வணிகர்கள் – இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

தமிழர் வணிகத் திறன் அறிய இலக்கியங்கள் கைகொடுக்கின்றன. சங்க காலக் கடைவீதிகளைக் காட்டும் மதுரைக்காஞ்சியும் தொடர்ந்து வரும் சிலப்பதிகாரப் படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டின் வணிகச் செழிப்பை விளக்க வல்லன. மதுரையின் பகல் அங்காடியும் அல்லங்காடியான இரவுக் கடைகளும் மலை, நிலம், நீரிடத்துப் பிறந்த பொருட்களால் நிறைந்திருந்தன. சிறு, பெரு வணிகர்கள் என விற்பாரும் அவர்கள் கொண்டிருந்த பொருட்களை வாங்குவாரும் என அங்காடியின் நான்கு தெருக்களிலும் கூட்டம் அலைமோதியது. மதுரைக் கடைவீதியின் பெருஞ்சிறப்பே அங்கு மகளிரும் கடை வைத்து வணிகம் செய்தமைதான். ‘காழ் சாய்த்து நெhடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர் ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர’ எனும் காஞ்சியடி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பெண்கள் வணிக ஈடுபாட்டுடன் இருந்தமை விளக்கும்.

புகாரில் பல தேசத்து வணிகர்களும் ஒரு தேயத்தார் போலக் கலந்து வாழ்ந்தமை காட்டும் சிலப்பதிகாரமும் கடைவீதிகளில் சுற்றிவருகிறது. இங்கு விற்பனையாளர்கள் கடைகளுக்குள்ளும் இருந்தனர். கைகளில் பொருட்களுடன் வீதிகளில் திரிந்தும் விலை கூவி விற்றனர். ‘பகர்வனர் திரிதரு நகர வீதியாக’ச் சிலம்பு இதைக் காட்டும். பட்டு, மயிர், பருத்தியால் செய்த உடைவகைகள் கடைகளை நிறைத்திருந்தன. மயிரால் செய்யப்பட்ட உடைகள் விலங்குத் தோலாடைகளைக் குறித்து நிற்கின்றனவோ என்று கருதவேண்டியுள்ளது. நறுமணப் பொருட்களை விற்றவரைச் சிலம்பு, வாசவராகக் காட்டுகிறது. வெண்கலக் கன்னார், செப்புப் பாத்திரம் செய்பவர், மரம் கொல் தச்சர், கொல்லர், மண்ணீட்டாளர், தட்டார், தையல் தொழிலர் எனப் பலரும் மருவூர்ப் பாக்கத்தில் கடைகள் பெற்றிருந்தனர். பல்லவர் காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டு வணிகச் சூழல் அறிய, சிலப்பதிகாரம் இணையற்ற சான்றாகும். கடையமைப்பு, விற்பனைப்பொருட்கள், வணிகமாக்கள், தெருக்களின் அமைப்பு, உணவுச்சாலைகள், சிறுபொருள் விற்பார் என வணிகத்தின் பல பரிமாணங்களைச் சிலப்பதிகாரம் சீர்படச் சொல்கிறது. இதனால் தமிழ்நாட்டின் விளைபொருட்கள் பற்றிய விரிவான அறிவு பெறல் கூடுகிறது.

இடைக்கால இலக்கியங்களான பெருங்கதையும் சிந்தாமணியும் தரும் தகவல்களைவிடக் கல்வெட்டுகள் தமிழ் வணிகர்கள் பற்றிக் கூடுதல் செய்திகளைப் பகிர்ந்துகொள்கின்றன. சித்ரமேழி பதினெண் விஷயத்தார் எனும் பேரமைப்பில் உள்ளடங்கிய வணிகக்குழுக்களைப் படம்பிடிக்கும் அருமையான கல்வெட்டு சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக் கோயிலில் இடம்பெற்றுள்ளது. ‘நான்கு திசை சமஸ்தலோகப் பதினெண் விஷயத்தாராகத்’ தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவ்வணிகப் பெருங்குழு, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்றும் அறியப்பட்டனர். ஏறு சாத்து, இறங்கு சாத்து உள்ளடக்கிய வணிகம் இவர்களுடையது. பிரான்மலைக் கல்வெட்டு இக்குழுவில் இருந்த 27 ஊர்களைச் சேர்ந்த நகரத்தாரை அடையாளப்படுத்துகிறது. மணியம்பலம், மணிக்கிராமம் உள்ளிட்ட வணிக அமைப்புகளையும் இக்கல்வெட்டில் அறியமுடிகிறது. இப்பெருமக்கள் வாழ்ந்த ஊர்கள் ‘நகரம்’ என்று அழைக்கப்பட்டன. ‘புரம்’ என்று முடியும் பெரும்பாலான ஊர்கள் நகரத்தார் குடியிருப்புகளாகவே அமைய, ஜயங்கொண்டசோழப் பெருந்தெரு, மண்டäகன் கம்பீரப் பெருந்தெரு, புதுத்தெரு என்றெல்லாமும் இவர்தம் வாழிடங்கள் சுட்டப்பெறுகின்றன.

