நடு நாட்டு நாரையூரில் சிறுபாக்கம் ஏரியில் மதகினை ஏற்படுத்திய “கவரா மொழியான் நரையூர் கூற்றத்தெந் செட்டி” என்ற கல்தூம்பு கல்வெட்டு வாசகம் கூறுகிறது. கவரா மொழியான் நாரையூர் கூற்றத்து செட்டி என்பதால் முதலில் அதனை கவரை என்று நினைக்க தோன்றியது. ஆனால், “கவரா மொழியான்” என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருள் வரும் எனவே அது கவரைகளை குறிக்காது” என்றார் அந்த கல்வெட்டு பற்றி ஆவணத்தில் பதிவிட்ட எனது தந்தை திரு. பாண்டுரங்கன். இவன் வாலிகண்டபுரத்தை அடுத்துள்ள, பாலம்பாடியைச் சேர்ந்த செட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இடைக்காலத்தில் வாலிகண்டபுரம் வணிகத் தளமாகத் திகழ்ந்தது.
கோப்பரகெசரி பன் மற்கு யாண்டு 3ஆவது ஆளி சிறுபாக்கத்து வடசேரிச் செக்கின் தென் மேல் பாட்டிற் கற்றூம்பு இடுவித்தேன் வன் [வண்] இட்டு பாலம்பாடி உடைய கவரா மொழியான் நரையூர் கூற்றத்தெந் செட்டி பெ…
அதன் பொருள் என்னவென்று தேடிய பொழுது, கப்பற் கோவை என்ற நூலில் “கவரா மொழித்திருமால் கரு மாணிக்கன்” என்ற பாடல் வரி வருகிறது.
அதன் பொருள், கவரா என்றால் பிளவுபடாத, மாறாத என்ற பொருள்கள் வருகின்றது என்கிறார் நூலில் ஆசிரியர். இங்கு வாசகத்திற்கு மாறாத என்ற என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாத மொழியான் (கொடுத்த வாக்கை மாற்றாதவன்) என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஆழ்வார் ஸ்ரீ சடகோபர் தாம் அருளிய திருருவாய்மொழி என்னும் பிரபந்தத்தில் பல இடங்களில் திருமாலைக் “கருமாணிக்கமே” என்று அழைத்துள்ளார். எனவே, கப்பற் கோவையின் பாட்டுடைத் தலைவன் வைணவனாக கருத இடமுள்ளது.
கவரை, என்ற சொல்லும் சங்கினைப் பிளவு செய்தல் என்பதைக் குறிக்கிறது. வேறு சில கவறைகளின் கல்வெட்டுகளில் கவரா நின்ற என்ற சொல் வரும். அதன் பொருள், திருட்டை (களவு -கவர்தல் ) தடுத்த என்ற பொருளில் வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் முதலாம் ராஜராஜசோழர் கால கல்வெட்டு (1010) “கவரா நிற்கக் கவராமல் பட்ட வள்ளுவனான மணியனான கவறை இகற்சி மயில் ஒப்பன்” எனக் கூறுகிறது. கன்னட, தெலுங்கு, செங்கம் பகுதிகளில் களவின் போது, அந்த களவினை தடுத்த கவரை வணிக வீரரை பற்றி குறிப்புகள் வருகின்றன.
கல்வெட்டுகளில் பல பொருளை உடைய சொற்கள் வெகுவாக ஆய்வாளர்களைக் குழப்புகின்றன. இதனை சரியான ஆய்வுப் பாதையில் அணுகவேண்டியுள்ளது.