திருமுருகாற்றுப்படை அலைவாய் முருகன்
அலைவாய் என்னும் திருச்செந்தார்
இக்காலம்
திருமுருகாற்றுப்படை (78-125)
அலைவாய் முருகன்
முன்தொடர்ச்சி, திருமுருகாற்றுப்படை, பரங்குன்றத்துமுருகன் (62-77)
பின்தொடர்ச்சி, திருமுருகாற்றுப்படை, ஆவினன்குடிமுருகன் (126-176)
திருச்சீர் அலைவாய் எனப்பட்ட திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனின் சிறப்புக்கள் இதில் கூறப்படுகின்றன.
அலைவாயில் வாழ்தலும் முருகன் பண்பு என்கிறார் புலவர்.
19
யானை மேல் முருகன்
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர,
படு மணி இரட்டும் மருங்கின், கடு நடை, 80
கூற்றத்தன்ன மாற்று அரு மொய்ம்பின்,
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு
யானைமேல் முருகன் காட்சி தருவான்.
அந்த யானை கூர்மையானகொம்புகள் கொண்டது
அழகிய மடிப்புகளை உடைய நெற்றி கொண்டது
வாடாத மாலை கொண்டது
நெற்றி ஓடை அணியப்பெற்றது
செல்லும்போது அதன் இருப்பக்கமும் மணி ஒலிக்கும்
விரைந்த நடை கொண்டது
கூற்றம் போன்ற வலிமை கொண்டது
காற்றுப்போலச் சுழலக் கூடியது
அந்த வேழத்தின் மேல் முருகன் காட்சி தருவான்
20
தலை முடியில் திருமணி
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85
முருகன் தலையில் முடி அணிந்திருப்பான்
அதில் திருமணி பதிக்கப்பட்டிருக்கும்
அது ஐந்து வெவ்வேறு வகைப்பட்ட வேலைப்பாடுகளுடன் பட்டை தீட்டப்பட்டது
அது முடிப் பொன்னுக்கு முரணான நிறத்தோற்றம் கொண்டது
அது மின்னல் போல் அவன் தலையில் இமைக்கும்
(அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்- என்று இப்பாடலின் இறுதியில் வரும் வெண்பாவுக்குப் பொருள் கொள்ளும்போது அஞ்சுமுகம் என்பதற்கு இந்த ஐந்து பட்டை மணியையும் கொள்ளலாம்.)
21
காதில் பொலங்குழை
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப,
வகைப்படுத்திப் பொன்னால் செய்த குழைகளை அவன் தன் காதுகளில் அணிந்திருப்பான்.
அவை சிரித்த வண்ணம் தொங்கி ஆடிக் கொண்டிருக்கும்.
அவனது முகமாகிய வான மதியத்தைச் சூழ்ந்து அகலாதிருக்கும் விண்மீன் கூட்டம் போல் குழைமணிகளும் முடிமணிகளும் ஒளியுடன் விளங்கும்.
22
முருகன் நம் மனக்கண்ணில் முகம் காட்டுகிறான்
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே: 90
ஒளி பொருந்திய அவன் முகம் நம் மனவயலை உழுது தன் அழகைக் காட்டி எழுச்சி ஊட்டிக்கொண்டிருக்கும்.
யாருக்கும் துன்பம் தரக்கூடாது என்னும் தன் கொள்கைக்கு ஏற்பத் தொழிற்பட்டு நம் எண்ணத்தை முடித்துத் தர அவன் முகம் மலர்ந்துகொண்டிருக்கும்.
23
ஒளிதருமுகம் – ஆறுமுகம்
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,
ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் 100
குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;
ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின்
பேருலகம் களங்கம் இல்லாமல் விளங்குவதற்காக ஒருமுகம் கதிரொளிகள் பலவற்றைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. (வெப்பொளி)
ஆர்வம் கொண்டவர்கள் புகழ்வதால் விருப்பத்தோடு மழைபோல் அவர்களுக்கு ஒழுகும். அவர்களுக்குத் தன்மீது உள்ள காதலால் மகிழும். அவர்களுக்கு ஒருமுகம் வரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. (வரம்)
மரபிலிருந்து வழுவாத அந்தணர் மந்திரம் சொல்லிச் செய்யும் வேள்வியை ஒருமுகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. (உதவி)
இருளில் ஒளிதரும் திங்களைப் போல ஒருமுகம் பிறவற்றை யெல்லாம் விளங்கும்படி செய்து கொண்டிருக்கிறது. (தண்ணொளி)
எதிர்ப்போரைப் போரிட்டு வென்று ஒருமுகம் களவேள்வி செய்து கொண்டிருக்கிறது. (வீரம்)
களவு மனைவி வள்ளியைப் பார்த்து ஒருமுகம் சிரித்துப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறது. (காதல்)
இது முருகனின் அறுகோணப் பார்வை
ஞாலம்=விண்ணில் தொங்கி மிதக்கும் மீன்களும் கோள்களும்
வேள்வி = உதவியுமாம்
அந்தணர் என்போர் அறவோர்
குறவர் தெய்வமும் குறவர் மடமகளும்
24
முருகனின் மார்பும் தோளும்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய, மொய்ம்பின், சுடர் விடுபு, 105
வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்:
சந்தனப் பூச்சோடு முத்தாரம் தொங்கும் அவன் மேனியில் செம்புள்ளிகள் காணப்படும்.
அவை அவன் வாங்கிக் கொண்ட தழும்புகள்.
வளம் மிக்க அவனது இரண்டு தோள்களில் பன்னிரண்டு கைகள்.
பன்னிரண்டு கைகள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை, உக்கம் சேர்த்தியது ஒரு கை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை,
அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை 110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை
மார்பொடு விளங்க, ஒரு கை
தாரொடு பொலிய; ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை 115
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை
வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;
ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி
பொருள்:
- மாம்பழத்திற்காக விண்ணில் சென்று வந்தபின் ஒருகை தன் அண்ணனிடம் ஏந்தியது.
- ஒருகை தன் தோளில் இருக்கும் காவடியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.
- ஒருகை தன் தொடை ஆடையின்மேல் உள்ளது.
- ஒருகை தன் யானைமேல் அங்குசத்தை வீசிக்கொண்டிருக்கிறது.
- ஒருகையில் வேல்.
- ஒருகையில் பதின்மடி விசிறி.
- மார்பில் ஒருகை.
- ஒருகையில் மாலை.
- ஒருகையில் வளையல். \ வளயல் விற்கும் செட்டி
- ஒருகையில் மணி.
- ஒருகை மழை பொழிகிறது.
- ஒருகை தன்முன் நடனமாடும் வானர மகளிர்க்கு மணமாலை சூட்டிக் கொண்டிருக்கிறது.