திருக்கொடுங்குன்றமென்றும் அறியப்படும் பிரான்மலையின் அடிவாரத்தில் உள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனார் கோயில் திருக்காவணத்தில் கூடிய பதினெண் விஷயத்தார் கோயில் திருப்பணிக்காகத் தங்கள் வணிகப் பொருட்களின் சுமைக்கேற்பக் காசு அளிக்க ஒப்பினர். இந்த விற்பனைப் பொருட்கள் தலைச்சுமையாகவும் பொதியாகவும் சிறு மூட்டையாகவும் வண்டிகளிலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. மிளகு, மஞ்சள், சுக்கு, வெங்காயம், கடுகு, சீரகம், பரும்புடவை, மென்புடவை, மெழுகு, எள், பாக்கு என்பன பொதியாகவும், தலைச்சுமையாகவும், சிறு மூட்டைகளாகவும் அங்காடிகளுக்குச் செல்ல உப்பு, நெல், அரிசி, பயறு, அவரை, துவரை, ஆமணக்குக் கொட்டை, பருத்தி, நூல், இரும்பு ஆகியன வண்டிகளிலும் ஏற்றி அனுப்பப்பட்டன. பொதியாக மட்டும் கொண்டு செல்லப்பட்ட விளை பொருட்களுள் சந்தனம் குறிப்பிடத்தக்கது. தலைச்சுமையாக இறங்கிய பொருட்களில் அகில், கற்பூரத் தைலம் ஆகியன இருந்தன. சவரி முடியும் விற்பனைக்குத் தலைச்சுமையாக வந்ததைக் கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. தேன் குடத்திலிட்டு விற்கப்பட்டது. சாந்து, புழுகு, சவ்வாது, பன்னீர் ஆகிய நறுமணப் பொருட்களும் மக்களால் விரும்பி வாங்கப்பட்டுள்ளமை இக்கல்வெட்டால் வெளியாகும் உண்மையாகும்.

பொதியாக வந்த விற்பனைப் பொருள்களுக்குப் பொதிக்கு ஒரு காசு எனவும் வண்டியில் ஏற்றப்பட்டு வந்தவற்றுக்கு வண்டிக்குப் பத்து காசு, இருபது காசு எனவும் தொகை பெற்றுக் கோயிலுக்கு அளிக்கப்பட்டது. தலைச்சுமை, சிறு மூட்டை கொணர்ந்தவர்கள் அரைக்காசு அளித்துக் கோயிலைப் புரந்தனர். மாடு, யானை, குதிரை ஆகிய விலங்குகளும் இவ்வணிகக் குழுக்களால் விற்பனைக்குக் கொணரப்பட்டன.

இடைக்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றில் இணையற்ற பெருங்குழுவாய் வெளிப்படும் சித்ரமேழியார் 18 பட்டினம், 32 வளர்புரம், 64 கடிகைத் தாவளம் சேர்ந்தவர்களாய்த் தங்களைக் குறித்துக் கொள்வதுடன், தங்களுக்கென ஒரு மெய்க்கீர்த்தியும் கொண்டிருந்தனர். தங்கள் வணிகச் சாத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளக் காவலர்களையும் பெற்றிருந்தனர். ‘உன்னியது முடிக்கும் ஒண்டிறல் வீரர் பன்னிரு தரத்துப் பணி செய் மக்களாய்க்’ கொண்டாடப்படும் அவ்வீரர்கள் தொடர்பான கல்வெட்டுகளும் தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைத்துள்ளன. சிராப்பள்ளியில் சிங்களாந்தகபுரம், தாத்தையங்கார் பேட்டை ஆகிய ஊர்களில் கிடைத்துள்ள வீரதாவளக் கல்வெட்டுகள் சிறப்பானவை. வணிகர்களைக் காக்க, எதிர்த்தாருடன் போரிட்டு உயிரிழந்த வீரர்களைச் சிறப்பிக்கும் விதமாக அந்நிகழ்வு நடந்த இடங்களோ, அவற்றுக்கு அருகிலிருந்த வணிக நிலைகளோ எறிவீரப்பட்டினமாக அடையாளப்படுத்தப்பட்டன. இந்த எறிவீரப்பட்டினச் சிறப்பை வீரர்களுக்கு வழங்கிய வணிகக்குழுவினர் வளஞ்சியர்களாவர்.

