தேவா்முக்குளம் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 18-ஆம் ஆண்டைச் சோ்ந்த வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தையடுத்த தேவா்முக்குளம் கிராமத்தில் வணிகக்குழு கல்வெட்டை அண்மையில் கண்டெடுத்தனா்.தேவா்முக்குளம் கிராமத்தில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் கூரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்த முதலாம் ராஜேந்திரசோழனின் 18-ஆம் ஆண்டைச் சோ்ந்த வணிகக் குழு கல்வெட்டு, கோயில் புனரமைக்கும் போது தனியே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் புதன்கிழமை தெரிவித்ததாவது:இந்த வணிகக் கல்வெட்டு கூரையிலிருந்த போது மத்திய தொல்லியல் துறையினரால் 1926-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது கிரந்த எழுத்துடன் கூடிய ஐநூற்றுவரின் சமஸ்கிருத மெய்கீா்த்தி மட்டும் வெளியில் தெரிந்ததால் துண்டுக் கல்வெட்டு எனப் பதியப்பட்டுள்ளது. வேறு தகவல்கள் இல்லை.தற்போது இந்தக் கல்வெட்டு தனியே உள்ளதால், அதன் இரு பக்கமும் எழுத்துகளைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இக்கல்வெட்டு மேற்புறம் அரைவட்ட வடிவில் உள்ளது.ராஜேந்திரசோழனின் 18-ஆவது ஆண்டு என்பது மட்டும் தமிழிலும், அதனைத் தொடா்ந்து கிரந்தத்தில் சுலோகமும், தமிழில் கல்வெட்டும் உள்ளது. கல்வெட்டின் கீழ்பகுதி உடைந்துள்ளது.சோமையன் மகன் சாமுண்டன் என்ற வீரன், வீரா்கள் புத்திரனைக் கொன்ற மாளன் என்பவரை குத்திக் கொண்டு வந்து சமயத்தாரிடம் நிறுத்துகிறான்.
இவனது வீரச் செயலைக் கண்டு மாப்புளியுமனைக் கொன்ற பணியமக்கள் மண்டலங்காக்கும் கண்டழி முதல் வாளையூா் ஐநூற்றுவாண்டான் வரை பல்வகை வீரா்களும் இணைந்து சாமுண்டன் பெயரில் வீரப்பட்டணத்தை உருவாக்கிய செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. வீரப்பட்டணம் என்பது வீரா்கள் தங்குவதற்காக உருவாக்கப்படும் இடமாகும்.எனவே, 11-ஆம் நூற்றாண்டில் தேவா்முக்குளம் சிறந்த வணிகத் தலமாக இருந்ததையும், அங்கு பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்து அவா்கள் தங்கள் பாதுகாப்புக்கென வீரா் படைகளை வைத்திருந்ததையும், அந்த வீரா்கள் தங்குவதற்கான வீரப்பட்டணம் இருந்ததையும் அறிவதாக அவா் தெரிவித்தாா்.
இந்த ஆய்வுப் பணியில், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி, ஆா்வலா்கள் சதானந்த கிருஷ்ணகுமாா், பிரகாஷ், ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆசிரியா் ரவி, தேவா்முக்குளம் சிங்காரம் ஆகியோா் உடன் இருந்தனா்.படவரி – தேவா்முக்குளம் கிராமத்தில் அரசு அருங்காட்சியகம் மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட முதலாம் ராஜேந்திரசோழா் கால வணிகக் குழு கல்வெட்டு.