தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டம் வட்டத்தில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்ற கொற்கை. முற்காலத்தில் பாண்டியர்களின் முத்துக்குளி துறைமுகமாக இருந்துள்ளது. கொற்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. இங்கு கிழக்கத்திய சாமி கோயில் என்று ஒரு பீடம் மட்டும் காணப்படுகிறது.
வாழவல்லானைச் சேர்ந்த திரு.பக்கிள் என்பவரின் குடும்பத்தவர் ஓர் ஓலைச் சுவடிக் கட்டினை என்னிடம் கொண்டு வந்தனர். அந்த ஓலைச் சுவடியில் கட்டளைக் கலித்துறையில் அமைந்த 70 பாடல்கள் காணப்பட்டன. அச்சுவடி யில் எழுதப்பட்டிருந்த பாடல்களை அவ்வூரில் வெகுகாலமாக பாடிக் கொண்டிருந்ததாகவும், பின்பு அது நிறுத்தப்பட்டு விட்டதாகவும், தற்போது அதில் என்ன எழுதியிருக்கிறது என்பது தங்களுக் குப் புரியவில்லை என்றும், அதைப் படித்து எழுதிக் கொடுத்தால் மீண்டும் பாட ஆரம்பித்து விடுவோம் என்றும் தெரிவித்தனர். நான் அதைப்படித்து எழுதியும் கொடுத்தேன். மீண்டும் அவர்கள் அதைப் பாட ஆரம்பித்ததோடு மட்டுமில்லாமல் ஒலி நாடாவில் பதிவு செய்து விற்பனையும் செய்தனர்.
அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருப்பது எனக்கு ஒரு அருமையான சரித்திரப் பதிவாகவே தோன்றுகிறது.
கிழக்கத்தியசாமி என்பவன் தஞ்சை நாயக்கர்களின் வம்சமான கவரா நாயுடு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன். தஞ்சை நாகபுரம் என்ற பட்டினத்தை ஆண்டு கொண்டிருந்த இராமநாயக்கருக்கும், இராமக்காள் என்ற பெண்மணிக்கும் இராமேஸ்வரம் கோயில் இறைவன் அருளால் பிறந்தவன். அவன் குழந்தையாக இருந்த போது உலக அனுபவத்தைக் கற்பிப்பதற்காக இலாட சந்நியாசிகள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்குச் செல்கின்றனர். அப்பயணத்தின் போது கொற்கைக்கு வர, அப்போது கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னன் “நன்றாக இருக்கிறான் பிள்ளை நான் இவனை வளர்க்கிறேன்” என்று இலாட சந்நியா சிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறான்.
மன்னன் கேட்கிறானே என்பதால் இலாட சந்நியாசிகளும், அக்குழந்தையைக் பாண்டியனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விடுகின்றனர். பாண்டியனோ வஞ்சகமாக அக்குழந்தையைக் கொன்று, கொற்கையிலுள்ள வன்னி மரத்தடியில் புதையலுக்குக் காவலாகப் புதைத்து விடுகிறான். இதனை ‘வன்னிமரத்து முனி ‘ கவனித்துக் கொண்டிருக்கிறது. அந்த முனியின் சாபத்தால் பாண்டிய வம்சமே அழிந்து போய் விடுகிறது. பலருக்கு இந்த கொடுமை தெரியவில்லை. ஒரு மந்திரவாதி அக்குழந்தையின் ஆவியை எடுத்து ஒரு மாமரத்தில் ஆணி அடித்துக் குடி வைத்து விடுகிறான்.
இதற்கிடையில் கரையாளர்கள் என்னும் நற்குடி வேளாளர்கள் (திருவைகுண்டம் கோட்டை பிள்ளைமார்களின் பங்காளிகள்) கொற்கைக் காணியாளர்களாக ஆகி விடுகின றனர். அவர்கள் வாழவல்லானில் பால்குல நாடாள்வான் என்பவர் குடியேறிய போது ,அவருக்கு அந்த மாமரத்தை விற்று விடுகின்றனர். அவர் அதில் ஆவி குடியிருப்பது தெரியாமல் அதை அறுத்து தான் கட்டிய வீட்டில் பயன்படுத்தி விடுகிறார். மரத்தில் குடியிருக்கும் ஆவி வெளியேற்றப்படாததால் ஊருக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்து விடுகிறது.