17-18 ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வணிகம் பற்றி ஆனந்தரங்கர் நாட்குறிப்பும் பல சுவையான தகவல்களைத் தருகிறது. ஆனந்தரங்கரே ஒரு வணிகர் என்பதால் வந்த பொருள், சென்ற பொருள், வணிகர் நிலை, பொருட்களை உற்பத்தி செய்தவர் வாழ்க்கை நிலை என ஏராளமான செய்திகளைப் பதிவுசெய்துள்ளார். பெருங்கற்காலத்தில் தொடங்கிய தமிழர் வணிகம் சங்க காலத்தில் வீறுடன் அமைந்து, பேரரசுக் காலங்களில் செழித்துப் படர்ந்தது.. தொடக்கத்திலிருந்தே கடலோடும் அனுபவம் பெற்று, மேற்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் வணிகப் பொருட்களுடன் அலைகடல் கடந்த நந்தமிழ் மாக்கள், பல அயல்நாடுகளில் குடிமக்களாகவே மாறினர். மலாக்கா, ஜாவா, சுமத்திரா, கம்போடியா, கெடா, ஈழம், மியான்மர் என வணிகர் கால்பட்டு வளமான பூமிகள் இன்றும் தமிழ் மூச்சில் தழைத்துக் கொண்டுள்ளன.. இலக்கியம், கல்வெட்டு, அகழாய்வு, சிற்பக் காட்சிகள் இவற்றின் ஒருங்கிணைந்த பார்வையே ‘கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை கொடாது’ வாழ்ந்து செழித்த தமிழ் வணிகர்களின் கால நிரலான வாழ்வியலைக் காட்சியாக்க வல்லது.

காதலன் காதலியைப் பிரிவதற்கும் கணவன் மனைவியைப் பிரிவதற்கும் தொல்காப்பியம் முன்நிறுத்தும் தலையாய காரணங்களுள் ஒன்று பொருளீட்டல். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லைதானே. அதனால்தான், குடும்பத் தலைவர்களும் உறுப்பினர்களும் அவரவர் திறனுக்கேற்ப, தேவைக்கேற்ப, வாய்ப்பிறகேற்பப் பொருளீட்டலில் ஈடுபட்டனர். பெருங்கற்காலம் தொடங்கி இன்றுவரை இந்தப் பொருளீட்டல் நாட்டமுடன் நடைபெற்று வருகிறது. பொருள் காரணமான பிரிவு சங்க இலக்கியங்களில் பலபடப் பேசப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பேச்சுக்கள் எல்லாம், தலைவன் பிரிவையே தலைமைப்படுத்துகின்றன. பொருள் காரணமான பிரிவு அந்தக் காலத்தில் பெண்களுக்கு உரிமை உடையதாக இல்லை. பொருளீட்டல் காரணமாகத் தலைவியோ, உடன்பிறந்தாளோ குடும்பத்தை நீத்து நெடுந்தொலைவு சென்றதற்கான காட்டல்களைக் காணமுடியவில்லை.

அப்படியானால் சங்க காலத்தில் பெண்கள் பொருளீட்டவில்லையா? ஆண்களைப் போலவே சங்கப் பெண்களும் பொருளீட்டினர். ஆனால், அத்தகு ஈட்டம் உள்ளூர்ப் பணியாகவே இருந்தது. சிறு வணிகமே அவர்தம் தேவைக்குப் பொருள் தந்தது. பூ விற்றவர்கள், கள் விற்பனை செய்தவர்கள், மீனும் உப்பும் தந்து நெல் பெற்றவர்கள் எனச் சங்க இலக்கியப் பக்கங்களில் மகளிர் வணிகம் சிறக்கச் சொல்லப்பட்டுள்ளது. இதோ, ஒரு நற்றிணைக் காட்சி.

