பொருட்கள்) வணிகர்களுக்கும் பாதுகாப்பளித்தனர். இவ்வாறு பாதுகாப்பளித்த வணிகப் படைவீரர்கள் தங்களை வீரவளஞ்சியர் (தெலுங்கு: வீரபலிஜா) என்று அழைத்துக்கொண்டனர். நானாதேசி, பதினெண் விஷயம் / பதினெண் விஷயத்தார் (பதினெட்டுப் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள்), பதினெண்பூமி (பதினெட்டு பட்டணங்கள் அல்லது நகரங்களைச் சேர்ந்த வணிகர்கள்) ஆகிய விருதுப் பெயர்களால் தங்களை அழைத்துக்கொண்டனர். “ஐந்நூற்றுவர், பதினெண் விஷயத்தார், பதினெண்பூமி, நானாதேசி ஆகியவை ஒரே அமைப்பின் பெயர்களே என்று நாம் நம்பலாம் மக்கள் எந்தப் பெயரை விரும்பினார்களோ அதைப் பயன்படுத்தினர்.
“அறம் வளர கலி மெலிய” போன்ற தொடர்கள் வணிகர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அறம் வளர்ப்பதும் கலி (காலத்தின்) இன்னல்களை மட்டுப்படுத்தவும் வணிகர்கள் அறச்செயல்களைச் செய்ய முற்பட்டனர். சோழர்கள் காலத்தில் கோவில்கள் சமுதாய / பொருளாதார மையங்களாக முக்கியத்துவம் பெற்றன. பல கல்வெட்டுகள் கோவிலுக்கு வணிகர்கள், தங்கள் இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, அளித்த பொன் மற்றும் பொருட்கொடை பற்றிப் பதிவு செய்துள்ளன. பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் வணிகர்கள் பல கோவில்களுக்கு மிகுந்த ஆதரவு நல்கினர். கோவிலிலிருந்து இவர்களுக்குப் பல உரிமைகள் அளிக்கப்பட்டன.
ஐந்நூற்றுவர் கர்நாடக மாநிலத்தின் ஐஹோளேயிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. ஐந்நூற்றுவர் பற்றிய செய்தி முதன்முதலில் கி.பி. 800 ஆம் ஆண்டுத் தேதியிட்ட ஐஹோளே கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஐஹோளே வணிகக் குழு (ஐந்நூற்றுவர்) பிராமணர்களின் தீர்மான அடிப்படையில் தோன்றியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் ஆர்.செண்பகலட்சுமி கருதுகிறார். நோபுரு கராஷிமா இக்கருத்தை சந்தேகிக்கிறார். ஐஹோளேயை அடுத்து, தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்ட கி.பி. 927 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இந்த வணிகக் குழுவினரை “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” என்ற பெயரில் குறிப்பிடப்பிடுகிறது. தமிழகத்தில் இந்த வணிகக்குழு குறித்து முதலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு இதுவாகும். “திசை ஆயிரம்” என்பது ஆயிரம் திசைகளிலும் பயணித்து வணிகம் புரிந்தோரின் குழு. ஆகும். பத்தாம் நூற்றாண்டிற்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் ,தென்கிழக்கு ஆசியாவிலும் (இந்தோனேஷியா (சுமத்ரா), தாய்லாந்து மியன்மார்) ஐந்நூற்றுவர் குறித்துப் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐந்நூற்றுவர் கல்வெட்டுகளை நோபுரு கராஷிமா இரண்டு விதமாகப் பிரித்து ஆய்ந்துள்ளார்: 1. எறிவீரப்பட்டணம் கல்வெட்டுகள் – “வணிகர்களும் படை வீரர்களும் வாழ்ந்த ஒரு நகரத்துக்கு ஏறிவீரபட்டணம் என்ற தகுதியை வழங்க வணிகர்கள் எடுத்த முடிவை இத்தகைய கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.” 2. “பட்டணப் பகுடி” கல்வெட்டுகள் – “வணிகர்கள் தங்கள் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை கோயில் திருவிழாக்கள் திருப்பணிகள் ஆகியவற்றிற்கு வழங்க எடுத்த முடிவைப் பதிவு செய்கின்றன.”