அதற்குக் காரணம் புரியாமல் திகைத்த ஊர் மக்கள் குறி கேட்டும் போது, ஒரு குறத்தி காரணத்தைச் சொல்கிறாள். அநியாயமாகக் கொல்லப்பட்ட கிழக்கத்தியான் என்ற குழந்தையின் ஆவிதான் இவ்வாறு அட்டகாசம் செய்கிறது. இதற்கு ஒரு பீடம் அமைத்துக் கொடுத்து வழிபட்டால், எல்லாம் சரியாகி விடும் என்கிறாள். அதன் படியே கிழக்கத்திய சாமிக்கு வாழவல்லானில் பீடம் அமைத்து வழிபடுகின்றனர்.
இதுதான் அந்தச் சுவடியில் இருந்த கதை. நான் சுவடியைப் படித்து எழுதிக் கொடுத்த பின் கொடை விழாக்களில் அதைப்பாடி அப்பகுதி மக்கள் வழிபடு கின்றனர்.
இந்தக் கதைப் பின்னணியில் என்ன வரலாற்று உண்மை மறைந்திருக்கிறது என்று பார்த்தால், தஞ்சை கவரை இரகுநாத நாயக்கருக்கு மூத்த மகன் ஒருவன் இருந்திருக்கிறான் என்பதும், அவன் பெயர் இராமபத்ர நாயக்கன் என்பதும் என் நினைவுக்கு வந்தன. என்ன காரணத்தாலோ இராமபத்ர நாயக்கன் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் நாகபட்டினம், தரங்கம்பாடி முதலிய கடற்கரைப் பகுதிகளில் நாயக்க மன்னனின் கடற்படையின் முழுக் கட்டுப்பாடு இவனிடம் இருந்திருக்கிறது. இதைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஆனால் இவன் என்ன ஆனான் என்று எதுவும் தெரியவில்லை.தஞ்சை நாயக்கத்தனத்தின் ஆட்சி பீடத்திற்கு வரவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பதிலாக இவன் தம்பி விஜய ராகவ நாயக்கன்தான் ஆட்சிக்கு வருகிறான்.
இராமபத்ர நாயக்கனின் ஓவியம் தஞ்சை பெரிய கோயிலில் இருக்கிறது. இவன் இலங்கைக்குக் கடற்படையோடு சென்ற செய்திகளும் சில இலக்கியத் தரவுகளாகக் கிடைக்கின்றன.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது, நம் கதை நிகழ்வுகளோடு இவை பொருந்தி வருவதைக் காணலாம். நாகபுரம் என்ற பட்டினத்தை ஆண்டு கொண்டிருந்த இரகுநாத நாயக்கரின் மூத்த மகனான இராமபத்ர நாயக்கனின் புதல்வனே இந்தக் கிழக்கத்திய சாமி பாண்டிய மன்னனால் மகன் கொலையுண்டதால் மனமுடைந்து இராமபத்ர * நாயக்கன் இறந்திருக்கலாம். அதனால் அவன் தம்பி விஜயராகவ நாயக்கன் பட்டத்திற்கு வர நேர்ந்திருக்கலாம்.சிந்தித்துப் பார்த்தால், கிழக்கத்திய சாமியின் தந்தை வழி பாட்டி அதாவது இரகுநாத நாயக்கரின் மனைவி, பாண்டிய குலப்பெண்ணாகிய = களாவதியாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவள் வேம்பராசன் (வேப்பம்பூ மாலை சூடுபவன்) என்ற பாண்டிய மன்னனுடைய மகள். முக்களாலிங்கர் என்பது கரிவலம் வந்த நல்லூர் இறைவன் பெயர். களாமரம் இக்கோயிலின் தல விருட்சம் (இக் கரிவலம் வந்த நல்லூரிலேயே வரதுங்கராம பாண்டியன் இருந்துள்ளான். கருவை பதிற்றுப் பத்தந்தாதி என்ற நூலே இவனால் இயற்றப்பட்டுள்ளது) இதை வைத்தே வேம்பராசனின் மகளுக்குக் களாவதி என்ற பெயர் சூட்டப்பட்டது. பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சியின் இறுதி காலத்தில் பலமிழந்து தஞ்சை நாயக்கர்களுடன் மணவுறவு கொள்ள வேண்டிய சூழல் ஏற்ப்பட்டது. இந்தக் களாவதியை இரகுநாத நாயக்கருக்கு மணமுடித்துக் கொடுத்து, தஞ்சை நாயக்கருடன் பாண்டியன் உறவு கொண்டிருக்க வேண்டும்.