பஞ்சு போன்ற புறவிதழ் உடைய குருக்கத்தி மலர்களுடன் சிறு சண்பக மலர்களை இணைத்துக் கட்டியும் சேர்த்துப் பரப்பியும் வைத்த மூங்கில் தட்டு. புதிதாய்ப் பூத்த மலர்கள் என்பதால், வண்டுகள் ரீங்காரமிட்டுத் தேனெடுத்தன. இந்த வண்டு சூழ் மலர்த்தட்டைச் சுமந்தவளோ உழவர்குடியின் இளமகள். அவள் மலர்களின் பெயர் சொல்லி, ‘குருக்கத்தியோடு பித்திகை விரவுமலர் கொள்ளீரோ’ என்று பூவிற்கும் பாவையாய் முல்லை நிலத்தில் வீதியுலா வருகிறாள்.

இதே போல் ஒரு காட்சி பாலைநிலத்திலும். அப்பெண் நொதுமலாட்டியாம். அவள் கையிலும் வட்டில் ஆனால், மலர்கள் வேறுபட்டுள்ளன. இங்குக் குருக்கத்திக்கும் சண்பகத்திற்கும் மாறாக, வண்டுகள் மொய்க்கும் புத்தம் புதுப் பாதிரிகள். தொழில் வல்ல ஓவியர் அரக்குக் கூட்டிச் செய்த கைத்தூரிகைகள் எனப் பூத்திருக்கும் இப்பாதிரிகளைச் சுமந்தபடி தெரு தோறும் கூவிப் பூ விற்கிறாளாம் அந்தப் பாவை. இந்தப் பூப்பெண்களின் விலை கூறலும் அவர்தம் தட்டுகளில் தங்கியிருக்கும் மலர்களின் மணமும் தலைவரைப் பிரிந்து வாடியிருக்கும் காரிகையரை மேலும் வாட்டுவதாக நற்றிணை வருந்துகிறது. அதன் வருத்தம் ஒருபுறம் இருக்கட்டும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பூவிற்றல் காட்சி திணை வேறுபாடற்ற இன்றைய ஊர்களிலும் தொடர்வதுதான் சிறப்பு. சண்பகமும் பாதிரியும் இல்லையே தவிர, தாங்கிய தட்டும், கூவிய பெண்ணும் நிலையில் மாறவே இல்லை.

பூவிற்றாற் போலவே கள் விற்பனையும் மகளிர் கொண்டிருந்தனர். மணிமேகலையின் ‘கள்நொடையாட்டியும்’ சிலப்பதிகாரத்தின், ‘கள் விலையாட்டியும்’ காணத்தக்கவர். மாதவி, சுதமதி துணையுடன் மணிமேகலை காஞ்சிமாநகர் புகுந்த வரலாறு பேசுமிடத்து, ‘வியன்மலி மறுகு’ காட்சியாகிறது. பிட்டும் அப்பமும் விற்பாரிடை, கள் விற்கும் வலைச்சியரும் உள்ளனர். சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியோ, கள் விற்கும் பெண்ணெhருவர் பழங்கடன் தராமையால், மறவன் ஒருவனுக்குக் கள் தர மறுக்கும் காட்சி காட்டுகிறது. கள் விற்ற பெண்களிடம் கடன் வைக்கும் மறவர்கள் காலத்தின் தொடர்ச்சியாக இன்றும் நீள, திரைப்படங்கள் கூடத் தொடர்பிழைகள் விட்டுவிடக்கூடாது என்று நினைத்தோ என்னவோ தொடர்ந்து கள் விற்பனையாளர்களாய்ப் பெண்களைக் காட்டியே பூரித்து வருகின்றன.