“பட்டணப் பகுடி” என்பதற்கு “நகரின் பங்களிப்பு” என்று பொருள்.” கோவில் திருவிழாக்கள் திருப்பணிகளுக்கு வேண்டிய நிதியினைத் திரட்ட குறிப்பிட்ட மையங்களிலிருந்து (துறைமுகப்பட்டணங்கள், பட்டணங்கள்) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதும் அந்தப்பகுதியின் ஊடே செல்லும் பொருட்களின் மீதும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரிகளை விதித்தனர். பிரான்மலைக் கல்வெட்டு (S.I.I. VIII 442) வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலையும் இவற்றிற்கு விதிக்கப்பட்ட வரிவிகிதங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. “நானாதிசைகளிலுமுள்ள பதினெண் விஷயத்தார் சபையில் அங்கம் வகிக்கும் குழுக்களின் முழுமையான பட்டியலை” பிரான்மலைக் கல்வெட்டுப் பதிவு செய்கிறது.
ஐந்நூற்றுவர் வணிகக் குழுக்களைச் சேர்ந்த அறுபத்துநான்கு பேர் சர்க்கார் பெரியபாளையம் (திருப்பூர் மாவட்டம்) சுக்ரீஸ்வரர் (கொங்கில் குரக்குத்தளி) கோவிலில் கூடி “குரக்குத்தளி நாயனாருக்கு வைகாசித்திருவிழா எடுக்க” முடிவு செய்து அதற்குத் தேவையான நிதிக்காக ஏற்றுமதி, இறக்குமதி, தலைச்சுமை போன்ற பொருட்களுக்கு வரி (சுங்கம்) விதிக்க முடிவு செய்தனர். இந்த 64 வணிகர்களும் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்துக் கைசாத்து (கையொப்பம்) இட்டுள்ளனர். கொங்குச்சோழன் வீரராசேந்திரன் காலத்தை சேர்ந்த, குரக்குத்தளி ஆளுடையா நாயனார் கோவில் அர்த்த மண்டப வடக்கு சுவரில் பதிவு செய்யப்பட்ட சர்க்கார் பெரியபாளையம் வணிகக் கல்வெட்டு இது பற்றிய விரிவான செய்தினைப் பதிவு செய்துள்ளது.
ஐந்நூற்றுவர் கல்வெட்டுகள் ஐந்நூற்றுவர்களைப் பற்றிய மெய்கீர்த்தியுடன் தொடங்குவது சிறப்பு. மெய்கீர்த்தியில் இடம்பெறும் “பஞ்ச சத வீர சாசனம்” என்ற தொடர் மூலம் ஐந்து நூறு (ஐநூறு) சாசனங்கள் இருப்பதாகப் புகழ்ந்து கொள்கிறார்கள். ஐந்நூற்றுவர் என்ற பெயர் பெற்றது விளக்கும் தொடர் இதுவெனலாம். வீரபணஞ்சு தர்மத்தைக் (வணிகர்களின் அறம் மற்றும் சட்டதிட்டங்கள்) காப்பவர்களாக இவர்களைச் சித்தரிக்கிறது. ஐஹோளேயின் பரமேஸ்வரர்களான ஐந்நூற்றுவர் 18 பட்டணம், 32 வேளாபுரம், 64 கடிகைத்தாவளம் ஆகிய இடங்களில் வணிகம் புரிந்தது பற்றியும் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. இவற்றுள் பட்டணம் என்ற சொல் நாகப்பட்டனம், கிருஷ்ணபட்ணம் ஆகிய துறைமுகப் பட்டணங்களைக் குறித்தன. வேளாபுரம் என்பது துறைமுகத்தை அடுத்து அமைந்துள்ள பகுதியாக இருக்கலாம். கடிகைத்தாவளம் என்பது காவலோடு கூடிய நிலையான சந்தையையுடைய வணிகநகராக இருக்கலாம். இவ்விடங்களில் தேவைக்கேற்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரத்தையும் வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும் பெற்றிருந்தனர்.
ஐந்நூற்றுவர் அமைப்பில் இடம்பெற்றிருந்த பிற வணிககக் குழுக்கள் பற்றிய பட்டியலும் கல்வெட்டுகளில் இடம்பெறுகிறது. ஐந்நூற்றுவர் கல்வெட்டுகளில் மன்னர்களின் பெயர்களைக்கூடக் குறிப்பிடவில்லை. மன்னன் இவர்களுக்கு அளித்திருந்த தன்னாட்சி அதிகாரம் இதன் மூலம் புலனாகிறது.