அதனால் தான் இலாட சந்நியாசிகள் அந்தப் பிள்ளையைக் கொண்டு வந்து பாண்டிய இராஜாவிடம் விட்டுச் செல்கின்றனர். இல்லையென்றால் தஞ்சை நாயக்கர் குலப் பிள்ளையைக் கொற்கைப் பாண்டியனிடம் கொண்டு வந்து விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாண்டியன் இந்தப் பிள்ளையை வஞ்சகமாகக் கொன்றிருக்கக் காரணம் என்னவென்றால், பாரம்பரியம் மிக்க தங்கள் பெண்ணை தஞ்சை கவரா நாயுடு குலத்தில் மணமுடித்துக் கொடுக்க வேண்டியது வந்ததே என்ற வன்மம், தொன்மையான பாண்டிய வம்சாவழியில் வந்த ஒரு மன்னனுக்கு இருந்திருந்தால் அதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் பாண்டியர் ஆட்சி யே இக்காலக்கட்டத்தில் ஒடுங்கிப்போய், கடைசி பாண்டிய அரசன் ஒரு சிற்றரசனைப் போல, கொற்கையில் வந்து சில ஊர்களை மட்டும் ஆண்டு கொண்டிருந்திருக்கிறான்.
இன்றும் கொற்கை என்பதே பாண்டிய வம்சாவழி என்று உரிமை பாராட்டும் உமரிக்காடு நாடார்களுக்குப் பாதியும், நற்குடி வேளாளர்களுக்கு பாதியும் என்று பிரிந்து கிடக்கிறது. மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் அதாவது இக்கதையின் காலப்பகுதியில் நற்குடி வேளாளர்கள் கொற்கைக் காணியாளர்களாக ஆகி விடுகிறார்கள். இதற்குச் செப்புப் பட்டய ஆதாரம் உள்ளது.
கொற்கைக் குளத்தின் நடுவில் தான் ‘வெற்றி வேலம்மன்’ என்று வழங்கப்படும் கண்ணகி கோயில் இருக்கிறது. இந்தக் குளத்தின் பாசன உரிமை, பாதி உமரிக்காடு நாடார்களுக்கும் பாதி நற்குடி வேளாளர்களுக்கும் என்பது தான் ஒப்பந்தமே இந்த ஒப்பந்தம் இன்று வரை பின்பற்றப்படுகிறது.
மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்க பாண்டிய குலத்தின் தற்போதைய நிலை பற்றிய விரக்தியும் நாயக்கர்களின் எழுச்சி பற்றிய வஞ்சமுமே பாண்டிய மன்னன் கொலைக் குற்றவாளி ஆவதற்கு காரணங்களாக இருந்திருக்க வேண்டும்.
கிழக்கத்திய சாமி கதையின் ஆரம்பப் பாடல்களில் வாழவல்லானில் இருக்கும் இந்தப் பீடத்தை வழிபடுபவர்கள் எங்கெங்கோ சுற்றியலைந்த பிறகு இந்த ஊருக்கு வந்ததாக ஒரு குறிப்பு இடம் பெறுகிறது. அப்படியென்றால் அவர்கள் ஏதோவொரு வெளியூரிலிருந்து ஏதோ வொரு காரணத்தால் குடிப்பெயர்ச்சி ஏற்பட்டு, இறுதியாக இங்கு வந்து நிலைத்து குடி புகுந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று ஆராயப் போனால் இந்தக் கிழக்கத்தியசாமி பீடத்தில் குளிக்கரை பேய்ச்சி என்ற தெய்வத்திற்கும் ஒரு பீடம் இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
குளிக்கரை என்பது திருவாரூர்ப் பக்கத்தில் உள்ள ஓர் ஊராகும் (குளிக்கரைப் பிச்சையப்பா என்ற இசை வல்லுநரைக் கூட சங்கீத இரசிகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்)
திருவாரூர் பகுதியிலிருந்து இவர்கள் குடிபெயர்ந்து வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியென்றால் அந்தக் குடிப்பெயர்ச்சிக்கும், கிழக்கத்திய சாமிக்கும் தொடர்பிருக்கலாமா? கொலையுண்ட கிழக்கத்திய சாமியின் (இராமபத்ர நாயக்கனின் மகனின்) காலத்திற்குப் பிறகு ஒரு குடிப் பெயர்வு ஏற்பட்டு இவர்கள் இங்கு வந்திருக்கலாமா? என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
இராமபத்ர நாயக்கன் தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடற்படைத்தளம் நாகப் பட்டினம், தரங்கம்பாடி பகுதியாகும். குளிக்கரையும் இவ்வட்டாரத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
வாழவல்லானில் குளிக்கரைப் பேய்ச்சியை வழிபடுபவர்கள் பாண்டிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நேரடியாக தொடர்புபடுத்த முடியவில்லை. ஆனால் இவர்கள் நாடார் என்னும் சான்றோர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குளிக்கரைப் பகுதியிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றால்,என்ன காரணத்திற்காக அந்தக் குடிப்பெயர்ச்சி ஏற்பட்டிருக்க முடியும்?