பெண்களை மீன் விற்பனையாளர்களாகவும் பார்க்கமுடிகிறது. அகப் பாடல் ஒன்று, ‘நாண் கொள் நுண்கோல்’ கொண்டு மீன்பிடித்த பாண் மகளைக் காட்ட, மற்றொரு பாடல் அந்தப் பசிய மீனை விற்று வெண்ணெல் பெற்ற காட்சியை விரிக்கிறது. மீன் உணங்கலும் விற்பனையாயிற்று. மீன் சீவுதலும் மீனை உலர்த்தி உணங்கலாக்களும் சங்கப் பாடல்களில் பரக்கக் காணக்கிடைக்கும் படப்பிடிப்புகளாம். முல்லை நிலப் பெண்களும் விற்பனையாளர் களாக மிளிர்ந்ததைக் காணமுடிகிறது. பத்துப்பாட்டின் பெரும்பாணாற்றுப்படை, தாம் வளர்த்த பசுக்களின் பாலைக் கறந்து மோராக்கி விற்று, அவ்விலைக்கு நெல் பெற்று உணவாக்கி உறவுடன் கூடியுண்ட ஆயர் மகளைச் சுட்டுகிறது. அப்பெண் நெய்யும் திரட்டி விற்றாராம். அந்த நெய்க்கு விலையாகப் பசும்பொன் தந்த குறிஞ்சி நிலத்தாரிடம், ‘பொன் வேண்டாம், நீங்கள் கொள்ளையில் கொண்ட பசுத்திரளில் நல்ல பசு, பால் வழங்கும் எருமை, எருமைக் கன்று கொடுத்து இந்த நெய் கொள்க’ என்றாராம் அந்த ஆயர் பெண். விற்பனை மேலாண்மை, விற்பனை நுட்பம் என்றெல்லாம் தனித் தனி பாடவகுப்புகள் நடத்தும் இந்தக் காலத்தில்கூட இப்படி ஒரு விற்பனை நுணுக்கம் காணமுடியாது. நெய்க்கு விலையாய்ப் பொன்னும் பால் எருமைகளும். இந்த பண்ட ஒப்புமை அந்த முல்லை நிலத்தாளின் நெய்ச் சிறப்புக் காட்டுவதாக ஏன் கொள்ளக்கூடாது? உயர்ந்த பொருளுக்கு ஓங்கிய விலைதானே இருக்கமுடியும்!

இந்தப் பெண் விற்பனையாளர்கள் வீதியில் வந்தால், எங்கே இவர்தம் அழகில் மயங்கித் தம்மை நீங்கி அவர்தம் பின்னால் கணவர் சென்றுவிடுவாரோ என்று அஞ்சிய இல்லத்தரசிகள் ஆடவர் கூட்டத்தை இல்லத்திற்குள் இழுத்துச் சிறைப்படுத்திய பிறகே, கொள்ளும் பொருளுக்கு உள்ளும் விலை பேச புறத்தே வந்ததாகவும் ஒரு பாடல் படம்பிடிக்கிறது. ஆபத்து எங்கேதான் இல்லை. அதனால்தானோ என்னவோ கல்வெட்டுகளில் பெண் விற்பனையாளர்களைக் காணமுடியவில்லை. தம்மைத் தாமே விற்றுக் கொண்டவர்களாகவும் கூழுக்கு அடிமையானவர்களாகவும் மட்டுமே கோயில் கல்வெட்டுகளில் பெண்கள் காட்சிதருகின்றனர். பெருவணிக நிலையிலும் சிறுவணிக நிலையிலும் தெரு விற்பனையாளர்களாகவும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் பெண்களைக் காட்சிப்படுத்தவில்லை. வியாபாரி, வணிக சக்கரவர்த்தி என்றெல்லாம் பெருமையாகவும் குதிரைச் செட்டி, மடிகைச் செட்டி, சீலைச் செட்டி என்றெல்லாம் செய்திட்ட வணிகத்தாலும் ஆடவரைக் குறிக்கும் கல்வெட்டுகள் எந்தப் பொருள் சார்ந்தும் பெண் விற்பனையாளர்களைப் பற்றிய சுட்டல்களை வழங்கவில்லை.

வணிகத்தை விடு, அது மட்டுமா வாழ்க்கை! பார்த்தாயா, வாழ்க்கை என்றதும் அதை உள்ளும் வெளியுமாய் இரண்டாய்ப் பிரித்த தமிழ் வளமைதான் கண்முன் நிற்கிறது. உள், அகமாகவும் வெளி, புறமாகவும் மலர்ந்து இலங்கியங்கள் கண்டன. அகம் எனப்படும் காதல் வாழ்வின் சுடரொளியை உனக்குத் தெரியுமா? சந்தித்திருக்கிறாயா? சந்தித்திருந்தால் கலந்து பேசுவோம். இல்லை என்றால் அடுத்த திங்கள் இங்குப் பேசுவோம்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

Leave a Reply