இராமபத்ர நாயக்கரின் மகன் கொலையுண்டதற்கும் இந்தக் குடிப்பெயர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாமா? பாண்டியனால் இராமபத்ர நாயக்கனின் மகன் கொலை செய்யப்பட்டதால், பாண்டியர் குல களாவதியுடன் உறவுடைய, தஞ்சை நாயக்க அரசின் கீழ் அதிகாரிகளாக இருந்த நாடார் குலத்தவர் சிலரைப் பழி தீர்க்க, தஞ்சை நாயக்கர்கள் விரட்டியடித் தார்களோ என்று சிந்தித்தால் ஓரளவு தெளிவு கிடைக்கிறது.
இராமபத்ர நாயக்கன் பதவிக்கு வராமல், அவனுக்குப் பதிலாக ஆட்சிக்கு வந்த, அவனது தம்பியான விஜயராகவ நாயக்கனின் கல்வெட்டு ஒன்று திருவாரூரில் கிடைத்துள்ளது. அக் கல்வெட்டில் காணும் செய்தியில் இவ்வாறு ஊகிப்பதற்கு அடிப்படையான ஒரு குறிப்பு உள்ளது.
இந்திய அரசின் தொல்லியல் துறையின் 1919 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் (Annual Report on Epigraphy 1919/681) செய்யப்பட்டுள்ள அந்தக் கல்வெட்டு 1552 இன் மேற்செல்லா நின்ற பிரஜோற்பத்தி வருடத்தியது ஆகும். அதாவது கி.பி 1630-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.
இக்கல்வெட்டில் விஜயராகவ நாயக்கன் ஆட்சி காலத்தில் ‘முகதமா கிழார்’ என்ற ஒருவரிடம் திருவாரூர் கோயிலின் நகைகள் செப்புச் சிலைகள் முதலியவை வைக்கப்பட்டிருந்த பொற்பண்டாரத்தின் திறவுகோல் இருத்ததாகவும், அதனால் சில சிக்கல்கள் எழுந்ததாகவும் எனவே, அந்த நிலைமையை மாற்ற முகதமா கிழாரிடமிருந்து சில அதிகாரங்கள் பறிக்கப்பட்டு வேறு ஒருவரிடம் கொடுக்கப் பட்டதாகவும். பொருள் கொள்ளக் கூடிய வகையில் வாசகங்கள் அமைந்துள்ளன.
‘முகதமா’ என்ற சொல் ‘முக்கந் தமார்’என்று தமிழில் வழங்குகிறது. இது நாடார் குலப்பிரிவு ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட பட்டமாக பயன்படுத் தப்படுகிறது. (இதைப் பற்றி விரிவாக எனது “வலங்கை மாலையும்.சான்றோர் சமூகச் செப்பெடு களும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளேன்) ‘முகதமா’ என்பது ‘தமாமுக்ய’ என்ற சமஸ்கிருதச் 1 சொல்லின் திரிபாகும் ‘ குடியிருப்புத் தலைவர்’ என்று இதற்குப் பொருள்.நடுவர் என்ற பொருளில் மராட்டிய மொழியில் ‘முகதம்’ என்ற சொல் சரிசெய்ய, ஆர்பிட்ரேட்டர் (Arbitrator) என்று இருப்பதுண்டு. பிரசனைகளில் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கும் நடுவர் என்ற பொருளில் இச்சொல் மராட்டிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
மராட்டிய மொழியில் முழுமையான ஒரு நீதிபதியாக இல்லாமல் வழக்குகளில் நடுவிருக்கை (மத்தியஸ்தம்) செய்பவரை இச்சொல் குறிக்கும். – உதாரணமாக, தொழில் தகராறுகள் போன்றவற்றைச் சரிசெய்ய, ஆர்பிட்ரேட்டர் (Arbitrator) என்று இருப்பதுண்டு. பிரச்னைகளில் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கும் நடுவர் என்ற பொருளில் இச்சொல் மராட்டிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
‘முகதமா கிழார்’ என்ற பொறுப்பு நீதித்துறையின் அதிகாரம் சார்ந்த ஒரு கோயிலதிகாரியைக் குறிப்பதாக இருந்திருக்கலாம். திருவாரூருக்கு அருகில் ‘முகுந்தனூர்’ என்ற ஊர் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கிராம நிர்வாக அதிகாரி (VAO) போன்ற பதவிகள் 1980 இல் அமலுக்கு வருவதற்கு முன்பு இவ்வூர் கிராம முன்சீபாக நாடார் குலத்தவர் ஒருவரே இருந்தார். இது பரம்பரையாக வரும் பதவியாகும் இவற்றை யெல்லாம் இணைத்துப் பார்க்கும் போது திருவாரூர் கோயிலில் முகதமா கிழார் என்ற பதவி வகித்தவர் சான்றோர் குலத்தவராக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.விஜயராகவ நாயக்கன் காலத்தில் திருவாரூர் தியாகராஜ முதலியார் வம்சம் எனப்படும் தொண்டை மண்டல வேளாளர்கள் முதன்மையான பதவிக்கு அங்கு வந்திருக்க வேண்டும். இன்னும் திருவாரூர் கோயிலில் தொண்டை மண்டல வேளாளர் களுக்கு முதன் மையான அதிகாரம் உண்டு. இந்த மாற்றம் விஜயராகவ நாயக்கன் காலத்தில்தான் வந்திருக்க வேண்டும்.
விஜயராகவ நாயக்கன் காலத்தில் நடந்த முகதமா கிழார் என்ற சான்றோர் குலத்தவரின் பொற்பண்டாரப் பதவி பறிப்பு, குளிக்கரைப் பேய்ச்சியை வழிபாடு செய்த நாடார் குலத்தவரின் குடிப்பெயர்ச்சி எல்லாம் கிழக்கத்திய சாமியின் கொலையினால் ஏற்பட்ட பின் விளைவுகளாக இருந்திருக்கக் கூடும். வாழவல்லானில் குளிக்கரைப் பேய்ச்சி என்ற தெய்வத்தை கிழக்கத்திய சாமிக்கு நிறுவப்பட்ட பீடத்தில் அருகில் வைத்து வழிபாடு செய்வதும் இதனாலேயே இருக்க வேண்டும்.
விஜயராகவ நாயக்கன் கல்வெட்டுச் செய் தியும், வாழவல்லானில் சான்றோர் குலத்தவரின் குடியேற்றமும் குளிக்கரைப் பேய்ச்சி வழிபாடும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு டையனவாகவே தோன் றுகின்றன.கொற்கை (உமரிக்காடு) வாழவல்லான் முதலிய ஊர்கள் பாண்டியக் குல சான்றோர் சமூகத்தவரின் முதன்மை யான குடியிருப்புகளாக இருந்ததாலேயே குளிக்கரை பகுதியிலிருந்து குடிப்பெயர்ந்து வந்தவர்களும் அங்கு குடியேறி யிருக்க வாய்ப் புள்ளது.
கொற்கைக்கு அருகில் ‘தீப்பாய்ச்சி’ என்று ஓர் ஊர் உள்ளது. அங்கிருக்கும் ‘பெத்தநாச்சி அம்மன்’ கோயிலில் வழிபடுகிறவர்கள் தீப்பாச்சி நாடார்கள் (பெத்தநாச்சி என்பதே பெரியநாயகி என்று பொருள்படும் தெலுங்கு மொழி வழக்காகும். தஞ்சை நாயக்கருடன் மண உறவு கொண்ட பாண்டிய குலப் பெண்மணியை இது குறிக்கக் கூடும்) ஆனால் அக்கோயில் பூசாரி கவரா நாயுடு இனத்தைச் சேர்ந்தவர். இதுவும் நம் கவனத்தை ஈர்க்கிறது.
எல்லா சாத்தியக் கூறுகளையும் வைத்து விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்றால் நாம் மேற்கண்ட முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. எவ்வாறாயினும் கிழக்கத்திய சாமிக் கதை வெறும் கற்பனையான ஒன்று அன்று என்பதை உறுதியாகக் கூற இயலும்.
எஸ். ராமச்சந்திரன்.
====
நாட்டார் பாடல்கள் வரலாற்றில் பல முன்மொழிவுகளை நமக்கு தருகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு வரலாற்றுக்கு நம்பகத் தன்மையுடைய தகவலை தருகின்றனவா என்றால், மிகக் குறைவே.
தஞ்சை நாயக்கரான ரகுநாத நாயக்கருக்கும், ஒரு பாண்டிய இளவரசியை மணந்தார் என தஞ்சை ரகுநாதநாயக்கரின் அவைக்கள புலவர்களில் ஒருவரும், அவரின் அணுக்கியுமான, ராமபத்திராம்பா (Ramabhadramba) என்ற பெண்பாற்புலவரால் எழுதப்பட்ட நூல் “ரகுநாதப்யுதயம்” கூறுகிறது.
தஞ்சாவூர் நாயக்கரான ரகுநாத நாயக்கரின் மகனான, ராமபத்ரா நாயக்கரை அவர் பதவி ஏற்கும் முன்பே பாண்டியர்கள் தங்கள் நாட்டுக்குக் கடத்தி வந்து, பாண்டியருக்கும், நாயக்கருக்கும் பிறந்த கலப்பு குழந்தையைக் கொன்று, தங்கள் பாண்டியர் குலத்தின் மேல் ஏற்பட்ட களங்கத்தை போக்கிக் கொண்டனர் என்று தங்களின் நட்டார் பாடல்கள் கூறுவதாக கருதுகின்றனர்.
ஆனால், ரகுநாத நாயக்கரின் மகன் ராமபத்ர நாயக்கர் தஞ்சையின் அரியணை ஏறி 3 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார் என்று டென்மார்க்கு ஆவணங்கள் கூறுகின்றன. டென்மார்க்கு அரசன் நான்காம் கிறிஸ்டியன் ராமபத்ர நாயக்கருக்கு அனுப்பிய கடிதத்தில், ரகுநாத நாயக்கரைக் குறிப்பிடாமல், இவரை குறிப்பிட்டு “உயர் குலத்தில் பிறந்தவரும், தஞ்சை ஆளும் ராமபத்ர நாயக்கோ” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, ராமபத்ர நாயக்கர் தஞ்சையை 1626-31 வரை ஆண்டுள்ளார் என்பது திண்ணம். குடும்ப சண்டையில், ராமபத்ர நாயக்கர் தனது தம்பியால், கண்கள் குருடாக்கப்பட்டு சிறையிலேயே மடிந்துவிடுகின்றார். வரலாற்றில் ராகவ நாயக்கர் தனது இரு சகோதர்களை சிறையில் அடைத்தார் என்ற குறிப்பு வருகின்றது.
மேலும், தேனி திண்டுக்கல் பெரியகுலம் பகுதியைச் சேர்ந்த இன்னொரு ராமபத்ர நாயக்கர், நாகம நாயக்கருடன் வந்த அவரின் நம்பிகைக்கு உரிய சொந்தக்காரரான பலிஜ வம்சத்து வடகரை ஜமீனை சேர்ந்தவர். இவர் நாகம நாயக்கரின் படைகளின் தளபதியாக Foujdar ஆக செயல்பட்டு பல போர்களில் நாகம நாயக்கருக்கு வெற்றி வாகை சூடிக் கொடுத்தவர். எனவே, நாட்டார் பாடல் குறிப்பிடும் நபர் இவர் இல்லை. ரகுநாத நாயக்கரின் கடைசி குழந்தையான செங்கமல தாஸ் தஞ்சாவூர் அரியணை ஏறி பின்பு அதிகாரம் பறிக்கப்பட்டு, மராத்தியரின் பாதுகாப்பில் இருந்துள்ளார். அதன் பின் தஞ்சை ஆளும் அதிகாரம் மராத்தியர் வசம் சென்றது.
மற்றொரு ராமபத்ர நாயக்கர் செஞ்சி நாயக்க அரசோடு தொடர்புடையவர், அதனை தோற்றுவித்தவர் எனக் கருதப்படுகின்றார்.
மேலும், “வதி” என்று முடியும் பெயர்கள் வைக்கும் வழக்கம் தெலுங்கு வழக்கு. எனவே கலாவதி பாண்டிய இளவரசியாக இருக்கும் வாப்பு குறைவே. எனவே ராமபத்ர நாயக்கர் நாயக்க பாண்டிய உறவில் பிறந்தவர் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. இரகுநாதனின் மனைவியர்
செங்கல்வ காளகவி தான் எழுதிய இராஜகோபால விலாசமு எனும் தெலுங்கு நூலில்
“அட்டி மஹிமகு உனிகி பட்டயினயட்டி
கனுநகு அச்சுதரகுநாத மனுஜபதிகி கரிமமீற கலாவதி கமலநயன
ராண கனுபட்டெ பட்டபு ராணியகுசு”
விஜயராகவ நாயக்கர் எழுதிய இரகுநாத நாயகாப்யுதயமு சுவடியின் ஓர் ஓலை – கலாவதியை பட்டத்தரசி எனும் கூறும் பகுதியுள்ளது.
என்று கூறியுள்ளார். இதனால் இரகுநாத நாயக்கரின் பட்டத்தரசியாக விளங்கியவன் கலாவதி என்பது அறிகிறோம். மேலும் இதே நூலில் காணப்பெறும் மற்றொரு பாடலின் வாயிலாகக் (பா.எண்-59) கலாவதி, இரகுநாத நாயக்கர் தம்பதிகளுக்கு அச்சுத ராமபத்ரனும், விஜயராகவனும் மகன்களாகப் பிறந்தனர் என்பதும் உறுதியாகின்றது.
நாராயணணுக்கு எவ்வாறு திருமகள் பட்டத்தரசியாக விளங்குகின்றாளோ அதேபோன்று வேம்பராஜன் லெக்ஷ்மாம்பா தம்பதியர்க்கு மகளாய்ப் பிறந்த கலாவதி இரகுநாத நாயக்கருக்குப் பட்டத்தரசியாய் விளங்கி விஜயராகவனைப் பெற்றெடுத்தாள் என்பதனை
‘ஆரகுநாதநாயக சிரோமணிகி
நாரீல்லாமயை நாராயணுனகு பட்டபுராணியெள பால முன்னீடி பட்டிகி ஸாடியெள பரம கல்யாண குணரத்ன கனியனி கோவிதுல் பொகட ப்ரணுதி கைகொனி வெம்பராஜ சந்த்ருனகு பரகு லக்ஷ்மாம்பகு பட்டியை புட்டி பரம பதிவ்ரதாபரணமை மிஞ்சு லாவண்யபதிகி களாவதீ ஸதிகி
யாவிர்பவிஞ்சி நீவபிவ்ருத்தி நொந்தி விஜயராகவ நாம விக்யாதி காஞ்சி
என்று இரகுநாதநாயக்காப்யுதயமு எனும் விஜயராகவனின் துவிபதை காவியம் கூறுகின்றது. இரங்காஜம்மா எனும் பெண்பாற்புலவர் எழுதிய உஷாபரிணயமு எனும் நூல், இரகுநாத நாயக்கருக்குச் செஞ்சி லக்ஷ்மம்மா, கலாவதி என்ற இரண்டு பட்டத்தரசியர் திகழ்ந்தனர் என்றும், தேவகி போன்ற கலாவதியின் வயிற்றில் கிருஷ்ணன் போன்ற இரகுநாதன் பிறந்து சயசோதை ஒத்த செஞ்சி லக்ஷ்மம்மாவால் வளர்க்கப் பெற்றான் என்றும் கூறுகிறது. இதனைக் கூறும் சீசபத்யம், கீதபத்யம் என்ற இலக்கண அமைதியுடைய பாடல்கள் பின்வருமாறு குறிக்கின்றன.
தனரன் ஆரகுநாத தரணீ சவருடு செஞ்சி லக்ஷம்மம யல்ல களாவ தெம்ம பட்டம் புராணுலை ப்ரலி ஸேவ யொனர்ப்
குலமெல்ல வெலயிஞ்சு கொடு குவலயஸி
தான தர்மம் புலு தபமுலு ஸலு புசு
கஸ்தூரி க்ருஷனுனி கனித வேட்
நல செஞ்சி லக்ஷ்மம்ம கலலோன கஸ்தூரி க்ருஷ்ணுடிட்லனெ பூர்வவ் விருத்தமொகடி
நீவு தெல்தனு தேவ கீதேவி வரய ஸாடிலேனி களாவதீஸதி யசோத
யல்ல வஸூ தேவ நந்துல யாத்ம விசட நெகடெ நச்யுத ரகுநாத ந்ரு பதியனக
அலவஸுதேவுன காத்மஸம் பவுடனை மந்தலோ பெருகண்க நந்து கிண்ட தப மூலு ஜேஸயே தனயுனி காஞ்சிதி பாலலீல் யசோத பாக்ய மய்யெ
நனி தலம் புசு நுண்டிவி அடுகான நிப்புடே நொகி களாவதியம்ம யுதர மந்து நுதயிந்து ஸந்தோஷ மொதவண்க நீவுனு கனத புத்ரஸ் வீக்ருதினி நெனாசி
விசைய ராகவுடனுபேர வெலய ஜேஸி நன்னு போஷி ஞ்சி இபுடு நானந்த மொந்து மனுசு பல்கங்க பேல்கனி ஷர்ஷமந்தி வெலய லக்ஷ்மம்ம விபுனகு விண்ணவிம்ப
இப்பாடல்களால் இரகுநாத நாயக்கருக்குக் கலாவதி, லக்ஷக்ஷ்மம்மா (செஞ்சி நாயக்கரின் மகள்) என்ற இரு தேவியர் இருந்தனர் என்பதும், கலாவதியின் மகனான விஜயராகவன் லெக்ஷ்மம்மாவால் வளர்க்கப் பெற்றான் என்பதும் அறியப்படும் செய்திகளாகும்.
இரகுநாதனின் அவைக்களப் புலவரான இராமபத்ராம்பா எழுதிய இரகுநாதாப்யுதயம் எனும் சம்ஸ்கிருத நூலில் பாண்டியர் (மதுரை நாயக்கர்) மகளொருத்தியை மன்னர் இரகுநாதன் மணந்ததாகக் குறித்துள்ளார். இதே செய்தியை விஜயராகவ நாயக்கர் தன் இரகுநாதாப்யுதயமு எனும் தெலுங்கு நூலில் தோப்பூர் போரில் தோல்வியுற்ற மதுரை நாயக்கர் (வீரப்ப நாயக்கர்) தனது மகளை இரகுநாதனுக்குப் பரிசுப் பொருள்களோடு அளித்ததாகக் கூறுகின்றார். யக்ஞநாராயண தீட்சிதர் சாகித்யரதனாகரத்தில் இரகுநாதன் பல அரசமகளிரை மணந்தார் என்ற குறிப்பைக் காட்டுகின்றார். கலாவதி, லெக்ஷ்மம்மா என்ற இருவரின் உருவச் சிலைகளும் கும்பகோணம் இராமசாமி கோயில் முன் மண்டபத்துத் தூண்களில் உள்ளமையை இன்றும்.
தஞ்சை நாயக்கருக்கும் பாண்டிய இளவரசிக்கும் பிறந்த குழந்தையை பாண்டியரின் குலப்பெருமையை காக்க கொல்லப்பட்டதாக கூறப்படும் கதை கொடூரக் கற்பனை கலந்த ஒன்றாகவே இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, கிழக்கத்திய சாமியின் சமாதி என வணங்கப்படும், அந்த நினைவிடம் மதுரையை படைப் பிரிவை சேர்ந்த ஏதேனும் ஒரு கவரை நாயக்க இளவரசனின் நினைவிடமாக இருக்கலாம்.
மேலும், ஒரு குழந்தையைக் கொன்று பழி தீர்க்கும் அளவுக்கு பாண்டியரின் குலம் தாழ்ந்தது அல்ல என்பதை அறிக. இது பாண்டியரின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் கருத்து என்றே கூறலாம்.
வரலாற்றில் தங்களின் தடம் தெரியாமல் இருக்கும் பலரின் வரலாறு, இவ்வாறு சூறையாடப்படுகிறது என்பதை அறிக.
Source: Thanjavur Nayakas – Kudavoyil Balasubramanian